September 20, 2021

நாம் வளர்கிறோமே! – பிரதமர் மோடி ஹேப்பி

சர்வதே முதலீட்டாளர்கள் மாநாடு குஜராத்தின் காந்தி நகரில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு 5 நாள் வர்த்தக கண்காட்சியும் நடக்கிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 1,500 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. ருவாண்டா அதிபர் பால் ககாமே, செர்பியா பிரதமர் அலெக்‌சாண்டர், ஜப்பான் பொருளாதாரத்துறை அமைச்சர் சேகோ ஹிரோசீஜ், டென்மார்க் எரிசக்தி துறை அமைச்சர் லார்ஸ் கிலீலிஹோல்ட், கென்யா அதிபர் உகுரு கென்யதா, போர்ச்சுக்கல் பிரதமர் அன்டானியோ காஸ்டா, ரஷ்ய துணை பிரதமர் டிமித்ரி ரோகேசின், போலந்து துணை பிரதமர் பாய்டர் கிளின்ஸ்கி, தெற்காசிய விவாகரங்களுக்கான அமெரிக்க இணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் ஆகியோர் வந்துள்ளனர். இவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி வருகிறார்.

modi jan 11

மேலும் அங்கு நடந்த “எழுச்சிமிகு குஜராத் சர்வதேச மாநாடு’ நிகழ்ச்சியில், பேசிய போது: “மாநாட்டுக்கு வந்துள்ள 500 நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகள், உலகத் தலைவர்களை காணும்போது, இந்நகரம் கிழக்குப் பகுதியில் உள்ள டாவோஸ் நகரம் போல் உள்ளது (ஸ்விட்சர்லாந்தில் உலக வர்த்தக அமைப்பின் ஆண்டு மாநாடு நடைபெறும் நகரத்தின் பெயரே டாவோஸ்). இந்தியாவில் வர்த்தகத்துக்கான உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கும், இந்தியாவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் நான் முன்னுரிமை கொடுத்து வருகிறேன். எளிதில் வர்த்தகம் செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து எனது அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு எனது அரசு தீவிர உறுதிபூண்டுள்ளது.

இந்தியாவின் வலிமை, மக்கள், ஜனநாயகம், மற்றும் தேவை ஆகியவற்றில்தான் உள்ளது. ஜனநாயகத்தால் விரைவான நிர்வாகத்தை அளிக்க முடியாது என சிலர் கூறலாம். ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இது சாத்தியம் என்பதை நாங்கள் பார்த்துள்ளோம். மேக் இன் இந்தியா பிரசாரம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தற்போது உற்பத்தி துறையில் 6வது பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டு காலமாக, இந்திய வளத்தை பயன்படுத்துவதிலும், பொருளாதாரத்தைச் சீர்படுத்துவதிலும் மத்திய அரசு ஓய்வின்றி தொடர்ந்து பணியாற்றுகிறது. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை, வெளிநாட்டு முதலீடுகள் போன்ற முக்கிய பேரியல் பொருளாதார அம்சங்களில் கிடைக்கும் நல்ல பயன்கள் ஊக்கமளிப்பவையாக உள்ளன.

உலகிலேயே இந்தியா மிகவும் வளர்ச்சியடைந்து வரும் முக்கியப் பொருளாதார சக்தியாக திகழ்கிறது. உலக அளவில் பொருளாதார நிலை மந்தமாக இருந்தபோதிலும், இந்தியா சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்தது; மேலும், உலகச் சந்தையில் ஒளிவீசும் பகுதியாக இந்தியா தற்போது உள்ளது. அதேபோல், உலக வளர்ச்சியை இயக்கும் கருவியாகவும் இந்தியா பார்க்கப்படுகிறது.

உலகில் தற்போது உள்ள மிகவும் வெளிப்படையான பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இதுவரையிலும் 13 ஆயிரம் கோடி டாலர்கள் அன்னிய நேரடி முதலீடு மூலம் கிடைத்துள்ளது. இது முந்தைய 2 நிதியாண்டு காலங்களில் செய்யப்பட்ட முதலீடுகளுடன் ஒப்பிடுகையில், 66 சதவீதம் அதிகம். இந்தியப் பொருளாதாரத்தின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையே இது வெளிப்படுத்துகிறது என்றார் பிரதமர் மோடி.