March 26, 2023

நடிகன்டா.. ராகுல் மகா நடிகன்டா! – பிரதமர் மோடி கிண்டல் பேச்சு!

பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தன் இறுதி உரையை வழங்கிய போது ‘இந்த சபையில் கட்டிப் பிடி அரசியலை பற்றி தெரிந்து கொண்டேன். ஒருவரை கட்டிப்பிடிப்பதற்கும், அவமதிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை முதல் முறையாக உணர்ந்தேன். கண்கள் வழியாகவே அந்த அவமரியாதை வெளிப்படுத்தப்பட்டது. இந்த விளையாட்டு, இச்சபையில் பார்க்கப்பட்டது. மேலும், ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு நான் பதில் அளித்தபோது, பலத்த சிரிப்பொலியையும் கேட்டேன். பெரும்பாலான நடிகர்கள் கூட அத்தகைய நடிப்பை நடிக்க முடியாது. கேளிக்கை உலகமே இந்த நடிப்பை கற்றுக்கொள்ளலாம்’ என்று ராகுலை கலாய்த்தார் பிரதமர் மோடி.

இன்னும் ஓரிரு மாதத்தில் வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக நடக்கும் கடைசி நாடாளு மன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று பல தலைவர்கள் உருக்கமாக உரையாற்றி னார்கள். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் தன் கடைசி உரையை வழங்கினார்.

அதன் விவரம் :

கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்த போது முதல் முதலாக நாடாளுமன்றத்திற்கு வந்தவர்களுள் நானும் ஒருவன். சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நாட்டில் பெரும்பான்மை பலம் கொண்ட அரசு உருவானது. கடந்த 5 ஆண்டுகளில் மக்களவையில் நடந்த 8 கூட்டத்தொடரில் 100 சதவீத செயல்திறனுடன் அவை செயல்பட்டது. 85 சதவீத மனநிறைவுடன் நாங்கள் விடைபெறுகிறோம்.

வரலாற்றில் முதல் முறையாக பாஜக அமைச்சரவையில் பல பெண் அமைச்சர்கள் பதவி வகிக்கி றார்கள். இந்தியாவின் பாதுகாப்பையும் வெளியுறவு துறை விவகாரங்களையும் பெண்களே கவனித்து வருகிறார்கள். ஒரு பெண் மக்களவை சபாநாயகராக அவையை வழிநடத்தி வருகிறார். இது பெருமை தரும் விஷயமாகும்.

டிஜிட்டல் பாதையில் இந்தியா பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த  நான்கரை ஆண்டுகளில் அதிகளவு  செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. பாஜக ஆட்சியில்  வங்கதேசம் – இந்தியா இடையேயான நில பிரச்சினையை தீர்க்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரத்தில் இந்தியா 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்திய தேசமே தற்போது எங்கள் அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது. மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களால் வெளிநாடுகளை நம்பி வாழும் நிலை குறைந்து வருகிறது. இந்தியா சுயசார்புடைய நாடாக மாறி வருகிறது.

ஐ.நா. சபையில் இந்தியாவின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உலக வெப்ப மயமாக்கல் குறித்து உலக நாடுகள் விவாதித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் இந்தியா தன் முயற்சியால் சர்வதேச சூரியமின்சக்தி கூட்டணியை உருவாக்கி தலைமை தாங்கி வருகிறது.

உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அதிக மரியாதை கிடைக்கிறது. வெளிநாட்டு தலைவர்கள் இந்திய தலைவர்களை மதிக்க துவங்கி யுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் நேபாளம், மாலத்தீவு போன்ற நம் அண்டை நாடுகள் இடர் பாடுகளில் சிக்கி தவித்த போது அனைத்து உதவிகளும் செய்திருக்கிறோம்.

இதே மக்களவையில் தான் ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தோம். இதே மக்களவையில் தான் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினோம். நடைமுறைக்கு  உதவாத 1400 பழைய சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.

ஆதார் அட்டையை அமல்படுத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்தோம்.  வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திருக்கிறோம்.

நாட்டுக்காக மேலும் பல கடமைகள் செய்வதற்கு உள்ளது. அதற்கு முலாயம் சிங் யாதவ் தன் ஆசிகளை வழங்கியுள்ளார். அவரது நல்லாசிகளுக்கு என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

அத்துடன் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தியை விமர்சித்து பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தி ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பூகம்பம் போல் அதிராமல் வலுவிழந்துவிட்டது. மேலும் இந்த சபையில் கட்டிப் பிடி அரசியலை பற்றி தெரிந்துகொண்டேன்.

ஒருவரை கட்டிப் பிடிப்பதற்கும், அவமதிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை முதல் முறையாக உணர்ந்தேன். கண்கள் வழியாகவே அந்த அவமரியாதை வெளிப்படுத்தப்பட்டது. இந்த விளையாட்டு, இச்சபையில் பார்க்கப்பட்டது.

அது மட்டுமின்றி, ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு நான் பதில் அளித்தபோது, பலத்த சிரிப்பொலியையும் கேட்டேன். பெரும்பாலான நடிகர்கள் கூட அத்தகைய நடிப்பை நடிக்க முடியாது. கேளிக்கை உலகமே இந்த நடிப்பை கற்றுக்கொள்ளலாம் “ என்று மோடி கூறினார்.