June 21, 2021

சுதந்திர தினத்தன்று என்ன பேசலாம்? – மோடி கேக்கறார்!

பிரதமர் மோடி, மாதந்தோறும், மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் ரேடியாவில் பேசி வருகிறார். இதன்படி 22வது நிகழ்ச்சியாக மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். வீரர்களை மக்கள் ஊக்குவிக்க வேண்டும். ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு மோடி ஆப்பில் வாழ்த்து செய்தி அனுப்புங்கள். நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை ஊக்கப்படுத்துவது நமது கடமை. வீரர்கள் ஒரே நாளில் உருவாவதில்லை. அவர்கள் பல வருடம் கடின உழைப்பு காரணமாக உருவாகின்றனர். அவர்களை வாழ்த்துவது நமது கடமை. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த டில்லியில் இன்று நிகழ்ச்சி நடந்தது. இதுபோன்று பல நிகழ்ச்சிகள், வீரர்களை ஊக்கப்படுத்த நடத்தப்படும்.

modi jy 31

கலாமை நினைக்கும்போது, நாம் அறிவியல் தொழில்நுட்பம் நினைவுக்கு வருகிறது. எதிர்காலத்தை தொழில்நுட்பம் தான் நிர்ணயம் செய்யப்போகிறது. இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் தினமும் மாறுகிறது. இதனை நம்மால் எட்டிப்பிடிக்க முடியாது. ஆராய்ச்சி மற்றும் புதுமைகள் ஆகியவை நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. புதுமைக்கான உகந்த சூழல் நிலவுகிறது. புதுமை, ஆராய்ச்சி, தொழில் முனைவோர் ஆகியோர் ஊக்கப்படுத்துகின்றனர். தினசரி ஆராய்ச்சி, புதுமை தொழில்நுட்பம் மற்றும் அதனை நமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதே கலாமுக்கு செய்யும் அர்ப்பணம்.

சில பிரச்னைகள் ஏற்படுத்தினாலும், மழை நமது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. வெள்ளம் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய , மாநில அரசுகள் உதவி செய்கிறது. மழை நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. மழை சில நோய்களை தருகிறது. இதனால் நாம் கவனமாக இருக்க வேண்டும், நோய் வரும் முன் தடுக்க வேண்டும்

டாக்டரிடம் ஆலோசனை செய்யாமல் ஆன்டி பயாடிக் மருந்து எடுப்பதை நிறுத்த வேண்டும் . இது நிரந்தர தீர்வு தராது. இது தற்காலிக தீர்வு தான் தரும். ஆன்டிபயாடிக் எடுக்கும்போது, தயவு செய்து முழுமையாக முடியுங்கள். பாதியில் விடுவது, அதிகமாக எடுத்துக்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும் தொடர்ச்சியாக ஆன்டி பயாடிக் எடுக்கும்போது, தொடர்ச்சியான பாதிப்பு தரும். இதனால், நோய்க்கிருமிகள் கட்டுபடுத்த முடியாமல் போய் விடும்.

பிரசவ காலத்தில் பெண்களுக்கு இந்தியாவில் பிரச்னைகள் உள்ளது.கடந்த சில வருடங்களாக பிரசவத்தின் போது பெண்கள் மரணமடைவதை தடுக்க முடியவில்லை. பிரசவ தாய்மார்களை 9வது மாதத்தில் டாக்டர்கள் நன்று சோதனை செய்ய வேண்டும். பெண்கள் 9 வது மாதத்தில் இலவசமாக முழு மருத்துவ பரிசோதனை செய்ய புதிய திட்டம் துவக்கப்படும். ஆயிரகணக்கான டாக்டர்கள் இதனை ஏற்றுக்கொண்டனர். ஆனால் இந்தியா போன்ற பெரிய நாட்டில் லட்ச கணக்கான நாட்கள் இதனை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.

பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் குறித்து உலகம் கவலை கொள்கிறது.நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மரங்களை நட வேண்டும். இதற்கான இயக்கத்தை நாம் துவக்க வேண்டும். பல மாநில அரசுகள் காடுவளர்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு உதவ மத்திய அரசு ரூ.40 ஆயிரம் கோடி உதவி அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் 25 லட்சம் மரங்களை நட முடிவு சய்துள்ளது. இதனை நாம் பாராட்ட வேண்டும்.2029க்குள் மாநிலத்தின் பசுமை திட்டத்தை 50 சதவீதம் அதிகரிப்போம் என ஆந்திரா கூறியுள்ளது.

தென் ஆப்ரிக்காவை நினைக்கும்போது மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலாவின் கடின உழைப்புகள் நினைவுக்கு வருகிறது. சம உரிமைக்கு போராடிய அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. எனது தென் ஆப்ரிக்க பயணம் ஒரு தீர்த்த யாத்திரை போல் அமைந்துள்ளது.

சமீப காலங்களாக நமது போன்கள் இமெயில் மூலம் முதலீடு மூலம் அதிக பலன் கிடைப்பதாக விளம்பரங்கள் வருகின்றன. இணையதள மோசடி குறித்து அனைவரும், கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.சிலர் உங்களை சிக்க வைக்க முயற்சி செய்வார்கள் அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

அலிகார்க் ரயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்து மகிழ்ச்சி ஏற்பட்டது. ரக்ஷாபந்தன் தினத்தன்று, நீங்கள் உங்களது சகோதரிகளுக்கு இன்சூரன்ஸ் பாலிசியை பரிசாக அளியுங்கள். ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளேன். இதற்கான கருத்துக்களை மக்கள் என்னிடம் மொபைல் ஆப் மூலம் பகிர்ந்து கொள்ளலாம் எனக்கூறினார்.