December 4, 2021

பெண்கள்தான் அதிக அளவில் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர்1- மோடி கவலை

பேரிடர் கால இழப்புகளை குறைப்பது தொடர்பான கருத்தரங்கு டெல்லியில் வியாழக்கிழமை தொடங்கியது. ஆசிய அளவில் நடைபெற்று வரும் இந்தக் கருத்தரங்கில் 61 நாடுகளைச் சேர்ந்த 1,100 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

modi nov 4

மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, விழா சிறப்புரையாற்றிய போது, “கடந்த 20 ஆண்டுகளில் உலக நாடுகள் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, ஆசிய – பசிபிக் பிராந்தியம் வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பரிணமித்துள்ளது. இந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள பல நாடுகள் பொருளாதார ரீதியாகவும், உள்கட்டமைப்பு ரீதியாகவும் சிறப்பானதொரு வளர்ச்சியை எட்டிப் பிடித்துள்ளன. ஆசிய – பசிபிக் நாடுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பல்வேறு துறைகளில் இந்தப் பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளே சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளன.

அதேநேரத்தில், இத்தகைய அபரிமிதமான வளர்ச்சியானது வெகுசுலபமாகக் கிடைக்கவில்லை. பல்வேறு போராட்டங்களையும், சவால்களையும் எதிர்கொண்ட பிறகுதான் இத்தகைய சாதனை சாத்தியமாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல்வேறு இயற்கைச் சீற்றங்களில் சிக்கி 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் உயிரிழந்தனர். பேரிடர்ச் சூழல்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட 10 நாடுகளில் 7 நாடுகள் இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவைதான். கடந்த 2001-ஆம் ஆண்டில், மிக மோசமான நிலநடுக்கத்தை குஜராத் மாநிலம் எதிர்கொண்டது. திடீரென நேர்ந்த இந்த பேரழிவால் எண்ணற்ற மக்கள் பலியாகினர். நிலநடுக்கத்துக்குப் பிறகு மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற நான் மக்களோடு மக்களாக பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது நினைவுக்கு வருகிறது.

அதேபோன்று இந்தியா மட்டுமன்றி பல்வேறு நாடுகளைப் புரட்டிப் போட்ட சுனாமி எனும் ஆழிப் பேரலையும் மக்கள் மனதில் நீங்காத வடுவாக உள்ளது. தற்போது இந்தியக் கடற்பகுதி முழுவதிலும் சுனாமி எச்சரிக்கை சாதனங்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. ஆஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் கடல்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான தகவல்களையும் இந்தியாவில் இருந்தே பெற முடியும்.

அந்த அளவுக்கு எதிர்பாராத பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்பத் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதைத்தவிர புயல் முன்னெச்சரிக்கை தொழில்நுட்பங்களும் இந்தியாவில் அதிக அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையையும், தற்போது உள்ள நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இதில் நாம் அடைந்துள்ள வளர்ச்சியைக் கண்கூடாகக் காண முடியும்.

இத்தகைய தொழில்நுட்ப உதவியால் தேவையற்ற உயிரிழப்புகளும், பொருள் சேதங்களும் குறைக்கப்படுகின்றன. வானிலையை ஆய்வு செய்வதற்காக பல்வேறு செயற்கைக்கோள்களை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. அதன் வாயிலாக கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எந்த ஒரு நாட்டுக்கும் பேரிடர் மேலாண்மை உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது.

வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களையும், எதிரிகளையும் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்த முடியும். ஆனால், பேரிடர்ச் சூழல்களை எவரால் கட்டுப்படுத்த இயலும்? எனவே, அத்தகைய காலங்களில் இழப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.குறிப்பாக பெண்கள்தான் அதிக அளவில் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை அதிலிருந்து மீட்பதற்காக பயிற்சியளிக்கப்பட்ட பெண்களை பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும்” என்றார் மோடி.