August 20, 2022

காடென்ன? மலையென்ன? கடலென்ன? அனைத்தையும் யாம் அறிவோம் – மோடி பெருமிதம்!

‘டிஸ்கவரி’ சேனலில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபல மாகும். காடு, மலை, பாலைவனம் போன்ற இடங்களில் பயணம் மேற்கொண்டு ஆபத்தான சூழ்நிலைகளில் பிரச்சினைகளை சமாளித்து எப்படி உயிர் வாழ்வது என்பதையும் , பலத் தரப்பட்ட உயிரினக்களின் வாழ்க்கைப் போக்கை அடிப்படையாக கொண்டது. இதில் சாகச பிரியரான பியர் கிரில்ஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு நெருக்கடிகளை சமாளித்து உயிர் வாழ்வது எப்படி? என்பதை செய்து காட்டுவது மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு உள்ளது. அதுபோக பியர் கிரில்சுக்கும் ஏராள மான ரசிகர்கள் உள்ளனர். ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. உலக அளவில் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் ஏற்கனவே வழங்கி இருக்கிறார். அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவுடன் இணைந்தும் பியர் கிரில்ஸ் இந்த நிகழ்ச்சியை வழங்கி உள்ளார்.

அந்த வகையில் பியர் கிரில்சும், பிரதமர் மோடியும் பங்கு கொள்ளும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ சிறப்பு நிகழ்ச்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஜிம் கோர்பட் தேசிய பூங்காவில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நிகழ்ச்சி டிஸ்கவரி மற்றும் அதன் குழும சேனல்களில் வருகிற ஆகஸ்டு 12-ந் தேதி ஒளிபரப்பாகிறது. உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளி ஆகிய மொழிகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், காடுகள், மலைகள் என்று பல ஆண்டுகள் நான் இயற்கை சூழ்நிலையில் வாழ்ந்து இருக்கிறேன். அது என் வாழ்க்கையில் தாக்கத் தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், அரசியலுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலையில் அப்படிப்பட்ட வாழ்க்கையை முன்னிலைப்படுத்துவது போன்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் நான் பங்கு கொள்ள வேண்டும் என்றதும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.

என்னை பொறுத்தமட்டில் இந்த நிகழ்ச்சியை, இந்தியாவின் வளம் செறிந்த சுற்றுச்சூழல் பெருமை யையும், சுற்றுச்சூழலை பாதுகாப்பது மற்றும் இயற்கையோடு சேர்ந்து வாழ வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன். வனப்பகுதியில் மீண்டும் ஒரு முறை நேரத்தை செலவிட்டது, அதுவும் இயற்கையை அறிந்துகொள்வதில் சளைக்காத ஊக்கமும், தேடலில் ஆர்வமும் கொண்ட பியர் கிரில்சுடன் அங்கு இருந்தது எனக்கு சிறந்த அனுபவமாக அமைந்தது எனக் கூறியுள்ளார்.

பியர் கிரில்ஸ் கூறுகையில், பிரதமர் மோடியுடன் இந்திய வனப்பகுதியில் சாகச பயணம் மேற்கொண்டதை தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்றும், அதுகுறித்து பெருமைகொள்வதாகவும் கூறி இருக்கிறார்.

“பிரபலமான ஒரு உலக தலைவருடன் வனப்பகுதியில் நேரத்தை செலவிட்டதை உண்மையிலேயே எனக்கு கிடைத்த கவுரவமாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். ஒரு மிகப்பெரிய தேசத்தை வழிநடத்தி செல்லும் தலைவருடன் நேரத்தை செலவிட்டதும், அவரை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு மிகுந்த உற்சாகம் அளிப்பதாக அமைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடிசினல் ரிப்போர்ட்:

இதனிடையே கடந்த இருபதாண்டுகளில் இந்திய இராணுவத்தின் மீது காஷ்மீரில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என நாடே பரபரத்துக்கொண்டிருந்த நேரத்தில், டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் இருந்திருக்கிறார் பிரதமர். புல்வாமா தாக்குதல் நடத்தபட்ட சமயத்தில் பிரதமர் எங்கே இருந்தார் என எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் கேள்வி கேட்ட நிலையில், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பிரதமர் ராம்நகர் அருகே புலிகள் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி ஒன்றில் இருந்தார் என தெரிவித்தார். ஜிம் கார்பெட் சரணாலய நிர்வாகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை. ரவி சங்கர் குறிப்பிட்ட ராம்நகர் கார்பெட் சரணாலய பகுதியில்தான் அமைந்துள்ளது.

பிப்ரவரி 14 தேதி வாக்கில், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் இந்தியாவில் முக்கியமான நபருடன் சூட்டிங்கில் இருப்பதாக தனது ட்விட்டர் பகிர்ந்துகொண்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவுகள் சில நாட்களில் அழிக்கப்பட்டன. இந்த விவரத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது