பிலிப்பைன்ஸ் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமர் மோடி!

பிலிப்பைன்ஸ் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் பிரதமர் மோடி!

உலகில், உணவுப்பொருள் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்குடன், ஐ.ஆர்.ஆர்.ஐ., பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. சிறப்பான நெல் வகைகளை, அந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த நிறுவனத்தில், இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பலர் பணியாற்றி வருகின்றனர் என்பதெல்லாம் தெரிந்த தகவலாக இருக்கலாம். தற்போது ஆசியன் மாநாட்டில் கலந்து கொள்ள பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ஐ.ஆர்.ஆர்.ஐ) சென்று பார்வையிட்டார். அங்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடிய மோடி இந்தியாவின் இரண்டு நெல் வகையை ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கினார் என்பதுதான் இன்றைய செய்தி.

பிலிப்பைன்ஸ் தலைநகரம் மனிலாவில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாஸ் பனோஸ் பகுதியில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI) செயல்பட்டு வருகிறது. முன்னரே குறிப்பிட்டது போல் உலகின் உணவு பற்றாக்குறையை தீர்க்க புதிய வகை அரிசி வகைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம் 1960களில் ஏற்பட்ட பசுமை புரட்சியில் முக்கிய பங்கு வகித்தது. உலகின் பல முன்னனி ஆராய்ச்சியாளர்கள் பணிபுரியும் இந்த மையத்தில் பல இந்திய விஞ்ஞானிகளும் உள்ளனர் என்பதுடன் இந்த நிறுவனம் உலகின் 17 நாடுகளில் இயங்குகிறது. தற்போது பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி நகரிலும் இதன் பிராந்திய மையம் ஒன்று துவங்கப்படவுள்ளது. இந்த மையத்தில், அதிக விளைச்சல் தரும் அரிசி வகைகளை உருவாக்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் ஆசியன் மாநாட்டில் கலந்துகொள்ள பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டார். அங்கு பிரதமர் மோடி பெயரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆராய்ச்சிக் கூடத்தை மோடி திறந்துவைத்தார். மேலும் அங்கு நடைபெறும் ஆராய்ச்சிக்கு நம் நாட்டின் பங்களிப்பாக இந்தியாவின் இரண்டு நெல் வகைகளையும் மோடி வழங்கினார். பின்பு அங்குள்ள விஞ்ஞானிகளிடம் ஆராய்ச்சி பணிகள் குறித்து மோடி கலந்துரையாடினார். பிரதமர் மோடியிடம் வெள்ளத்தை தாங்கும் நெற்பயிர்கள் பற்றி விஞ்ஞானி கள் எடுத்துரைத்தனர். இந்த வகை நெற்பயிர்கள் 14 முதல் 18 நாட்கள் நீரில் மூழ்கி இருந்தாலும் அழுகி போகாது. எனவே இந்த வகை நெற்பயிற்கள் மூலம் ஹெக்டருக்கு கூடுதலாக 1 முதல் 3 டன் அரிசியை விளைவிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.தென் இந்தியாவை போலவே, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசியநாடுகளிலும் அரிசி முக்கிய உணவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தன் பயணம் குறித்து மோடி கூறுகையில் ‘‘சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்திற்கான இந்த பயணம் எனக்கு மிக சிறந்த அனுபவமாக இருந்தது. நெல் சாகுபடியை அதிகரித்து வறுமையை ஒழிக்க இங்குள்ள விஞ்ஞானிகளின் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுடைய இந்த அரும்பணி ஆசியா மற்றும் ஆப்பரிக்கா நாடுகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு சிறப்பான பலன்களை அளித்துள்ளது’’ என்று மோடி தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் இது பற்றி கூறும்போது, “வறட்சி, வெள்ளம் மற்றும் உப்பு தன்மை ஆகியவற்றை தாங்கும் திறன் கொண்ட அரிசி வகைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த, இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐ.சி.ஏ.ஆர்), சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம், வெற்றிகரமாக ஒத்துழைத்துள்ளது’’ என தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!