மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

மதுரையை அடுத்த தோப்பூரில் ரூபாய் 1264 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இன்று காலை அடிக்கல் நாட்டினார்.

டெல்லியில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனை போன்று தென்னிந்தியாவில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்தது. எய்ம்ஸ் மருத்து வமனை அமைக்க தமிழகத்தில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இறுதியாக மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 48 மாதங்களுக்குப் பிறகு 2022ஆம் ஆண்டில் இந்த மருத்துவ மனை செயல் பாட்டுக்கு வரவுள்ளது. இந்த மருத்துவமனையில் 15 முதல் 20 அதிநவீன சிகிச்சை பிரிவுகளும், அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றுக்காக 750 படுக்கை வசதிகளும் அமைக்கப்படவுள்ளது. நாள்தோறும் 1,500 வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. நிர்வாகப் பிரிவு, திறந்தவெளி அரங்கம், விருந்தினர் இல்லம், விடுதிகள் மற்றும் குடியிருப்பு வசதிகளும் அமைக்கப்படவுள்ளன. முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி போன்ற நீண்டகால திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. 100 எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான இடங்களும், 60 செவிலியர் படிப்புக்கான இடங்களும் உருவாக்கப்படவுள்ளன.

இதற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை, ரூ.1,264 கோடி நிதியும் ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கின. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடந்தது.

இதற்காக காலை மதுரை விமான நிலையத்துக்கு சிறப்பு விமானம் மூலம் வந்து சேர்ந்த பிரதமர் மோடியை  தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், துணை முதல்வர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள், அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் அடிக்கல் நாட்டு விழா மேடையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து தமிழக முதல்வர் கே பழனிச்சாமி உரையாற்றினார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்று முதலில் கோரிக்கை எழுப்பியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கனவு இப்பொழுது நனவாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறிய துணை முதல்வர் அதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.

முதல்வரைத் தொடர்ந்து பிரதமர் மோடி தோப்பூர் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் வகையில் பொத்தானை அழுத்தி திறந்து வைத்தார்.

மதுரை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் இந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரியிலும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியிலும் புதிதாக அமைக்கப் பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையங்களை காண கட்டடங்களையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதன் பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சகோதரர்களே சகோதரிகளே என்று தமிழில் துவக்கி என் இனிய வணக்கங்கள் என கூறி கூறினார். தொடர்ந்தவர், “சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாரம்பரியமிக்க மதுரையில் விழா நடப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் காட்சியளிக்கும் புனித யாத்திரை மையமாகவும் மதுரை விளங்குகிறது..இந்த சந்தர்ப்பத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்.

சுகாதாரத்துறையில், எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஒரு புதிய பிராண்ட் நேமாக இப்பொழுது உருவாகியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மதுரையிலும் மற்ற இடங்களிலும் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜாராத் முதல் அஸாம் வரையிலும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் உதவுகிறது. மதுரையில் அமைக்கப்படும் மருத்துவமனை தமிழக மக்களுக்கு உதவியாக அமையும் என நம்புகிறேன்.

மத்திய அரசு 3 மக்களவை தொகுதிகளுக்கு 1 மருத்துவக் கல்லூரி வீதம் மருத்துவக் கல்லூரிகளை நாடெங்கும் துவக்கத் திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு அனைத்து பிரிவு மக்களுக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்று விரும்பு கிறது, அதனடிப்படையில் அனைத்து பிரிவு மக்களுக்கும் சுகாதார வசதி கிடைக்க உதவும் திட்டங் களை அமல் செய்து வருகிறது. அகில இந்திய அளவில் ஒன்பது கோடி கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன அவற்றில் தமிழகத்தில் மட்டும் 44 லட்சம் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஏழைகள் நடுத்தர வகுப்பு மக்களுக்கு உதவுகின்றன இவற்றுக்கான செலவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

மத்திய அரசு மக்களுக்கு இடையே உள்ள தொடர்புகளை வலுப்படுத்தவும் புதிய தொடர்புகளை உருவாக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 35,000 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் பாதை நீளம் இருமடங்காக பட்டுள்ளது.

ராமேஸ்வரம் பாம்பன் தனுஷ்கோடி ஆகியவைகளை இணைப்பதற்கு புதிய பாலம் ஒன்று ரூபாய் 20,000, 21,000 கோடி செலவில் திட்டமிடப்பட்டு வருகிறது. சென்னைக்கும் மதுரைக்கும் இடையே அதி வேகமாக செல்லக்கூடிய “தேஜஸ் ரயில்” அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழக மக்களுக்கு பாஸ்போர்ட் வாங்குவதற்கான சிரமங்களை குறைப்பதற்காக தேர்ந்தெடுக்கப் பட்ட 12 மாவட்ட அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் வழங்கும் சேவை அறிமுகப்படுத்தப்படும்”என்று பிரதமர் தன் உரையில் குறிப்பிட்டார்.

மேலும் பிரதமர் மதுரை விழாவின் சிறு குறிப்புகள்:

தனி விமானம் மூலம் மதுரை வந்த பிரதமர் தனி விமானத்தில் கேரள மாநிலம் கொச்சி சென்றார். ஆளுநர், முதல்வர் வரவேற்று, வழி அனுப்பி வைத்தனர்.

மதுரை மண்டேலாநகர் பகுதியில் பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது, அதன் மிக அருகிலேயே எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா அரசு விழாவாக இருந்த போதிலும், தமிழ்த்தாய்வாழ்த்து, தேசியகீதம் இசைக்கப்படவில்லை.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேச வாய்ப்பு கிடைக்காத துணை முதல்வருக்கு, எய்ம்ஸ் விழாவில் பிரதமர் முன்பு வரவேற்பு சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் மக்களவை துணை சபாநாயகர் மேடையில் முக்கிய இடத்தில் அமர்ந்திருந்தார்.

துணை முதல்வர் தனது வரவேற்புரையில் ஆளுநர் பெயரை மறந்து விட்டார். முதல்வர், பிரதமர் இருவர் மட்டுமே பேசினர், நன்றியுரை கிடையாது.

எய்ம்ஸ் அமையும் இடம் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி, விழா நடந்த இடம் மதுரை தொகுதி என்பதால் இரு எம்பிக்கள் மேடையேற வாய்ப்பு கிடைத்தது.

எய்ம்ஸ் விழாவில் தமிழக முதல்வர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை, பிரதமரும் எந்த அறிவிப்பும், வாக்குறுதியும் கொடுக்கவில்லை.

பாஜக பொதுக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் தமிழிசை வரவேற்புரை ஆற்றும் போது

நாடாளுமன்றத் தொகுதி தொண்டர்களையும் தனித்தனியாக எழுந்து நிற்கச் சொல்லி பெருமைப்படுத்தினார். பிரதமர் மட்டுமே பேசினார்.

பிரதமர் மோடி எப்போதும் போல தொலைக்காட்சி செய்தியாளர்கள் பயன்படுத்தும் ப்ராம்டர் பார்த்து பேசினார். வழக்கம் போல் இந்தியில் பேசாமல் முதன் முறையாக தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பேசினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து பேச்சைத் தொடங்கினார்.

பிரதமர் பேச்சை எச்.ராஜா கையில் வைத்திருந்த தமிழ் குறிப்புகளோடு மொழிபெயர்ப்பு செய்த போதிலும் ஓரிடத்தில் தடுமாறினார்.

பாஜக பொதுக் கூட்டம் முடிந்ததும் விமான நிலையத்தில் பிரதமர், முதல்வர், துணை முதல்வர் தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் செய்ததாக கூறப்படுகிறது.

தமிழகம் வந்த பிரதமருக்கு மதுரை மீனாட்சி, முருகன், ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறி கருப்புக்கொடி போராட்டம் நடத்திய வைகோ, கொளத்தூர்மணி, திருமுருகன் காந்தி, முகிலன் உள்பட 300க்கும் மேற்பட்டோர் மதுரையில் கைது செய்யப்பட்டனர்.

பிரதமர் விழா நடைபெற்ற மதுரையின் பல இடங்களில் கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டிருந்தன. #GoBackModi என்ற கேஷ்டேக் 5 லட்சம் பேருக்கும் அதிகமானோர் டிவிட் செய்ததால் உலக அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

பாஜக அரசு அறிவித்த 17 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்று கூட தொடக்க வேலையே நடக்கவில்லை என்ற பத்திரிகை செய்தியும், மதுரை தோப்பூரில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சுகாதார அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அடிக்கல் நாட்டிய புகைப்படமும் இணையத்தில் வைரலானது.