டெல்லி செங்கோட்டையில் புது நிகழ்வாக கொடியேற்றி உரையாற்றிய மோடி!

டெல்லி செங்கோட்டையில் புது நிகழ்வாக கொடியேற்றி உரையாற்றிய மோடி!

டெல்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று மட்டும் கொடியேற்றி உரை நிகழ்த்துவது வழக்கம். ஆனால தற்போது புது நிகழ்வாக  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆசாத் ஹிந்த் சர்க்காரின் 75ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அதை ஒட்டி நடந்த  விழா வில் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர், மூத்த ஓய்வுபெற்ற வீரர்களை பிரதமர் மோடி கவுரவித்தார்.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி பேசிய போது, “இந்த ஆண்டு முதல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பெயரில் தேசிய விருது வழங்கப்படும். பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரண உதவிகள், மீட்புப் பணிகள் ஆகியவற்றை செய்யும்போது வியக்கத்தக்க செயல்களை புரியும் காவலர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்” என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், இந்த விருது, நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அத்துடன் ”புதிய இந்தியாவை உருவாக்கும்போதும், சுதந்திர போராட்டத்தின்போதும் மற்றவர்கள் அளித்த பங்களிப்பை மறந்துவிட்டு, அதனை பொருட்படுத்தாமல் ஒரே குடும்பத்தின் முயற்சிகளை முன்னிலைப்படுத்த பல முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று காங்கிரஸ் கட்சியின் தலைமையை மறைமுகமாக சாடினார்.

”கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த பாஜக அரசு அதிகம் உழைத்துள்ளதாகவும், சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற முடிவுகளை எடுக்கும் சக்தி இந்த அரசுக்கு மட்டுமே இருக்கிறது” என்று பெருமையுடன் கூறினார்.

மேலும்,”நேதாஜி அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதி கொண்டு இருந்தார். முக்கியமாக வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காததால் அவற்றின் மீது கவனம் செலுத்தினார். தற்போதைய பாஜக அரசும் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையடுத்து காங்கிரஸ் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிங்வி, “நேதாஜி மற்றும் வல்லபபாய் படேல் ஆகியோரின் பெயர்களை வைத்து மோடி அரசியல் செய்து கொண்டு இருக்கிறார். அவருக்கு வரலாறே தெரியவில்லை. ஆகையால், பிரதமரின் ஆலோசகர்கள் அவருக்கு வரலாற்று உண்மைகளைச் சொல்லிக் கொடுங்கள்.

இந்திய தேசிய சுதந்திரப் போராட்டத்தில் பாஜக பங்கேற்றது இல்லை. ஆனால், சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி மட்டும் பேசுகிறார்கள். தேசத்தின் மகன்களான நேதாஜி, அம்பேத்கர், வல்லபபாய் ஆகியோரை ஒரு குடும்பத்தின் நலனுக்காக மறந்துவிட்டதாக அவர் சொல்கிறார். இது மிகப் பெரிய அபத்தம்” என்றார்.

error: Content is protected !!