கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறை!- மோடி பேச்சு!

கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறை!- மோடி பேச்சு!

ஆரோக்கியமான பூமியை நாம் உருவாக்க வேண்டும் என்ற மனிதர்களின் தேடலை யோகா தான் நிறைவேற்றும். மனிதநேயத்தை ஆழமாகப் பிணைத்து, ஒற்றுமையின் சக்தியாகவும் யோகா உருவெடுத்திருக்கிறது. யோகா யாரையும் வேறுபடுத்தாது. யார் வேண்டுமானாலும் யோகாவைப் பயிலலாம் என்று சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21), பிரதமர் மோடி பேசினார்.

நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. யோகா தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களிடம் அவர் உரையாற்றினார். அவர் பேசியது இதுதான்”

6-வது சர்வதேச யோகா தினத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக இது அமைந்துள்ளது. இந்த நாள் ஒற்றுமைக்கும், சர்வதேச சகோதரத்துவத்துக்கும் உகந்த நாள். இனம், வண்ணம், பாலினம், நம்பிக்கை, தேசம் ஆகியவற்றால் யாரையும் வேறுபடுத்தாமல் யோகா ஒற்றுமையின் சக்தியாக உருவெடுத்து இருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் அச்சத்தால் பீடிக்கப் பட்டிருக்கும் போது, யோகாவின் அவசியத்தை உலகம் உணர்கிறது. நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருந்தால்தான் எந்த நோயையும் எதிர்த்துப் போரிட்டுத் தோற்கடிக்க முடியும். நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த யோகாவில் பல்வேறு விதமான நுட்பங்கள் இருக்கின்றன. பல்வேறுவகையான ஆசனங்கள் இருக்கின்றன.

கொரோனா வைரஸ் மனிதர்களின் நுரையீரல் சுவாசப் பகுதியைத்தான் பாதிக்கிறது. கொரோனாவிலிருந்து மனிதர்கள் தற்காத்துக்கொள்ள நுரையீரலையும், சுவாசப்பகுதியையும் பலப்படுத்தும் பிராணயாம மூச்சுப் பயிற்சியைப் பழக வேண்டும். இது சுவாசப் பகுதியைப் பலப்படுத்தும்.

ஆகவே வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் யோகா செய்யுங்கள். இந்த யோகா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஏராளமானோர் யோகா கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டுள்ளார்கள். கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறையாக இருக்கிறது.

உங்களது அன்றாட வாழ்வில் யோகாவை ஒரு அங்கமாக பழகுங்கள். இது, உடல் வலிமையுடன் மன வலிமையையும் மேம்படுத்துகிறது. யோகாவிற்கு மதம், மொழி, நாடு என்ற எந்த பேதமும் இல்லை. யோகாவின் பயன்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உலகம் தற்போது உணர்ந்துள்ளது. பகவத் கீதையில் கூட யோகா குறித்து கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள்.” என்று மோடி பேசினார்.

Related Posts

error: Content is protected !!