September 27, 2021

சுவர் பூச்சை எளிமையாக செய்து முடிக்க உதவும் டெக்னாலஜி!

தற்போது அமைக்கப்படும் கட்டிட அமைப்புகளில் பெரும்பாலானவை ‘பிரேம்டு ஸ்ட்ரக்சர்கள்’ என்று சொல்லப்படும் முறையில் இருக்கின்றன. அதாவது ‘பில்லர்கள்’, ‘காலம்கள்’, ‘பீம்கள்’, ‘லிண்டல்’ போன்ற செங்குத்தான மற்றும் குறுக்கு வசமான தூண்கள் கொண்டு நீளம், அகலம் மற்றும் உயரங்களில் அமைக்கப்படும் முறையாகும். அந்த ‘பில்லர்களுக்கு’ இடையில் செங்கல் அல்லது பிற வகை சிமெண்டு பிளாக்குகள் கொண்டு சுவர் எழுப்பி சிமெண்டு பூச்சு கொண்டு பூசப்படுவது வழக்கம்.

wall tec july 13

தொழில் நுட்ப வளர்ச்சி

பழைய காலங்களில் கட்டிடங்கள் நான்கு புறமும் இருக்கும் அஸ்திவாரத்தின் மீது சுவர்கள் எழுப்பிய பிறகு அதன்மேல் மேற்கூரை அமைக்கப்படும் வழக்கம் இருந்து வந்தது. ‘சிவில் இன்ஜினீயரிங்’ எனப்படும் கட்டிட பொறியியல் நுட்பம் வளர்ச்சியடைந்த பிறகு பல்வேறு புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் விளைவாக சுவர்கள் நேரடியாக கட்டமைப்பின் எடையை தாங்கும் காரணத்தால் அவற்றில் எளிதாக பாதிப்புகள் ஏற்பட்டு விடுவது அறியப்பட்டது. அதனால் சுவர்கள் அமைப்பதற்கு பதிலாக இரும்பு கம்பிகள் கொண்டு ‘சென்டரிங்’ வேலைகள் செய்யப்பட்ட கான்கிரீட் ‘பில்லர்கள்’ அமைக்கப்பட்டு சுவர்களால் நிரப்பப்பட்டன.

மேல் பூச்சு அவசியம்

‘பில்லர்களுக்கு’ இடையில் சுவர்கள் அமைத்த பிறகு ‘பிளாஸ்டரிங்’ எனப்படும் கலவை பூச்சு வேலையை செய்தாக வேண்டும். ஒரு வீடு முழுமையான தோற்றத்துக்கு வர வேண்டுமென்றால் வெளிப்பூச்சு வேலைகள் அவசியம் செய்திருக்க வேண்டும். கலவை பூசுவது என்பது நிறைய மனித உழைப்பை தந்தாக வேண்டிய வேலையாகத்தான் எப்போதும் இருந்து வருகிறது. அதுவும் ஒரு அங்குல கனத்தில் சிமெண்டு மணல் கலவையை வீட்டின் ஒரு அறையிலுள்ள சுவருக்கு பூச குறைந்த பட்சம் மூன்று நபர்கள் தேவைப்படுவார்கள். மேல் பூச்சு வேலை முடிந்த பிறகு அது ‘லெவல்’ செய்யப்பட வேண்டும். பிறகு ‘சிமெண்டு’ குழம்பு கொண்டு வழவழப்பாக பூசுவதும் அவசியம். பெரிய அளவு கட்டிடம் என்றால் ஆட்களின் தேவை இன்னும் அதிகரிக்கும்.

புதிய தொழில் நுட்பம்

சுவர் பூச்சை எளிமையாக செய்து முடிக்க ‘மோர்ட்டர் பம்பிங் மெஷின்’ மற்றும் ‘ஆட்டோமேட்டிக் வால் பிளாஸ்டரிங்’, ‘சிமெண்டு ஸ்ப்ரேயர்’ போன்ற நவீன கருவிகள் இப்போது பயன்பாட்டில் இருக்கின்றன. அவை மிகவும் குறைவான மனித சக்திகளை கொண்டு பூச்சு வேலையை முடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் பட்ஜெட்டுக்குள் வேலைகளை விரைவாக முடிக்க உதவுகின்றன.

https://www.youtube.com/watch?v=6_LrKfufF8A

‘மோர்ட்டர் பம்பிங் மெஷின்’

கான்கிரீட் கலவையை இந்த கருவியில் போட்டுவிட்டால் தண்ணீர் அளவு சரியாக இருக்குமாறு தானாகவே சரி செய்துகொள்ளக்கூடிய தன்மை பெற்றது. மேலும் இக்கருவி குறைவான மின்சக்தியில் இருவர் மட்டும் இயக்கப்படுவதுபோல தயாரிக்கப்பட்டுள்ளது. எளிதில் எடுத்து செல்வதுபோன்று இருப்பதும், ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்கும் இரைச்சல் இல்லாத மின்மோட்டார் இயக்கமும் இதில் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

‘சிமெண்டு ஸ்பிரேயர்’

கட்டமைப்புகளின் உட்புறம் மற்றும் வெளிப்புற பூச்சுகள் எதுவாக இருந்தாலும் இந்த உபகரணத்தை கொண்டு சுலபமாக அதை செய்து முடிக்கலாம். அதற்கு ஏற்றவாறு ‘மல்டி பர்ப்பஸ்’ உபகரணமாக இதை வடிவமைத்துள்ளார்கள். சுவர்களுக்கு ‘பெயிண்டு’ வகைகள் பூசுவதாக இருந்தாலும் அதற்கும் இக்கருவி பொருத்தமாக இருக்கும். கருவியின் இயக்கத்தின்போது அதன் ரப்பர் குழாய் மற்றும் அதன் ‘நாஸில்’ எனப்படும் குழாய் முனை ஆகியவற்றை அடிக்கடி பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

‘ஆட்டோமேட்டிக் வால் பிளாஸ்டரிங்’

இவ்வகை உபகரணம் இப்போதுதான் பரவலாக உபயோகத்தில் வந்து கொண்டிருக்கிறது. குறைவான மனித சக்தியைக்கொண்டு உட்புறம் மற்றும் வெளிப்புற சிமெண்டு கலவையை பூச கச்சிதமான கருவியாக உள்ளது. சரியான கலவை கலக்கப்பட்டு கருவியின் மேற்புறமாக போட்டு இயக்கினால் சுவர் பூச்சு வேலையானது விரயங்கள் ஏதுமில்லாமல் முடிக்கப்படும். ஆட்கள் செய்யும் பூச்சு வேலைகளோடு ஒப்பிடும்போது பல மடங்கு விரைவாகவும் செலவு குறைவாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.