நான் இங்கு பிரதமராக வரவில்லை! – ஜம்மு ராணுவ முகாமில் பிரதமர் மோடி!

நான் இங்கு பிரதமராக வரவில்லை! – ஜம்மு  ராணுவ முகாமில் பிரதமர் மோடி!

தீபாவளியை ஒட்டி வழக்கம் போல் இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி நவ்ஷெரா முன்களப் பகுதியில் ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினார். கடந்த 2014ல் சியாச்சினிலும், 2015ல் பஞ்சாபிலும், 2016ல் ஹிமாச்சல பிரதேசத்தில் சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடினார். 2017ல் காஷ்மீரின் வடக்கு பகுதியில் உள்ள குரேஸ் பகுதியிலும், 2018ம் ஆண்டில் உத்தரகண்டிலும், 2019ல் காஷ்மீர் மாநிலம் ரஜோரியிலும், மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கடந்த ஆண்டு (2020) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள லாங்கிவாலா முகாமில் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்று ஜம்மு தீபாவளி கொண்டாட்டத்தின் போது ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “ஒவ்வொரு தீபாவளியின் போதும் நமது எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களுடன் நான் கொண்டாடி வருகிறேன். நான் இங்கு பிரதமராக வரவில்லை, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வந்துள்ளேன். ஒவ்வொரு தீபாவளியையும் நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களுடன் கொண்டாடுகிறேன். இன்று, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்த்துகளையும் ஆசீர்வாதத்தையும் இங்குள்ள நமது வீரர்களுக்காக என்னுடன் கொண்டு வந்துள்ளேன். நவ்ஷேரா நமது புனிதமான பகுதி. அனைத்து கடினமான நேரத்திலும் நமது பாதுகாப்பு படையினர் நாட்டுக்காக பாடுபட்டு வருகின்றனர்.

நமது வீரர்கள் பாரத மாதாவின் அணிகலன் ஆவர். உங்களால் தான் நமது நாட்டு மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர். பண்டிகை காலங்களில் மகிழ்ச்சி நிலவுகிறது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது இப்படைப்பிரிவு ஆற்றிய பங்கை எண்ணி ஒவ்வொரு இந்தியரும் பெருமையடைகின்றனர்.

இதற்கு முன்னதாக, பாதுகாப்பு படையினருக்கான ஆயுதங்களை உற்பத்தி செய்ய பல ஆண்டுகள் தேவைப்பட்டது. பாதுகாப்புத்துறையில் சுயசார்புடன் இருப்பதே பழைய முறைகளில் இருந்து மாறுவதற்கான ஒரே வழியாகும்’ என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

Related Posts

error: Content is protected !!