August 12, 2022

நீர் மேலாண்மை விழிப்புணர் !- மன் கீ பாத்-தில் மோடி ரேடியோ பேச்சு முழு விபரம்

நம் நாட்டின் மாணவச் செல்வங்களுக்கும் இளைய சமூகத்தினருக்கும் ஒரு மிக சுவாரசியமான போட்டி பற்றிய தகவல்களை நான் முன்வைக்க இருக்கிறேன், இந்த வினாவிடைப் போட்டியில் நமது இளைஞர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன். இப் போட்டியில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். போட்டிக்கான விவரம் குறித்து ஆகஸ்ட் 1-ல் வெளியிடப்படும். மேகாலயா நீர் கொள்கையை வகுத்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. ஹரியானாவில் மிக குறைந்த நீர் தேவைப்படும் பயிர்கள் ஊக்குவிக்கப் படுகின்றன! பண்டிகை காலத்தில் நடைபெறும் விழாக்களை நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வுக்கு பயன்படுத்தலாம் என்று, மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுடன் வானொலி வாயிலாக மன் கீ பாத் என்ற தொடரில் நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக் காட்டி பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றுவார். இந்த உரை நிகழ்ச்சி அகில இந்திய வானொலி உட்பட அனைத்து வானொலிகளும் காலை 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும். இந் நிலையில், மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் மோடி இன்று இரண்டாவது முறை யாக வானொலியில் உரை நிகழ்த்தினார்.

அப்போது மோடி பேசிய முழு விபரம் இதோ:

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மனதின் குரலுக்காக எப்போதும் போலவே இப்போதும் என் தரப்பிலும் சரி, உங்களனைவரின் தரப்பிலும் சரி, ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த முறை யும் பல கடிதங்கள், கருத்துக்கள், தொலைபேசி அழைப்புக்கள் வந்திருக்கின்றன என்பதை நான் கவனித்தேன். ஏராளமான கதைகள், ஆலோசனைகள், உத்வேகங்கள் – எல்லோரும் ஏதாவது ஒரு செயலாற்ற விரும்புகிறார்கள், தெரிவிக்க விரும்புகிறார்கள் – இவையனைத்திலும் ஒரு உணர்வு பிரதிபலிக்கிறது, இதை நான் உணர்கிறேன்; இவற்றை ஒருங்கிணைக்க விரும்புகிறேன், ஆனால் நேரக்கட்டுப்பாடு காரணமாக, அனைத்தையும் வெளிப்படுத்த என்னால் இயலவில்லை.

என்னை நீங்கள் உரைத்துப் பார்ப்பதாகவே எனக்குப் படுகிறது. இருந்தாலும் கூட, உங்கள் கருத்துக்களையும் வெளிப்பாடுகளையும் மனதின் குரல் என்ற இழையில் கோர்த்து, உங்களிடமே அர்ப்பணிக்க நான் முனைகிறேன்.

கடந்த முறை ப்ரேம்சந்த் அவர்களின் கதைகள் அடங்கிய ஒரு புத்தகம் பற்றி நான் பேசினேன் என்பதும், யார் அதைப் படிக்க நேர்ந்தாலும் அது பற்றித் தங்கள் எண்ணங்களை NarendraModi செயலி வாயிலாகப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் நான் கேட்டுக் கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அறிவியல், தொழில்நுட்பம், புதுமைகள் படைத்தல், வரலாறு, கலாச்சாரம், வணிகம், வாழ்க்கை சரிதம் என பல துறைகள் பற்றி எழுதப்பட்டிருக்கும் புத்தகங்கள் பற்றியெல்லாம் அதிக எண்ணிக்கையில் மக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். வேறு சிலர் நான் வேறு பல புத்தகங்கள் பற்றியும் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கண்டிப்பாக நான் வேறு சில புத்தகங்கள் பற்றியும் பேசுவேன். ஆனால் இப்போதெல்லாம் என்னால் அதிக புத்தகங்களைப் படிக்க போதுமான நேரம் கிடைப்பதில்லை என்பதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். அதே வேளையில் ஒரு ஆதாயம் கிடைத்திருக்கிறது; அது என்னவென்றால், நீங்கள் எழுதி அனுப்பியிருக்கும் பல புத்தகங்கள் பேசும் விஷயம் பற்றி தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் இப்போது எனக்குக் கிடைத்து விட்டது, இல்லையா?

ஆனால் கடந்த ஒரு மாதக்காலத்தில் கிடைத்த அனுபவத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றே எனக்குப் படுகிறது. நாம் ஏன் NarendraModi செயலியில் ஒரு நிரந்தரமான புத்தகப் பகுதியை ஏற்படுத்தக் கூடாது? நாம் எப்போது நல்லதொரு புத்தகத்தைப் படிக்க நேர்ந்தாலும், அது பற்றி அதில் எழுதுவோம், வாதம் செய்வோம், நமது இந்தப் புத்தகப் பகுதிக்கு நல்லதொரு பெயரை நீங்கள் பரிந்துரை செய்யலாமே!!

இந்தப் புத்தகப் பகுதி வாசகர்களுக்கும் சரி, எழுத்தாளர்களுக்கும் சரி, ஒரு ஆக்கப் பூர்வமான மேடையாக மிளிரும். நீங்கள் படியுங்கள் எழுதுங்கள், அவற்றை எல்லாம் மனதின் குரலின் அனைத்து நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நண்பர்களே, நீர்ப் பாதுகாப்பு குறித்து நான் மனதின் குரலில் தொட்டுக் காட்டியது என்னவோ உண்மை – ஆனால் இதற்கு முன்னரே கூட நீர்ப்பாதுகாப்பு விஷயம் உங்கள் இதயங்களைத் தொடக்கூடிய ஒரு விஷயம், சாதாரண மனிதனுக்கு மிகப் பிடித்தமான விஷயம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

சில நாட்களாகவே ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியிருக்கும் ஒரு விஷயம் என்றால், அது தண்ணீர் தான். தண்ணீர் பாதுகாப்பை முன்னிட்டு நாடு முழுவதிலும் தாக்கமுண்டாக்கும் பல சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மக்கள் பாரம்பரியமான வழிமுறைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஊடகங்களும் நீர் பாதுகாப்பு தொடர்பான பல நூதனமான இயக்கங்களை முடுக்கி விட்டு இருக்கின்றன. அரசாகட்டும், அரசு சாரா அமைப்புகளாகட்டும் – போர் முனைப்போடு ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். சமூக உணர்வின் திறனைப் பார்க்கும் போது, மனதுக்கு மிகுந்து மகிழ்ச்சியாக இருக்கிறது, நிறைவாக இருக்கிறது.

எடுத்துக்காட்டாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலிருந்து சற்றுத் தொலைவில், ஓர்மாஞ்ஜீ வட்டாரத்தின் ஆரா கேரம் கிராமத்தில், கிராமவாசிகள் நீர் மேலாண்மை தொடர்பாக வெளிப்படுத்தியிருக்கும் மனவுறுதி, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக ஒளிர்கிறது.

கிராமவாசிகள், தாமாக முன்வந்து பணியில் ஈடுபட்டு, மலையிலிருந்து பெருகியோடும் நீர் வீழ்ச்சிக்கு ஒரு உறுதியான பாதையேற்படுத்தி யிருக்கிறார்கள்; அதுவும் நம் நாட்டுக்கே உரித்தான பாரம்பரிய வழிமுறையை மேற்கொண்டு.!

இதனால் மண் அரிப்பும், பயிர்நாசமும் தடுக்கப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல், வயல்களுக்கும் தண்ணீர் கிடைத்து வருகிறது. கிராமவாசிகள் செய்திருக்கும் இந்தப் பணியால் ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ஒரு புத்துயிர் கிடைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

வடகிழக்கின் மிக அழகான மாநிலமான மேகாலயா, தனக்கென ஒரு water policy; நீர்க் கொள்கையை உருவாக்கியிருக்கிறது என்பதை அறிந்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதன் மாநில அரசுக்கு நான் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹரியாணாவில் குறைவான நீர்ப்பயன்பாடு, விவசாயிகளுக்கும் பாதிப்பில்லை என்ற அளவிலான பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயத்திற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளோடு உரையாடி, பாரம்பரியமான விவசாயத்திலிருந்து சற்றே விலகி, குறைவான நீரைப் பயன்படுத்தும் பயிர்களை சாகுபடி செய்யக் கருத்தூக்கம் அளித்தமைக்காக, நான் ஹரியாணா அரசுக்கு சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இனி பண்டிகைகளின் காலம் தொடங்கி விட்டது. பண்டிகைகள் காலத்தில் பல விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. நீர்ப் பாதுகாப்பிற்க்காக நாம் ஏன் இந்த விழாக்களைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? திருவிழாக்களின் போது ஒவ்வொரு பிரிவினரும் வந்து கூடுகிறார்கள்.

இந்த வேளையில் நீர் மேலாண்மை – நீர் சேமிப்பு பற்றி அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை கொண்டு சேர்க்க முடியும். இதை ஒட்டிய காட்சிகளை உருவாக்கலாம், தெருமுனை நாடகங்களை அரங்கேற்றலாம், திருவிழாக்களோடு கூடவே நீர்ப் பாதுகாப்பு பற்றிய தகவலை மிக எளிதாக நம்மால் கொண்டு சேர்க்க முடியுமே!!

நண்பர்களே, வாழ்க்கையில் சில விஷயங்கள் நமக்குள்ளே உற்சாகத்தை நிரப்பி விடுகின்றன; அதுவும் குறிப்பாக பிள்ளைகளின் சாதனைகள், அவர்களின் வெற்றிகள், ஆகியன நம் மனைவருக்குமே உற்சாகம், புதிய ஆற்றல் ஆகியவற்றை அளிக்கிறது. அந்த வகையில் சில குழந்தைகள் பற்றிப் பேச விரும்புகிறேன் – இந்தக் குழந்தைகள் – நிதி பைபொட்டு, மோனீஷ் ஜோஷீ, தேவான்ஷீ ராவத், தனுஷ் ஜெயின், ஹர்ஷ் தேவ்தர்கர், அனந்த் திவாடீ, ப்ரீத்தி நாக், அதர்வ் தேஷ்முக், அரோன்யதேஷ் காங்குலி, ஹ்ரிதிக் அலா மந்தா ஆகியோர் தான் அவர்கள்.

நான் இப்போது சொல்ல இருக்கும் விஷயங்கள் உங்களுக்கு பெருமிதத்தையும் உற்சாகத்தையும் ஒருசேர ஏற்படுத்தலாம். புற்றுநோய் என்ற ஒரு சொல் உலகத்தில் எத்தனை நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பது நமக்கெல்லாம் நன்கு தெரியும்.

மரணம் வாயிற்படிகளில் காத்து நிற்கும் வேளையில், இந்த பத்துக் குழந்தைகளும், வாழ்வா சாவா என்ற தங்கள் போராட்டத்தில் புற்றுநோயைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தது மட்டுமல்லாமல், தங்கள் அற்புதமான செயல்பாடுகள் காரணமாக நாட்டின் பெயருக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் கள்.

பொதுவாக எந்த ஒரு விளையாட்டுப் பந்தயத்திலும் வெற்றிவாகை சூடிய பிறகே பதக்கங்களை ஜெயிப்பார்கள்; ஆனால் விளையாட்டுப் பந்தயத்தில் பங்கு பெறும் முன்னரே வெற்றியாளர் களாகும் மிக அரிய சந்தர்ப்பம் இவர்களுக்கு வாய்த்தது, இவர்கள் வாழ்க்கையின் போராட்டத்தின் வெற்றியாளர்கள்.

இந்த மாதம் தான் மாஸ்கோ நகரில் – World Children’s Winners Games உலக குழந்தை வெற்றி யாளர்கள் போட்டிகள் நடைபெற்றன. இந்த வித்தியாசமான விளையாட்டுப் பந்தயத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுப் போராடிப் பிழைத்த இளம் பிஞ்சுகள் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டார்கள்.

இந்தப் பந்தயத்தில் துப்பாக்கிச் சுடுதல், சதுரங்கம், நீச்சல், ஓட்டப்பந்தயம், காலபந்தாட்டம், டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நமது நாட்டின் இந்த பத்து வெற்றியாளர்களுமே இந்தப் பந்தயத்தில் பதக்கங்களை வென்றெடுத்தார்கள் என்பதோடு, இவர்களில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பதக்கங்களையும் வென்றார்கள்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, சந்திரயான் 2 – வானத்தையும் தாண்டி, விண்வெளியில் இந்தியா ஈட்டியிருக்கும் வெற்றி உங்களுக்குக் களிப்பையும் பெருமிதத்தையும் அளித்திருக்கும் என்பதில் எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது.

ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த சஞ்ஜீவ் ஹரீபுரா, கோல்காத்தாவின் மஹேந்திர குமார் டாகா, தெலங்கானாவின் பி. அர்விந்த் ராவ் போன்ற அநேகர், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து NarendraModi செயலியிலும் MyGovஇலும், இந்த சந்திரயான் 2 பற்றி மனதின் குரலில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விண்வெளியைப் பொறுத்த மட்டில் இந்தியாவிற்கு மிக அருமையான ஆண்டு என்றே 2019ஆம் ஆண்டை சொல்ல வேண்டும். நமது அறிவியலாளர்கள், மார்ச் மாதம் A-Satஐ விண்ணில் செலுத்தினார்கள், இதன் பிறகு சந்திரயான் 2. தேர்தல் பரபரப்பில் A-Sat என்ற பெரிய மகத்துவம் வாய்ந்த விஷயம் பற்றி நாம் அதிகம் பேச முடியாமல் போனது.

ஆனால் A-Sat ஏவுகணை, வெறும் 3 நிமிட நேரத்திலேயே பூமிக்கு மேலே 300 கி.மீ. தொலை விலிருக்கும் செயற்கைக் கோளை வீழ்த்தும் வல்லமை படைத்ததாக இருந்தது. உலகில் இந்த வல்லமையைப் பெற்ற நான்காவது நாடாக இந்தியா ஆகியிருக்கிறது; ஜூலை மாதம் 22ஆம் தேதியன்று நாடு முழுவதும் பெருமிதம் மனதில் பொங்க சந்திரயான் 2 விண்ணில் சீறிப் பாய்வதை உற்றுப் பார்த்தது.

சந்திரயான் 2 – இந்த இலக்கு பல்வேறு கோணங்களில் சிறப்பு வாய்ந்தது. சந்திரயான் 2, சந்திரனைப் பற்றிய நமது புரிதலை மேலும் துலக்கிக் காட்ட உதவும். நிலவைப் பற்றி பல தகவல்கள் விரிவான வகையில் நமக்குக் கிடைக்கும் அதே வேளையில் இதன் மூலம் உங்களுக்குக் கிடைத்த இரண்டு பெரிய கற்பித்தல்கள் என்ன என்று கேட்டீர்கள் என்று சொன்னால், அவை நம்பிக்கை, அச்சமின்மை ஆகியன தாம்.

நாம் நமது அறிவாற்றல், செயல்திறன் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். சந்திர யான் 2 முழுக்க முழுக்க இந்தியாவின் பங்களிப்பு நிரம்பியது, சிந்தனையிலும் உருவாக்கத்திலும் நம்முடையது, சுதேசியமானது.

புதிய துறைகளில் புதுமையான செயல்பாடுகள், நூதனமான உத்வேகங்கள் என்று வரும் போது நமது விஞ்ஞானிகள் தலைசிறந்தவர்கள், உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்பதை இந்தத் திட்டம் மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இரண்டாவதாக கிடைத்த மகத்துவம் வாய்ந்த கற்பித்தல் என்னவென்றால், எந்த ஒரு இடையூறு ஏற்பட்டாலும் கலங்கக் கூடாது என்பது தான். இரவு பகலாகப் போராடி அனைத்துத் தொழில்நுட்பச் சிக்கல்களையும் சாதனை படைக்கும் வகையில் எப்படி நமது விஞ்ஞானிகள் சீர் செய்தார்களோ, அதை அலாதியானது என்று தான் நாம் புகழ வேண்டும்.

விஞ்ஞானிகளின் இந்த மகத்தான தவத்தை உலகமே வைத்த கண் வாங்காமல் கவனித்தது. தடங்கல் ஏற்பட்ட பின்னரும் கூட, கலம் சென்றடையும் நேரத்தை அவர்கள் மாற்றவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பதும் நமக்கு பெருமை அளிக்கும் விஷயம். நமது வாழ்க்கையிலும் கூட நாம் தற்காலிகப் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிடும்; ஆனால் இவற்றைத் தாண்டிச் செல்லும் திறனும் நமக்குள்ளே இருக்கிறது என்பதை மட்டும் நாம் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

இந்த சந்திரயான் 2 ஏவுதல் நம் நாட்டின் இளைஞர்களின் மனங்களில் அறிவியல், புதுமைகள் படைத்தல் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. அறிவியல் தானே முன்னேற்றப் பாதையின் திறவுகோல்? அடுத்து நாம் பேரார்வத்தோடு செப்டம்பர் மாதத்திற்காக காத்திருப்போம்; அப்போது லேண்டர் விக்ரமும் ரோவர் ப்ரஞானும் நிலவின் பரப்பில் தரையிறங்கும்.

இன்று மனதின் குரல் வாயிலாக நாட்டின் மாணவச் செல்வங்களுக்கும் இளைய சமூகத்தின ருக்கும் ஒரு மிக சுவாரசியமான போட்டி பற்றிய தகவல்களை நான் முன்வைக்க இருக்கிறேன், இந்த வினாவிடைப் போட்டியில் நமது இளைஞர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன். விண்வெளி பற்றிய அறிவார்வம், இந்தியாவின் விண்வெளித் திட்டம், அறிவியல் தொழில்நுட்பம் ஆகியன இந்த வினாவிடைப் போட்டியின் கருக்களாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, ராக்கெட் செலுத்துதலில் என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது, செயற்கைக் கோளை எப்படி சுற்றுப் பாதையில் நிலைநிறுத்து கிறார்கள், செயற்கைக்கோளிலிருந்து நாம் என்னென்ன தகவல்களைப் பெறுகிறோம், A-Sat என்றால் என்ன என்று இப்படிப்பட்ட பல விஷயங் கள் இந்தப் போட்டியில் இடம்பெறும். MyGov இணைய தளத்தில், ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று இந்தப் போட்டி பற்றிய தகவல்கள் இடம்பெறும்.

என் இளைய நண்பர்கள், மாணவச் செல்வங்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கிறேன்… இந்த வினாவிடைப் போட்டியில் நீங்கள் கலந்து கொள்ளுங்கள், இதை சுவாரசியமானதாக இனிமையானதாக ஆக்குங்கள். உங்கள் பள்ளியை வெற்றி பெறச் செய்ய உழைப்பை மேற்கொள்ளுங்கள் என்று நான் பள்ளிகள், பெற்றோர், உற்சாகம் நிரம்பிய ஆசிரியர்கள் ஆகியோர் அனைவரிடமும் விண்ணப்பிக்கிறேன்.

அனைத்து மாணவச் செல்வங்களும் இதில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிறேன். இதில் மிக சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகபட்ச மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு இந்திய அரசு தனது செலவிலேயே ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அழைத்துச் செல்லும்; மேலும் செப்டம்பர் மாதத்தில் நிலவின் பரப்பில் சந்திரயான் தரை தொடும் காட்சியைக் காணும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கும்.

வெற்றி பெறும் இந்த மாணவர்களுக்கு இது அவர்கள் வாழ்விலேயே மிக உன்னதமான தருணமாக இருக்கும். இது நடக்க வேண்டும் என்றால், நீங்கள் கண்டிப்பாக இந்த வினாவிடைப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும், அதிகபட்ச மதிப்பெண்கள் எடுக்க வேண்டும், நீங்கள் வெற்றியாளர் களாக ஆக வேண்டும்.

நண்பர்களே, என்னுடைய இந்த ஆலோசனை உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் – சுவாரசியமான கணம் தானே!! பிறகென்ன.. வினாவிடைப் போட்டியில் பங்கெடுங்கள், அதிகபட்ச பங்கெடுப்பை ஏற்படுத்த கருத்தூக்கம் அளியுங்கள்.

என் உயிரினும் மேலான நாட்டுமக்களே, நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். நமது மனதின் குரல் பல வேளைகளில் தூய்மை இயக்கத்துக்கு வேகம் அளித்திருக்கிறது; இதைப் போலவே தூய்மைக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளும் மனதின் குரலுக்கு உத்வேகம் அளித்தும் வந்திருக்கின்றன.

ஐந்தாண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கிய பயணம் இன்று அனைவரின் பங்களிப்பின் துணை யோடு, தூய்மைக்கான புதிய அளவுகோல்களை நிறுவி இருக்கிறது. நாம் தூய்மையின் ஆதர்ஸ நிலையை எட்டி விட்டோம் என்று நான் கூறவில்லை; ஆனால் திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கம் தொடங்கி, பொதுவிடங்கள் வரை தூய்மை இயக்கத்துக்குக் கிடைத்து வரும் வெற்றி, 130 கோடி நாட்டுமக்களின் உறுதிப்பாட்டின் வல்லமை; ஆனால் நாம் இதோடு நின்று போய்விடப் போவதில்லை.

இந்த இயக்கம் இப்போது அசுத்தமில்லா நிலையிலிருந்து அழகுநிலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. சில நாட்கள் முன்பாகத் தான் யோகேஷ் சைனீ அவர்களைப் பற்றியும் அவரது குழுவினர் பற்றியும் ஊடகங்கள் வாயிலாக நான் தெரிந்து கொள்ள நேர்ந்தது. யோகேஷ் சைனீ ஒரு பொறியாளர், அமெரிக்காவில் தான் பார்த்து வந்த வேலையைத் துறந்து பாரத அன்னைக்கு சேவை செய்ய நாடு திரும்பியிருக்கிறார்.

சிலகாலம் முன்பாக அவர் தில்லியைத் தூய்மை நிறைந்ததாக மட்டுமல்ல, அழகு நிரம்பியதாகவும் மாற்றும் சவாலை மேற்கொண்டார். அவர் தனது குழுவினரோடு இணைந்து லோதீ கார்டனில் இருக்கும் குப்பைத் தொட்டிகளிலிருந்து தன் பணியைத் தொடங்கினார். வீதிகளில் அழுக்கு மண்டிய சுவர்களில் அழகிய ஓவியங்களைத் தீட்டினார்.

மேம்பாலங்கள்-பள்ளிகளின் சுவர்கள் தொடங்கி குடிசைகள் வரை, அவர் சித்திரக்கோலங்களைத் தீட்டத்தீட்ட அவருக்கு மேலும் மேலும் ஆதரவு பெருகியது. கும்பமேளாவை ஒட்டி ப்ரயாக் ராஜ் நகரின் வீதிச்சுவர்கள் எல்லாம் எப்படி ஓவியங்களாக மிளிர்ந்தன என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

யோகேஷ் சைனீ அவர்களும் அவரது குழுவினரும் தான் தங்களது கைவண்ணத்தை அங்கும் காட்டியிருந்தார்கள் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. வண்ணங்களும், வரிக்கோடுகளும் ஒலி எழுப்பாது தான் ஆனால், இவற்றால் உருவாக்கம் பெற்ற ஓவியங்களில் வானவில்லின் அற்புதங்கள் பிரதிபலிக்கும்; இவையளிக்கும் செய்தி ஆயிரம் சொற்களையும் தாண்டி அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பெரும் வல்லமை படைத்தவை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

தூய்மை இயக்கத்தின் அழகிலும் நாம் இதை அனுபவபூர்வமாக உணர்கிறோம். கழிவிலிருந்து செல்வம் என்ற கோட்பாடு நமது சமூகத்தில் வலுப்பெற வேண்டும், இது நமது கலாச்சாரமாகவே ஆக வேண்டும் என்பது அவசியமான ஒன்று.

எனதருமை நாட்டுமக்களே, கடந்த நாட்களில் MyGovஇல் நான் ஒரு சுவாரசியமான கருத்தை வாசிக்க நேர்ந்தது. இதை ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் ஷோபியான் பகுதியில் வசிக்கும் முஹம்மத் அஸ்லம் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்.

மனதின் குரல் நிகழ்ச்சி எனக்குப் பிடித்திருக்கிறது. எனது மாநிலமான ஜம்மு கஷ்மீரத்தில் சமுதாயத்தை ஒன்றுதிரட்டும் கிராமம் திரும்புவோம் திட்டத்தில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நான் அளித்திருக்கிறேன் என்பதைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தச் செயல்திட்டத்திற்கான ஏற்பாடு ஜூன் மாதம் நடந்தது. இது போன்ற செயல்திட்டங்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. இதுதவிர, செயல்திட்டங்களை இணையவழி கண்காணிக்கும் முறை ஏற்படுத்தப்பட வேண்டும். மக்கள் நேரடியாக அரசாங்கத்தோடு ஊடாடும் முதல் செயல்திட்டம் இதுவாகத் தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று முஹம்மத் குறிப்பிட்டிருக்கிறார்.

முஹம்மது அஸ்லம் அவர்கள் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்தைப் படித்த பிறகு கிராமம் திரும்புவோம் திட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வம் அதிகரித்தது. இதைப் பற்றி நான் விரிவாகத் தெரிந்து கொண்ட போது, நாடு முழுமையோடும் இது பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

காஷ்மீரத்து மக்கள், வளர்ச்சிப் பயணத்தில் பங்கெடுக்க எத்தனை பேரார்வத்தோடு இருக்கிறார்கள் என்பதையே இந்தத் திட்டம் எடுத்துக் காட்டுகிறது. இந்தத் திட்டத்தில் முதன் முறையாக உயர் அதிகாரிகள் நேரடியாக கிராமங்கள் சென்றார்கள்.

எந்த அதிகாரிகளெல்லாம் இதுவரை கிராமவாசிகளைப் பார்த்ததும் கிடையாதோ, அவர்கள் நேரடியாக கிராமவாசிகளின் வாயிற்படிகளுக்கே சென்று, வளர்ச்சிப் பாதையில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்களைப் புரிந்து கொள்ளவும், பிரச்சனைகளைச் சீர் செய்யவும் முயற்சி மேற்கொண்டார்கள். இந்தத் திட்டம் ஒருவாரக் காலம் வரை நடைபெற்றது, மாநிலத்தின் கிட்டத்தட்ட 4500 பஞ்சாயத்துக்களில் அரசு அதிகாரிகள் கிராமவாசிகளுக்கு அரசு நலத்திட்டங்கள் பற்றிய விரிவான தகவல்களை அளித்தார்கள். மேலும் அரசுச் சேவைகள் அவர்களைச் சென்றடைகின்றதா என்பதையும் தெரிந்து கொண்டார்கள்.

பஞ்சாயத்துக்களை எவ்வாறு வலுவானவையாக ஆக்கலாம்? மக்களின் வருவாயை எவ்வாறு பெருக்கலாம்? அரசு அளிக்கும் சேவைகள் எந்த வகையில் குடிமகனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? கிராமவாசிகள் மனம் திறந்து தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

எழுத்தறிவு, பாலின விகிதாச்சாரம், உடல்நலம், தூய்மை, நீர்ப்பாதுகாப்பு, மின்சாரம், குடிநீர், பெண் குழந்தைகளின் கல்வி, மூத்த குடிமக்களின் பிரச்சனைகள் போன்ற பல விஷயங்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.

நண்பர்களே, அதிகாரிகள் ஏதோ நாள் முழுவதும் ஊர்சுற்றிவிட்டுத் திரும்பினார்கள் என்பதாக, இந்தத் திட்டம் வெறுமனே கணக்குக் காட்ட செயல்படுத்தப்பட்ட திட்டமல்ல. இந்த முறை அதிகாரிகள் 2 நாட்கள் ஓரிரவு என பஞ்சாயத்தில் கழித்தார்கள். இதன் வாயிலாக கிராமங்களில் நேரம் செலவிட அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அவர்களும் ஒவ்வொருவரையும் சந்திக்க முயற்சி மேற்கொண்டார்கள். ஒவ்வொரு அமைப்பையும் சென்றடைய முனைந்தார்கள்.

இந்தத் திட்டத்தை மேலும் சுவாரசியமானதாக ஆக்க மேலும் பல விஷயங்களும் இதில் இணைக்கப்பட்டன. விளையாடு இந்தியா திட்டப்படி, குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புக்கான பணியட்டைகள், பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிதிசார் அறிவு முகாம்களும், விவசாயம், தோட்டக்கலைத் துறைகளின் அரங்குகளும் அரசு நலத் திட்டங்கள் பற்றிய தகவல்களை அளித்தன.

ஒருவகையில் இந்த ஏற்பாடு, வளர்ச்சித் திருவிழாவானது, மக்கள் பங்களிப்புப் பெருவிழாவானது, மக்கள் விழிப்புணர்வின் நல்விழாவானது. காஷ்மீரத்தின் இந்த வளர்ச்சித் திருவிழாவில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.

கிராமம் திரும்புவோம் என்ற இந்த செயல்திட்டத்திற்கான ஏற்பட்டுகள் உள்ளடங்கிய கிராமங் களிலும் செய்யப்பட்டிருந்தன என்பது சந்தோஷம் அளிக்கும் விஷயமாக இருக்கும் அதே வேளையில், அப்படிப்பட்ட தொலைவான கிராமங்களுக்கும் சென்றடைய அரசு அதிகாரிகள் கடினமான மலைப் பாதைகளில் எல்லாம் ஏறி இறங்கினார்கள், ஒன்றிரண்டு நாட்கள் நடைப்பயணமாகவும் மேற்கொண்டார்கள்.

சதாசர்வகாலமும் எல்லைக்கோட்டுக்கு அப்பாலிருந்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு நடக்கும் எல்லைப்புற கிராமங்களுக்கும்கூட இந்த அதிகாரிகள் சென்றார்கள். இதுமட்டுமல்லாமல் ஷோபியான், புல்வாமா, குல்கான்வ், அனந்த்நாக் மாவட்டங்களின் மிகப் பதட்டமான பகுதி களுக்கும் எந்த அச்சமும் இன்றி இவர்கள் பயணித்தார்கள்.

அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பல அதிகாரிகளுக்கு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அவர்கள் இரண்டு நாட்களுக்கும் கூடுதலாகக் கூட இந்த கிராமங்களில் நேரம் செலவிட்டார்கள். இந்தப் பகுதிகளில் கிராம சபைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, அதில் பெரிய எண்ணிக்கையில் மக்கள் பங்கெடுப்பை உறுதி செய்வது, தங்களுக்கான திட்டங்களை அவர்களே ஏற்படுத்திக் கொள்வது என்ற இவையனைத்தும் சுகமான விஷயங்கள்.

புதிய உறுதிப்பாடு, புதிய உற்சாகம், அற்புதமான பலன்கள். காஷ்மீரத்தின் நமது சகோதர சகோதரி கள் நல்லாட்சியை விரும்புகிறார்கள் என்பதையே இப்படிப்பட்ட செயல்திட்டங்களில் மக்களின் பங்கெடுப்பு நமக்குத் தெரிவிக்கிறது. மேலும், வளர்ச்சியின் ஆற்றல், துப்பாக்கித் தோட்டாக்களின் ஆற்றலை விட எப்போதுமே அதிக வலிமை வாய்ந்தது என்பதையும் இது நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

வளர்ச்சிப் பயணத்தில் யாரெல்லாம் தடைகளையும் வன்மத்தையும் விதைக்க விழைகிறார்களோ, அவர்களின் கொடுமதியில் விளையும் மாபாதகங்கள் ஒருபோதும் வெற்றியடையா என்பதையும் இது தெளிவாக்குகிறது.

என் நெஞ்சம் நிறை நாட்டுமக்களே, ஞானபீட விருது பெற்ற தத்தாத்ரேய ராமச்சந்திர பேந்த்ரே அவர்கள் தனது ஒரு கவிதையில் மாரிக்காலம் பற்றி எவ்வாறு எழுதியிருக்கிறார் தெரியுமா?

ஹொளிகே மத்தே மளிகே ஆக்யேத லக்ன. அதராக பூமி மக்ன.

இந்தக் கவிதை வரியின் பொருள் என்னவென்றால், மாரிக்காலத்தின் பொழிவுக்கும், நீரின் பெருக்குக்கும் இடையே இருக்கும் உறவு விநோதமானது. இதன் அழகைப் பார்த்து பூமி பூரிக்கிறது.

பாரதநாடு முழுவதிலும் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகளைச் சேர்ந்த மக்கள் மாரிக்காலத்தைத் தங்களுக்கே உரிய வகையில் கொண்டாடி மகிழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்தப் பருவத்தில் நாம் நம்மைச் சுற்றிப் பார்த்தோமேயானால், தன் மீது ஏதோ பசும் போர்வையைப் போர்த்தியது போல பூமி காட்சியளிக்கும்.

நாலாபுறத்திலும் ஒரு புதிய சக்தி ஊடுறுவிப் பாய்கிறது. இந்தப் புனிதமான மாதத்தில் பல பக்தர்கள் காவடி எடுக்கிறார்கள், அமர்நாத் புனிப்பயணத்தை மேற்கொள்கிறார்கள்; பலர் உண்ணாநோன்பு இருக்கிறார்கள், பெரும் உற்சாகத்தோடு ஜன்மாஷ்டமி, நாக பஞ்சமி போன்ற பண்டிகைகளுக்காகக் காத்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் தான் சகோதர சகோதரிகளின் அன்பின் வெளிப்பாடாக ரக்ஷா பந்தன் பண்டிகையும் வருகிறது.

மாரிக்காலம் பற்றி நாம் பேசும் போது, இந்த முறை அமர்நாத் யாத்திரை யில், கடந்த 4 ஆண்டு களையும் விட அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஜூலை மாதம் 1ஆம் தேதி தொடங்கி இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித அமர்நாத் குகையில் தரிசனம் செய்திருக்கிறார்கள்.

மொத்தம் 60 நாட்கள் நடைபெறும் இந்தப் புனித யாத்திரையில் 2015ஆம் ஆண்டு எத்தனை பேர் பங்கெடுத்துக் கொண்டார்களோ, அதைவிட அதிகமாக இந்த முறை, வெறும் 28 நாட்களிலேயே அந்த எண்ணிக்கை கடக்கப்பட்டு விட்டது.

அமர்நாத் புனித யாத்திரையின் வெற்றியின் பின்புலத்தில் இருக்கும் ஜம்மு கஷ்மீரத்தின் மக்களுக்கும் அவர்களின் விருந்தோம்பலுக்கும் என் விசேஷமான பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். யாரெல்லாம் யாத்திரை முடித்து திரும்பியிருக்கிறார்களோ, அவர்களனைவரும் மாநில மக்களின் விருந்தோம்பல் மற்றும் அரவணைப்பு உணர்வு ஆகியவற்றால் கவரப்பட்டு இருக்கிறார்கள்.

இவையனைத்தும் எதிர்காலத்தில் சுற்றுலாவுக்காக மிகவும் பயனுடையதாக இருக்கும். உத்தராக்கண்டிலும் கூட இந்த ஆண்டு சார்தாம் புனித யாத்திரை தொடங்கி விட்டது என்றும் இதில் வெறும் ஒண்ணரை மாதக்காலத்திலேயே 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கேதார்நாத் கோயிலுக்கு மட்டுமே வந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கரமான இயற்கைப் பேரிடருக்குப் பிறகு முதன்முறையாக இத்தனை சாதனை படைக்கும் எண்ணிக்கையில் மக்கள் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

பருவமழைக்காலத்தில் அழகு கொஞ்சும் இடங்கள், அவை நாட்டில் எங்கே இருந்தாலும் கண்டிப்பாகச் சென்று களியுங்கள் என்று நான் உங்களிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் இத்தகைய அழகு களிக்கும் இடங்களைப் பார்க்க, நம் நாட்டு மக்களின் உணர்வுகளை உணர, சுற்றுலாவையும் புனித யாத்திரையையும் விட மிகப் பெரிய ஆசான் வேறு யாரும் இருக்க முடியாது.

மாரிக்காலம் என்ற இந்த அழகான, உயிர்ப்புநிறை மாதம் உங்கள் அனைவருக்குள்ளும் புதிய ஆற்றல், புதிய எதிர்பார்ப்பு, புதிய அபிலாஷைகளைச் செலுத்தட்டும். இதைப் போலவே ஆகஸ்ட் மாதம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவுகளைத் தாங்கி வருகிறது.

ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்காக சில சிறப்பான முஸ்தீபுகளில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சுதந்திரத் திருநாளைக் கொண்டாட ஏதாவது புதிய வழிமுறையை ஆராய்வோம். மக்கள் பங்களிப்பு அதிகரிக்கட்டும். ஆகஸ்ட் மாதம் 15ஐ எப்படி மக்கள் திருவிழாவாக மாற்றுவது?

இதைப் பற்றி சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே!! இன்னொரு புறத்தில் இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழைப் பொழிவு இருக்கிறது. பல பகுதிகளில் நாட்டு மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக பல சிரமங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.

மாநில அரசுகளோடு இணைந்து மத்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் மிக விரைவான வகையில் செய்து வருகிறது என்று, வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஆறுதலளிக்க விரும்புகிறேன். நாம் தொலைக்காட்சியில் மழையைப் பார்க்கும் போது நமக்கு ஒரு கண்ணோட்டம் தான் காணக் கிடைக்கிறது – எங்கு பார்க்கினும் வெள்ளம், நிறைந்திருக்கும் நீர், போக்குவரத்து ஸ்தம்பிப்பு.

பருவமழையின் மற்றொரு காட்சி…. ஆனந்தக் கூத்தாடும் நமது விவசாயிகள், குதூகலிக்கும் நமது புள்ளினங்கள், திளைப்பில் பொங்கும் நீர்வீழ்ச்சிகள், பசும்பட்டுப்போர்வை போர்த்திய நிலமங்கை… இவையனைத்தையும் கண்டு களிக்க நீங்கள் உங்கள் குடும்பத்தோடு வெளியே சென்றுத் தான் வர வேண்டும். மழை, புத்துணர்வு, சந்தோஷம் என்ற இரண்டையும் ஒருங்கே அள்ளித் தருகிறது. இந்தப் பருவமழைக்காலம் உங்களனைவருக்கும் நிரந்தர சந்தோஷங்களை வாரி வழங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நீங்கள் அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும்.

என் இனிய நாட்டுமக்களே, மனதின் குரலை எங்கே எப்படித் தொடங்குவது, எங்கே எவ்விதம் நிறைவு செய்வது என்பது பெரிய சவாலான விஷயம். ஆனால், காலக்கெடு என்ற ஒன்று இருக்கிறதே!! ஒரு மாதக்காலக் காத்திருப்புக்குப் பிறகு நான் மீண்டும் வருவேன். உங்களை வந்து சந்திப்பேன். மாதம் முழுவதும் நீங்கள் என்னிடம் ஏராளமான விஷயங்களை அள்ளித் தாருங்கள்.

நான் இனிவரும் மனதின் குரலில் அவற்றை இணைக்க முயல்கிறேன். நான் மீண்டும் நமது இளைய நண்பர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.. நீங்கள் வினாவிடைப் போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பை நழுவ விட்டு விடாதீர்கள். உங்களுக்கு ஸ்ரீஹரிக்கோட்டா செல்லும் பொன்னான சந்தர்ப்பம் கிடைக்கவிருக்கிறது, இதை எந்தச் சூழ்நிலையிலும் தவற விடாதீர்கள்.

உங்கள் அனைவருக்கும் பலப்பல நன்றிகள், வணக்கம்.