October 19, 2021

எம்.ஜி. ஆர்- ராய நமஹ.. – சென்னை பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேச்சு முழு விபரம்!

நாடெங்கும் மிக விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியின் முதல் பிரச்சாரக் கூட்டம், சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு பாரத ரத்னா எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்றும் இனி தமிழகத்துக்கு வருகிற மற்றும் தமிழகத்தில் இருந்து புறப்படுகிற விமானங்களில் தமிழில் பயண அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம் பாக்கத்தில் நடைபெற்ற பாஜக-அதிமுக கூட்டணியில் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடந்தது.

இக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியது இதுதான் :

காசி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,யாகிய நான் காஞ்சி மாநகருக்கு வந்திருக்கிறேன். நம்முடைய உறவு என்பது வலிமை மிக்கது. எவராலும் பிரிக்க முடியாதது. தமிழக மக்கள் கலாசாரமும், பண்பாடும் மிக்கவர்கள். தமிழ் மொழி வரலாற்று சிறப்பு மிக்க மொழி. இப்போது மக்களால் பேசப்படுகிற செம்மொழிகளிலேயே முதன்மையான மொழி தமிழ் மொழி தான். மத்திய அரசு தமிழத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டு வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கனவு கண்ட பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். இப்போது நான் எண்ணுார் சமையல் எரிவாயு திட்டம், பல்வேறு நெடுஞ்சாலைகள் திட்டம், ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு தான் வந்திருக்கிறேன். குறிப்பாக விக்ரவாண்டி முதல் தஞ்சை வரை செல்கின்ற சாலை என்பது சென்னையையும் டெல்டா மாவட்டத்தையும் இணைக்கின்ற சிறந்த திட்டமாகும். கும்பகோணம் மகாமகத்திற்கு செல்லுகின்ற மக்களுக்கு இது பேருதவியாக அமையும்.

மேலும், சேத்தியா தோப்பு, சோழபுரம் இணைப்பு சாலை திட்டத்தையும் தொடங்கி வைத்திருக்கிறேன். இந்த சாலை மூலம் கடலுாரிலிருந்து தஞ்சைக்கு அணைக்கரை வழியாக குறைந்த நேரத்தில் செல்லலாம். இது தவிர, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், ஆகிய பகுதிகளில் சுமார் 300 கி.மீ., துாரத்திற்கான ரயில் தடம் மின் மயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த வழியாக செல்லும் ரயில்கள் விரைவாக செல்லும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த மண்ணின் மைந்தரான மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஒரு மிகச்சிறந்த தலைவர். பாரத ரத்னா எம்.ஜி.ஆர்., தமிழக மக்களின் மரியாதைக்குரிய தலைவராக திகழ்ந்தவர். அவர் திரையுலகில் மட்டுமல்ல, மக்களின் மனதிலும் கோலோச்சியவர். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்படுவதற்காக திறமையாக பணியாற்றியவர். அவர் கொண்டு வந்த சமூக நலத்திட்டங்கள் ஏழ்மை ஒழிவதற்கு வழி வகுத்தது. அத்தகைய சிறப்பு மிக்க எம்.ஜி.ஆர்., பெயர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சூட்டப்படும். இனிமேல் அந்த ரயில் நிலையம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., பெயரால் அழைக்கப்படும்.

தமிழகத்திலிருந்து புறப்படும் விமானங்கள் மற்றும் இங்கு வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் விமானப் பயணம் தொடர்பான அறிவிப்புகளை தமிழ் மொழியில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் இலங்கைக்கு சென்றிருந்தேன். அங்கே எம்.ஜி.ஆர்., பிறந்த இடத்தையும் பார்வையிட்டேன். அங்கு வாழ்கின்ற இந்திய வம்சாவழி தமிழர்களுக்காக 14 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதில், 1000 வீடுகளை அந்த மக்களுக்கு வழங்கினோம். மேலும், 3 ஆயிரம் வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. விரைவில் மொத்த வீடுகளும் கட்டப்பட்டு அந்த மக்களுக்கு வழங்கப்படும். இந்தியாவிலிருந்து யாழ்பாணத்திற்கு சென்ற ஒரே இந்திய பிரதமர் நான்தான். அங்கு சென்று அங்குள்ள தமிழ் சகோதர, சகோதரிகளை சந்தித்து அவர்களோடு மனம் விட்டு பேசினேன். நம்முடைய குறிக்கோள் என்பது அனைவரும் சேர்ந்து அனைவரின் மேம்பாட்டிற்காக பாடுபட வேண்டும் என்பது தான். மானுடப்பிணைப்பு என்பது மிகவும் உயர்வானது. அதனால் தான் உலகம் எங்கும் வாழ்கிற இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் பாதிக்கப்படும் பொழுது மத்திய அரசு ஓடோடி போய் அவர்களுக்கு உதவி செய்கிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் தமிழர்கள் சிக்கி தவித்து பாதிப்புக்கு ஆளாகும் நிலை வரும்போதெல்லாம் அவர்களை பத்திரமாக இந்தியாவுக்கு கொண்டு வரும் பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. வெளிநாட்டில் சிக்கி தவித்த பாதிரியார் ஒருவரை 8 மாதங்கள் போராடி மீட்டோம். அதே போல விமானி அபிநந்தன் 2 நாட்களில் எப்படி மீட்கப்பட்டார் என்ற விவரம் உலகிற்கே தெரியும். இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டிருந்த 1900 தமிழக மீனவர்களை இந்த அரசு மீட்டிருக்கிறது. துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை கூட இலங்கை அரசிடம் பேசி மீட்டுக்கொண்டு வந்துள்ளோம்.

இப்போது, சவுதி அரசிடம் பேசி அங்கே சிறைப்பட்டிருக்கும் 850 பேரை மீட்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். காயப்பட்டு கிடக்கும் மக்களுக்கு மருந்து போடும் பணியை இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது.காஞ்சி நகரம் என்பது நெசவாளர் பெருமக்கள் அதிகமுள்ள பகுதி. ஜவுளித் துறையை முன்னேற்று வதற்காக மத்திய அரசு 7 ஆயிரம் கோடி ரூபாயை மானியமாக வழங்கியுள்ளது. விசைத்தறியை மேம்படுத்துவ தற்கும் மத்திய அரசு உதவி செய்து வருகிறது. நாடு முழுவதும் 2 லட்சம் விசைத்தறிகளை மேம்படுத்தியிருக் கிறோம். அதிலே 1 லட்சத்து 2400 விசைத்தறிகள் தமிழகத்தில் உள்ளன.

தமிழகமே சுற்றுலாவுக்கு வாய்ப்புகள் நிறைந்த பகுதி. மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. 2013– 2017ம் ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 42 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதே போல அந்நிய செலாவணியும் ஒன்றரை மடங்கு அதிகரித்திருக்கிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக 64 நாடுகளில் இ– சுற்றுலா வசதி செய்யப்பட்டிருக்கிறது. சுற்றுலா துறை மேம்படுத்தப்பட்டால் பொருளாதாரம் அதிகரிக்கும். வழிகாட்டிகளின் நிலை உயரும். பல்வேறு கைவிணை பொருட்களின் வியாபாரம் பெருகும். ஓட்டல்கள், டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளிலும் விற்பனை அதிகரிக்கும். வருமானம் பெருகும்.

நாட்டின் பாதுகாப்பு குறித்த திட்டமிடல்தான் மத்திய அரசின் முக்கிய கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யும் இரண்டு மையங்களை அமைக்கவிருக்கிறோம். அதில் ஒன்று தமிழகத்தில் அமைய இருக்கிறது. இதன் மூலம் இளைஞர்களின் வேலை வாய்பபு அதிகரிக்கும். நாட்டின் பாதுகாப்பு குறித்து எதிர்கட்சிகள் எப்போதுமே அலட்சியம் காட்டி வருகிறார்கள். சுயநலத்திற்காக வலிமையான நாடு மற்றும் வலிமையான ராணுவம் ஏற்படுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை. இந்தியா பண்முக தன்மை கொண்ட ஒரு மிகப்பெரிய நாடு. மாநிலங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. மாநில அரசு களின் உரிமைகளை அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் நிச்சயம் நாடு முன்னேறும். டில்லியில் இருந்து தலைமை பீடம் முடிவெடுப்பதை விட மக்கள் எடுக்கும் முடிவு தான் சரியானதாக இருக்கும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொள்கையாகும். அந்த அளவில் மாநிலங்களின் விருப்பங்களை, கோரிக்கைகளை, செயல்படுத்தும் அரசாக மத்திய அரசு உள்ளது. ஆனால், கடந்த காங்கிரஸ் அரசாங்கம் மாநிலங்களின் நலனில் ஒரு போதும் அக்கறை செலுத்தியதில்லை. அவர்களின் தேவைகளை, விருப்பங்களை பூர்த்தி செய்யவில்லை. அதற்கு காரணம் ஒரு குடும்ப மையத்தின் மூலமாகவே எந்த முடிவையும் எடுத்து செயல்படுத்துகிறார்கள். காங்கிரசை ஆதரிக்கும் முடிவை எடுப்பவர்களும் ஏ.சி.அறையில் அமர்ந்து கொண்டு தான் முடிவெடுக்கிறார்கள்.

மாநில அளவில் உள்ள வலிமை மிக்க தலைவர்களை காங்கிரஸ் எப்போதுமே அவமானப்படுத்தி வந்துள்ளது. தமிழகத்தின் மிகப்பெரும் தலைவராக இருந்த காமராஜ் எப்படி அவமானப்படுத்தப்பட்டார் என்பது உங்களுக்கே தெரியும். ஜனநாயகத்திற்காக மக்களின் நன்மைக்காக குரல் கொடுத்ததாலும், டில்லியின் குடும்ப சர்வாதிகார ஆட்சியை எதிர்த்தால் மட்டுமே காமராஜ் மீண்டும், மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அரசாங்கங்களை காங்., டிஸ்மிஸ் செய்துள்ளது. நாட்டில் நெருக்கடி நிலையை அமல் படுத்தி ஆட்சி செய்தவர்கள் தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மாநில ஆட்சிகளை அரசியல் சட்ட பிரிவு 356ஐ பயன்படுத்தி அடிக்கடி டிஸ்மிஸ் செய்துள்ளனர். சர்வாதிகார டில்லி தலைமைக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே அந்த மாநில அரசு டிஸ்மிஸ் செய்யப்படும். இப்படி காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நுாறு முறைக்கு மேல் இந்த சட்ட பிரிவை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதில் 50 சதவீதம் இந்திரா பிரதமராக இருந்த போது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்று காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற திமுக ஆட்சியை கூட அவர்கள் டிஸ்மிஸ் செய்திருக்கிறார்கள். அரசியல் கொள்கையை விட சந்தர்ப்பவாதமே முக்கியம் என்ற அடிப்படையில் தான் இந்த கூட்டணியில் திமுக சேர்ந்திருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ஒருவர் மோடியை கொலை செய்வேன் என்று பேசியிருக்கிறார். இப்படி எல்லை தாண்டி என்னைப்பற்றிய விமர்சனம் தொடர்கிறது. பலரும் என்னை வசைபாடுவதையே பிரதான கொள்கையாக கொண்டிருக்கிறார்கள். யார் மோடியை அதிகமாக வசைபாடுவது என்கிற போட்டியே இப்போது எதிர்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. சிலர் என்னுடைய ஏழ்மையை பற்றியும் ஒரு சிலர் என் குடும்பத்தை பற்றியும், இன்னும் சிலர் என்னுடைய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை பற்றியும் ஏளனம் செய்கிறார்கள், வசைபாடுகிறார்கள். நான் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய உடலில் ஒரு சொட்டு ரத்தம் உள்ளவரை, என் மூச்சுக்காற்று உள்ளவரை, என் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் இந்த தேசத்தின் 130 கோடி மக்களுக்காகவே செலவிட விரும்புகிறேன்.

ஜனநாயக நாட்டில் யாரிடமும் கேள்விகள் கேட்பதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது. அந்த வகையில் கலப்பட கூட்டணி அமைப்பத்திருக்கும் எதிர்க்கட்சியினரிடம் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். உங்களுடைய கொள்கை என்ன… செயல் திட்டம் என்ன… உங்களுக்கு யார் தலைமை வகிப்பது… என்கிற கேள்விகளை நீங்கள் கேட்க வேண்டும். மோடியை அகற்ற மட்டுமே கூட்டணி என்று சொல்பவர்களிடம் நாட்டு மக்களுக்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசை பொறுத்த வரையில் நாங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும்.

ஏழை மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பாடுபடுகிறோம். அடுத்த தலைமைமுறைக்கு பயனளிக்கக்கூடிய, விவசாயிகளுக்கு நலன் பயக்கக்கூடிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறோம். சமூக நீதியை நிலை நாட்ட பாடுபடுகிறோம். ஊழல் விஷயத்தில் எந்த வித சமரசத்திற்கும் இடமின்றி செயல்பட்டு வருகிறோம். தேசிய பாதுகாப்பில் உறுதியோடு இருக்கிறோம். பயங்கரவாதிகள் விஷயத்தில் மன்னிப்பு என்ற பேச்சிற்கே இடமில்லாத வகையில் செயல்பட்டு வருகிறோம்.

நம்முடைய முன்னுரிமை என்பது நாடு முதன்மையானது, மக்கள் முதன்மையானவர்கள் என்ற அடிப்படையிலே அதற்கான செயல்திட்டங்களை வகுப்பது தான். கடந்த 54 மாத ஆட்சி இந்த வகையில் நல்ல பல திட்டங்களை தீட்டி மக்களின் ஆதரவோடு நிறைய நன்மைகளை செய்திருக்கிறது. எனவே தமிழகத்திலுள்ள சகோதர, சகோதரிகளே நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உங்கள் ஆசியையும் ஆதரவையும் தாருங்கள். மீண்டும் பாஜ., தலைமையிலான ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு தாருங்கள். உங்களின் கனவுகளையும், நாட்டிற்காக உழைத்த தியாகிகளின் கனவுகளையும் நனவாக்குவதற்கு வாய்ப்பு தாருங்கள். நாளை நமதே நாற்பதும் நமதே நாடும் நமதே”என்று பிரதமர் மோடி பேசினார்.