புதிய கல்வி கொள்கை ; பிரதமர் மோடி விளக்கம்!
புதிய கல்வி கொள்கை மூலம் மாணவர்களின் பாடச்சுமை குறையும் என்றும் தாய்மொழி கல்வியை புதிய கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்திற்கான, ‘புதிய கல்விக் கொள்கை -2020’க்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 2 நாட்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை, ஒருங்கிணைந்த தொழிற்கல்வி, சமஸ்கிருதத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தல் போன்ற அம்சங்கள் பல மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளன.
இந்நிலையில், இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப் போட்டிக்கான நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றி னார். அப்போது, புதிய கல்விக் கொள்கை குறித்து விளக்கமளித்து அவர் பேசியது இதுதான்:
நாட்டின் கல்வித் தரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். நமது கல்வி முறை மாணவர்களுக்கு மேம்பட்டதாகவும், நவீனமானதாகவும் மாற்றுவதே எங்கள் முயற்சி. 21ம் நூற்றாண்டு அறிவின் சகாப்தம். கற்றல், ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதற்கான நேரம் இது. இதைத்தான் புதிய தேசிய கல்விக் கொள்கையும் வலியுறுத்து கிறது. 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் விருப்பத்தை புதிய கல்விக் கொள்கை பிரதிபலிக்கிறது. புதிய கல்விக் கொள்கை, மாணவர்களை கட்டாயப்படுத்தாமல், அவர்கள் விரும்பும் பாடங்களை பயில வழிவகுக்கிறது. முந்தைய கல்வி முறை மாணவர்கள் விரும்பும் பாடங்களை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், புதிய கல்விக் கொள்கையில், கலைக்கல்லூரி மாணவர்கள் கணிதத்துடன் மனிதநேய பாடப்பிரிவை எடுத்து படிக்கலாம். அல்லது ஒரு அறிவியல் பாடப்பிரிவு மாணவர் வரலாற்றை விருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம். வெறும் ஒரு பாடம் மட்டுமே ஒரு மாணவனின் திறமையை தீர்மானித்து விடாது. புதிய கல்விக் கொள்கையில், பொதி மூட்டை போல புத்தகப் பையை சுமந்து செல்வதும் குறைக்கப்படுகிறது. தற்போதைய கல்வி முறையில் உள்ளது போன்று வெறுமனே படிப்பை மனப்பாடம் செய்வதால் ஒரு பலனும் இல்லை. வெறும் பாடத்தின் அறிவு மட்டும் மனிதனை உருவாக்கி விடாது. ஏழைகள், உதவி தேவைப்படு வோருக்கான சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்காக, ‘வாழ்தலை எளிதாக்கும்’ இலக்கை அடைய தேசத்திற்கு இளைஞர்களின் பங்கு முக்கியமானது.
The National Education Policy, 2020 reflects India’s aspirations and will contribute to improving the education sector. pic.twitter.com/WKiR3yiNr1
— Narendra Modi (@narendramodi) August 1, 2020
கல்விக் கொள்கையில் மாற்றங்களால் இந்திய மொழிகள் மேலும் வளரும். புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். பல வளர்ந்த நாடுகள் அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கின்றனர். தாய்மொழியின் மூலம்தான் ஒருவரின் முழு திறமையும் வெளிப்படும். புதிய கல்விக் கொள்கையில், 5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளியில் உள்ளூர் மொழியுடன் பிராந்திய மொழியுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய்மொழி மட்டுமின்றி, பிராந்திய மொழி அறிவையும் மாணவர்கள் பள்ளிப்பருவத்திலேயே பெற முடியும். இந்தியாவின் பலதரப்பட்ட மொழிகளின் மேன்மையை அறிந்து கொள்ள முடியும்.
வேலைவாய்ப்பை தேடாமல், வேலை வாய்ப்பை உருவாக்கும் ஆற்றல் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்குவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். கற்பது, கேள்வி கேட்பது, தீர்வை தருவது – ஆகிய மூன்றையும் மாணவர்கள் விடக் கூடாது. நீங்கள் கற்றுக் கொள்ளும் போதுதான், கேள்வி ஞானத்தை பெறுவீர்கள். புதிய கல்விக் கொள்கை மூலம், அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும். மாணவர்களின் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அனுபவங்கள் மிக இனிமையானதாகவும் விசாலமானதாகவும் மாற்றப்படும். உங்களின் இயல்பான ஆர்வங்களே உங்களை வழிநடத்திச் செல்லும். இன்றைய இளைஞர்களின் மீது அபார நம்பிக்கை உள்ளது. இவ்வாறு புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி உரையில் தெரிவித்துள்ளார்.