ஜனவரி 3ம் தேதி முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி – பிரதமர் மோடி அறிவிப்பு

ஜனவரி 3ம் தேதி முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி – பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவில் 15-18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் கூடுதல்(பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தப்படும். அதேபோல் 60 வயதைக் கடந்தவர்கள், இணை நோய்கள் உள்ள நபர்களும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது.இந்தியாவில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை மொத்தம் 415 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து 115 பேர் குணமடைந்துள்ளனதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில், இரவு 9 மணிக்கு மேல் திடீரென நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கூறி உரையை தொடங்கிய பிரதமர், ’’உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் பலருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாம் அனைவரும் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். முகக்கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது கழுவுவதை மறந்துவிடக்கூடாது. ஒமைக்ரான் குறித்து பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் 18 லட்சம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் தயாராகவுள்ளன. குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 90,000 குழந்தைகளுக்கான கொரோனா படுக்கைகள் தயாராகவுள்ளன.

நாடு முழுவதும் ஆக்சிஜன் வசதியுடன் 5 லட்சம் படுக்கைகளும், 18 லட்சம் தனிமைப்படுத்துதல் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவை எதிர்த்து போராட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை முழுமையாக இல்லை. கடும் சவால்களுக்கு இடையே தடுப்பூசி திட்டம் பாதுகாப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மேலும் பல கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

அதே சமயம் உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துகளும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. கொரோனா தடுப்பூசி திட்டம் விஞ்ஞான முறையில் நடைபெற்று வருகிறது. கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தொடர்ந்து நாம் முன்னணியில் இருந்து வருகிறோம். இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிவரும் நிலையில், இந்திய பொருளாதாரமும் சீரான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் 15-18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் கூடுதல்(பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தப்படும். அதேபோல் 60 வயதைக் கடந்தவர்கள், இணை நோய்கள் உள்ள நபர்களும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம். கோவா, உத்தராகண்டில் முதல் தவணை 100% செலுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது’’ என்று பேசினார்.

error: Content is protected !!