நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு 18 மாநிலங்களில் தடை!

நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு 18 மாநிலங்களில் தடை!

நாம் அனைவருமே ஏற்கனவே அறிந்ததுதான். நெகிழிப் பொருள்கள் எளிதில் அழிவதில்லை. சரா சரியாக ஒரு பாலித்தீன் பையின் பயன்பாட்டுக் காலம் 12 முதல் 20 நிமிடங்களே என்றும் அவை அழிய 1000 ஆண்டுகளுக்கும் அதிக காலம் பிடிக்கும் என்றும் தெரிந்த காரணத்தினாலேயே நம் இந்தியாவின் 18 மாநிலங்களில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு முழுமையாக தடை விதிக்கப் பட்டுள்ளது. 5 மாநிலங்களில் மதம் மற்றும் வரலாற்று தலங்களில் பிளாஸ்டிக் பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் தெரிவித்தது.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே கோயல் தலைமையிலான அமர்வு முன் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்று விளக்கம் அளித்தது. அதன் விவரம் இதோ :

தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள் பிளாஸ்டிக் பை பயன்பாட்டிற்கு முழுமையாக தடை விதித்துள்ளன. ஆந்திரபிரதேசம், குஜராத், ஜம்மு காஷ்மீர், கேரளா மற்றும் மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் மதம் மற்றும் வரலாற்று தலங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அசாம், பீகார், கோவா, மணிப்பூர், மேகாலயா, புதுசேரி மற்றும் தெலுங்கானா ஆகிய 7 மாநிலங்கள் பிளாஸ்டிக் பை பயன்பாட்டிற்கு தடை விதிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஒடிசா மாநிலம் எந்த விவரத்தையும் வழங்கவில்லை.

பிளாஸ்டி கழிவு மேலாண்மை விதிமுறைகள் 2016 -ஐ அமல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை இதுவரை 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பித்துள்ளன.

மேலும் தமிழகம், சண்டிகர், தாமன் மற்றும் டையூ, ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிளாஸ்டி கழிவு மேலாண்மை விதிமுறைகளை மீறியவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதி இல்லாத இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் உரிமம் பெறாத பிளாஸ்டிக் தயாரிப்பு ஆலைகள், மறுசுழற்சி மையங்கள் செயல்படுவதை தடுக்கும்படி மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்தது.

விசாரணை முடிவில் மாசு கட்டுப்பாடு வாரியம் வரும் செப்டம்பர் 30ம் தேதி கூடுதல் நிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களை வலியுறுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. விசாரணை அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Posts

error: Content is protected !!