March 26, 2023

பிரதமர் மோடியின் திருப்பூர் பேச்சு முழு விபரம்!

ஐஸ் கிரீமுக்கும், மொபைல் ரீசார்ஜுக்கான பேமிலி பேக்கேஜ் தான் இதுவரை இருந்தது. ஆனால், சிலர், தாங்கள் செய்த குற்றத்திற்காக கைதாவதிலிருந்து தப்பிக்க, குடும்பத்துடன் சென்று ஜாமின் பெற்று வருகின்றனர் என்று திருப்பூரில் பல்வேறு நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றிய போது குறிப்பிட்டார்.

ஆந்திராவின் குண்டூரில்நடைபெற்ற பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார். விமான நிலையத்தில், பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓபிஎஸ், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பலர் வரவேற்றனர். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் சென்ற பிரதமர் மோடி,திருப்பூரில் அமையவுள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை நாட்டிற்கு அற்பணித்தார். அதை தொடர்ந்து, சென்னை, டி.எம்.எஸ்., – வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில், தமிழர்களையும், விடுதலை போராட்ட வீரர்களையும் புகழ்ந்து தன் உரையை தொடங்கிய நரேந்திர மோடி, “கோவையில் வசிக்கும் ஜெயின் சமூக ஆச்சார்யா மகாமுனிக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சியில் ஒருங்கிணைந்த ஏர்போர்ட் வளாகம் அமை வதற்கான அடிக்கல் நாட்டிவிட்டு வந்திருக்கிறேன். இதன் மூலம் திருச்சி விமான நிலையம் மேம்படுத்தப்படும். திருப்பூர் மற்றும் சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ.சி., மருத்துவமனைகள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளன. புதிய மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சென்னையில் புதிய எரிபொருள் பைப்லைன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.முறைசாரா தொழிலா ளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், ராணுவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த முந்தைய காங்கிரஸ் அரசு, நாட்டின் பாதுகாப்பு பற்றிய நடவடிக்கைகளில் கூட, இடைத்தரர்கள் மூலம், கடல் துவங்கி ஆகாயம் வரை ஊழல் செய்தார்கள். தமிழகத்தில் பாதுகாப்பு பூங்கா அமைய உள்ளது. இதில், ராணுவ தடவாளங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதன் மூலம், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம். இதற்கு முன் ஆட்சி செய்த காங்., அரசு, ராணுவ வீரர்களை கேவலப்படுத்தியது. அவர்களின் தியாகத்தை கொச்சைபடுத்தியது. அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அவர்களின் 40 ஆண்டு கால கோரிக்கையை, பா.ஜ.க, அரசு நிறைவேற்றியுள்ளது.

நம் ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை காங்கிரசார் கொச்சைபடுத்தினர்.முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசுகையில், நம் ராணுவம், ராணுவ புரட்சி நடத்த முயன்றதாக கூறினார். நம் ராணுவ வீரர்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபடுவரே தவிர ஒரு காலத்திலும் இப்படிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள். சாகர் மாலா திட்டத்தின் மூலம், இந்தியாவின் கடல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டங்களை நாடு முழுவதும் அமல் படுத்தியதன் மூலம், நாட்டின் போக்குவரத்து துறை மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் துவக்கப் பட்டுள்ளது.சாலைகள் அமைக்கும் பணி, இரு மடங்கு துரிதப்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஐஸ் கிரீமுக்கும், மொபைல் ரீசார்ஜுக்கான பேமிலி பேக்கேஜ் தான் இதுவரை இருந்தது. ஆனால், சிலர், தாங்கள் செய்த குற்றத்திற்காக கைதாவதிலிருந்து தப்பிக்க, குடும்பத்துடன் சென்று ஜாமின் பெற்று வருகின்றனர். இந்த மோடி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். மக்கள், பா.ஜ.க,வுக்கு ஓட்டளிக்கமாட்டார்கள் என கூறி வரும் எதிர்க்கட்சிகள் எதற்காக மெகா கூட்டணி அமைக்க வேண்டும். எதற்காக மோடிக்கு எதிராக தொடர்ந்து அவதுாறு பேச வேண்டும்?

நேர்மையான ஆட்சியையும், ஆட்சியாளரையும் கண்டு எதிர்க்கட்சிகள் பயந்து நடுங்குகின்றன. கலப்பட மருந்தை மக்கள் எப்படி ஏற்க மாட்டார்களோ, அதே போல், இந்த கலப்பட கூட்டணி யையும் அவர்கள் ஏற்க மாட்டார்கள். குடும்ப அரசியல், வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள், தங்கள் குடும்ப நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளன.

விவசாயிகள் நலனுக்காக இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது; பல திட்டங்களை அறிவித்தும் உள்ளது. நாட்டில் திட்டமிட்டே பதற்றத்தை ஏற்படுத்தும் பணியில், எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.இதுபோன்ற கூச்சல்களால், விவசாயி களுக்கு எந்த நன்மையும் நடக்கப்போவதில்லை. இந்த பட்ஜெட்டில், விவசாயிகள் நல நிதி என புதிய திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு, 6,000 ரூபாய், சிறிய விவசாயிகளுக்கு கிடைக்கும் படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன. ஏனென்றால், விவசாயிகள் ஏழைகளாக இருக்கும் வரைதான் அவர்கள் அரசியல் செய்ய முடியும். விவசாயிகளை மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கத்தான் செய்யும். 10 ஆண்டுகளில், 7 லட்சத்து, 50 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும் படியான திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதிலிருந்தே, விவசாயிகளுக்கு யார் அதிக நன்மை செய்துள்ளனர் என்பது புரிந்து விடும்.

மீனவர் நலன் கருதி தனி இலாகா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக ஏன் இதைப்பற்றி யோசிக்கவில்லை.

ஏற்கனவே அமலில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையில் எந்த மாற்றமும் செய்யாமல், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், பொதுப் பிரிவு ஏழைகளுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமூக நீதி என்பது கணக்கியல் அல்ல. இது நம் நம்பிக்கையின்எடுத்துக்காட்டு. வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் சில எதிர்க்கட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். காங்., – தி.மு.க., ஆட்சி காலத்தில், பதவி உயர்வில், எஸ்.சி., – எஸ்.டி.,யினருக்கான இட ஒதுக்கீட்டு முறை ஒழிக்கப்பட்டது. ஆனால், அந்த சமூகத்தினர் நலன் கருதி, வாஜ்பாய் காலத்தில் அந்த முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்கள் இலக்கு. இது தான் பா.ஜ.க, அரசின் எதிர்கால திட்டமும் கூட. இங்கு கூடியிருக்கும் கூட்டத்தினருக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். வளமான பாரதம் உருவாக உறுதி எடுப்போம். பாரத் மாதா கீ ஜெய்” என கூறி உரையை முடித்தார்.