September 29, 2021

அம்மாவின் 70வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி! – மோடி பேச்சு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளில் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.

ஜெ. பிறந்த நாள் வைபவத்தில் கலந்து கொள்ள சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மைத்ரேயன் எம்.பி., நவநீதகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து ஹெலிக்காப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு தளத்திற்கு சென்று, அங்கிருந்து கலைவாணர் அரங்கம் வந்தடைந்தார். வழி நெடுகிலும் மக்கள் பிரதமரை வரவேற்றார்.  சென்னை – சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தை வந்தடைந்த பிரதமர் அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

அதாவது ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளில் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்தார். பின்னர் ஆளுநரும், தமிழக முதல்வர், துணை முதல்வரும் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். அமைச்சர் பெருமக்கள் பூங்கொத்து கொடுத்து பிரதமரை வரவேற்றனர்.இதையடுத்து ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை, சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் விழா மேடையில் இடம்பெற்றனர்.

மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உரையாற்றி, அனைவரையும் வரவேற்றார்.

முதல்வர் பழனிசாமி உரை

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தை துவங்கி வைப்பதற்கு அழைத்தபோது வருகிறேன் என்று மகிழ்ச்சியோடு சம்மதித்த பாரதப் பிரதமர் அவர்களுக்கு நன்றியுடன் கூடிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடல்தான் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சினிமாவுக்காக பாடிய முதல் பாடல். பிற்காலத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ‘அம்மா’வாகவே மாறினார்கள்.

ஏழை படித்த பெண்களுக்கு – திருமண நிதி உதவியுடன் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம், மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டம், விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், விலையில்லா கறவைப்பசு வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி வழங்கும் திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவி, அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம், தாய்ப்பால் வங்கி, தொட்டில் குழந்தை திட்டம், திருக்கோயில் அன்னதானத் திட்டம், உலமாக்கள் ஓய்வூதியத் திட்டம், என எண்ணற்ற நலத்திட்டங்களை ஏழைகளுக்காக வாரி வழங்கியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

பிரதமர் அவர்கள் 16.2.2018 அன்று டெல்லியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பள்ளி மாணவ -மாணவியரின் தேர்வுகள் தொடர்பான விவாதத்தின் போது -தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது, அதனை நான் கற்றுக்கொள்ளாதது எனக்கு வருத்தமளிக்கிறது எனவும், தமிழ் மொழி பல சிறப்புகளை கொண்டது என தமிழ் மொழியை பாராட்டிப் பேசிய மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் முதன்முதலில் கையெழுத்திட்ட ஐந்து திட்டங்களில் முதல் திட்டமான ” அம்மா இரு சக்கர வாகனத் திட்டம்” தமிழ்நாட்டின் தலைமகளாகவும், தமிழ்த்தாயின் தவப்புதல்வியாகவும் திகழ்ந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பிறந்த இந்த நன்நாளில் பாரத பிரதமர் அவர்கள் தங்கள் திருக்கரங்களால் தொடங்கி வைப்பதன் மூலம், இத்திட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கின்றனர்.

பாரத பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டதால் “அம்மா இரு சக்கர வாகனத் திட்ட விழாவும்”, வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. அதற்காக பாரத பிரதமர் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மீண்டும் நன்றியை தெரிவித்துகொள்வதோடு, இந்த பொன்னான வேளையில், பாரத பிரதமர் அவர்களிடம் ஒரு சிறு கோரிக்கையை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வைக்க விரும்புகிறேன்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடே ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் “காவேரி மேலாண்மை வாரியம்” (Cauvery Management Board) மற்றும் “காவேரி நீர் முறைப்படுத்தும் குழு” (Cauvery Water Regulation Committee) ஆகியவற்றை உடனடியாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பாக அன்போடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்”இவ்வாறு, முதல்வர் பழனிசாமி தனது உரையில் தெரிவித்தார்.

பிரதமர் மோடி இருசக்கர வாகன திட்டத்தை துவக்கினார்

மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் அடையாளமாக இருசக்கர வாகனத்தின் சாவியை 5 பெண்களுக்கு வழங்கினார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி உரை

சகோதர, சகோதரிகளே வணக்கம், தமிழ் மாநில பாரம்பரியத்திற்கும் வணக்கம் என தமிழில் தொடங்கினார் .அம்மாவின் 70வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தால் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். பெண்களின் வலிமை போற்றுவதற்குரியது. ஒரு பெண்ணுக்கு அளிக்கும் கல்வி ஒரு குடும்பத்திற்கு அளிப்பது போன்றது. பெண்ணுக்கு அளிக்கும் இருசக்கர வாகனம் ஒரு குடும்பத்திற்கு அளிப்பது போன்றது. அதனால் குடும்பம் நன்மை பெறுகிறது. மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு அதிகாரம் அளித்தலை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது. சுகாதாரம், விவசாயிகள், மீனவர்கள் நலன் ஆகியவற்றை இலக்காக வைத்து மத்திய அரசு திட்டத்தின் மூலம் தமிழக அரசு பயன்பெற்றுள்ளது.

பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பெண்கள் பயன்பெற்றுள்ளனர். உஜ்வாலா திட்டத்தின் மூலம் 9 லட்சம் தமிழக மக்கள் பயன்பெற்றுள்ளனர். சுயவேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் 70 சதவீத பெண்கள் பயன் பெற்றுள்ளனர். பெண்களுக்கு பேறு கால விடுப்பு 26 வாரமாக உயர்த்தப்பட்டுள்ளது. சூரிய சக்தி, தேசிய நெடுஞ்சாலை, கேஸ் வழங்கும் மத்திய அரசு திட்டத்தின் மூலம் மாநில அரசு பயன்பெற்றுள்ளது.

இவ்வாறு, பெண்களுக்கான மத்திய, மாநில அரசு திட்டங்களை பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.