November 30, 2021

குஜராத்தில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.!.- வீடியோக்கள்!

குஜராத் மாநிலத்தில் கெவாடியா-வின் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் கீழ் ஆரோக்கிய வனம், ஆரோக்கிய மையம், ஒற்றுமை வணிக வளாகம் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா ஆகியவற்றை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.

ஆரோக்கியா வனம் மற்றும் ஆரோக்கிய ஆரோக்கியா வனம் திட்டத்தில், 17 ஏக்கர் பரப்பளவில், 380 வெவ்வேறு வகையான 5 லட்சம் தாவரங்கள் இடம் பெற்றுள்ளன. ஆரோக்கிய மையத்தில், பாரம்பரிய சிகிச்சை வசதிகள் உள்ளன. இங்குள்ள சாந்திகிரி உடல் நல மையத்தில் ஆயுர் வேதம், சித்தா, யோகா மற்றும் பஞ்சகர்மா அடிப்படையிலான சிகிச்சைகளை அளிக்கும்.

அதன்பின்னர் ஏக்தா மால் எனப்படும் ஒற்றுமை வணிக வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 35,000 சதுரஅடி பரப்பளவில் விரிந்துள்ள இந்த வளாகத்தில், நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. “வேற்றுமையில் ஒற்றுமை” என்னும் அடையாளச் சின்னத்தை மையப்படுத்தி இந்த வணிக வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தையும் குறிக்கும் 20 அரங்குகள் இந்த வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து, குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா திறந்துவைக்கப்பட்டது. பூங்காவைச் சுற்றி ஊட்டச்சத்து ரயில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. “அன்னபூர்னா”, “போஷன் புரான்”, “ஸ்வஸ்தா பாரதம்” போன்ற பெயர்களின் மூலம் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ஊட்டச்சத்து பயன்பாட்டை குழந்தைகளுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் 5D மெய்நிகர் அரங்கு மற்றும் பல்வேறு மெய்நிகர் விளையாட்டு அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. இந்த பூங்காவை திறந்து வைத்த பிரதமர் மோடி, ஊட்டச்சத்து ரயிலில் பயணம் மேற் கொண்டார்.

இதை அடுத்து உயிரியல், பூங்காவை கண்டுகளித்த பிரதமர் மோடி, அங்கு பறவைகள் கூண்டு இருக்கும் பகுதிக்கு சென்றார். அப்போது அவரது கைகளின் மேல் வைக்கப்பட்ட இரண்டு கிளிகளுடன் மோடி விளையாடி மகிழ்ந்தார்.