Exclusive

எழுத்தும் கழுத்தும் கலைஞரின் இரட்டைக் குழல் துப்பாக்கி!

லைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையிலான ஈர்ப்புமிகுத் தொடர்புகளின் தமிழக அரசியல் வரலாறு பாசப்பூர்வமானது. ஆனால் தற்போது அந்த நடைமுறையே முடைமுறை என்றவாறு முடங்கி விட்டது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் தொண்டர்களையோ, பொதுமக்களையோ விளித்துப் பேசும்போது பயன்படுத்தும் வாசகங்கள் மிகமுக்கியமானவை. துவண்டு கிடக்கும் தொண்டனைத் துடித்தெழு வைக்கும் தாரக மந்திரம் அது. “பெரியோர்களே! தாய்மார்களே!” என்று இருந்த விளிப்பு சாதாரணமாகத் தொடங்கியது.  பெரியார் கூட தனது விடுதலை நாளிதழில் கட்டுரைகளிளோ தன் கையொப்பமிட்டக் கடித அறிக்கைகளிலோகூட இதில் கவனம் செலுத்தவில்லை. அண்ணா தான் முதன்முதலாக தன் தொண்டர்களை நோக்கி “தம்பி!” என்ற அன்பொழுகும் பாசப்பதத்தைப் பயன்படுத்திக் கடிதங்கள் எழுதத் தொடங்கினார். அவரின் மறைவுக்குப் பின்னர் அவர், “தம்பிக்கு” என்று குறிப்பிட்டு எழுதிய பல கடிதங்களே நூல்களாகி நுகர்வு பெற்று வருகின்றன.

அவரின் மறைவிற்குப் பின்னர் 1969ல் கலைஞர் முதல்வர் பொறுப்பை ஏற்றார். அண்ணா இல்லாத இடத்தில் அவர் அதை நிரப்பினார். முரசொலியில் அவரும் கடிதம் எழுதி வந்தார். ‘கலைஞர் கடிதம்’ என்ற பகுதி முரசொலியில் தினமும் வெளிவரும். அதனைப் படிக்கவென்றே ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள டீ கடைகள், சவரக் கடைகளில் கழகக் கண்மணிகள் விழியார்வம் பொங்கக் கலைஞரின் மொழி தேடி அலைவர்.

1967ஆம் ஆண்டு திமுக, தேர்தல் களத்தைச் சந்தித்துக் கொண்டு இருந்தது. “உன்னைத் தான் தம்பி…! 67ல் நம்பி இருக்கிறேன்” என்று அண்ணா தன் கழகத் தொண்டர்களாம் தம்பிகளை விளித்துக் கடிதங்கள் எழுதிக் கொண்டு இருந்தார். அவர் அண்ணாதுரை என்றாலும் கழகத்தார் அவரை அன்பொழுக “அண்ணா” என்றே விளித்து வந்தனர். அந்த பாசப்பெருக்கை ஏற்ற அண்ணாவும் “தம்பி” என்றே அவர்களைக் குறிப்பிட்டார். அந்த மகிமை மந்திரத்தில் மயங்கிக் கட்டுண்ட திமுக தொண்டர்கள் பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று திமுகவுக்கு வெற்றி தேடித் தந்தனர். அண்ணாவுக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே அந்த அளவுக்கு இதய ஈர்ப்பு மிக்க உருக்கமும் நெருக்கமும் உலவிக் கொண்டே இருந்தன. தலைவனின் சொல்லே தாரகமந்திரம் என தொண்டர்கள் டீயும் பன்னும் மட்டுமே பசியாற எடுத்துக் கொண்டு விடியவிடிய கட்சிப் பணியாற்றியதைத் தமிழகம் தரிசனம் செய்தது.

இதனை நன்குணர்ந்த கலைஞர் தானும் அதே பாணியைப் பின்பற்றினார். அண்ணாவோ, “தம்பி!” என்ற பதத்தைப் பயன்படுத்தி விட்டதால் மாற்றுச் சொற்றொடரைக் கையாளக் கலைஞர் எண்ணினார். அதன் விளைவு தான் அவர் “உடன்பிறப்பே!” என்று எழுதத் தொடங்கினார். ஒரு காலகட்டத்துக்குப் பிறகு திமுகவினர் எனில் அவர்களை உடன்பிறப்புகள் என்ற மாற்றுச் சொற்றொடரால் குறிப்பிடப்படும் அளவுக்கு அதற்கு உயிர்ப்பு இருந்தது. அவசர நிலை அமலில் இருந்த 1975-77 ஆகிய காலகட்டத்தில் ‘முரசொலி’ நாளிதழில் வெளியான கலைஞர் கடிதங்களோ…இலக்கியப் பாணியிலான சூசக வாசகக் களஞ்சியங்கள். அவை முனைவர் பட்டப்படிப்புக்கான ஆய்வுத் தரவுகள் என்ற தரமிகுத் தகுதி பெற்றவை. கழுத்து வழிப் பேச்சும் எழுத்து மொழி வீச்சும் கலைஞரின் இரட்டைக் குழல் துப்பாக்கி எனலாம்.

எம்ஜிஆர் தனிக்கட்சித் தொடங்கி நடத்திய நேரத்தில் திண்டுக்கல்லில் வெற்றிக்கான முகவரியைப் பதித்த பின், 1977ல் கோட்டையின் கோவேந்தனாகவே தரமுயர்ந்து விட்டார். ஒருபக்கம் ஆட்சி அதிகாரத்தில் கவனத்தைச் செலுத்தி வந்த எம்ஜிஆர், மிகக் கவனமாகத் தன் கட்சி சரிந்துபோய் விடாதபடி பொத்திப் பொத்திப் பாதுகாத்து வந்தார். மற்ற அனைத்து அம்சங்களையும் அவர் போகிறபோக்கில் அணுகி விடுவார். கலைஞரின் சாதுரியமான சாகச அரசியல் தான் அவரின் தனிக் கவனச் சவாலாகும். கலைஞரின் ஒவ்வோர் அடி எடுப்பையும் எம்ஜிஆர் மிகக் கவனமாக அணுகி, அதனை எதிர்கொண்டு வந்தார். கலைஞரின் அரசியல் வியூகங்களுக்கு ஏற்பத்தான் எம்ஜிஆரின் அரசியல் ஆட்டம் களைகட்டும்.

அப்போது கலைஞர், மேடைகளில் கழுத்து முழக்கங்களையும் ஏடுகளில் எழுத்து வழக்கங்களையும் கொண்டு, எம்ஜிஆரைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அப்போது அதை உன்னிப்பாகக் கவனித்த எம்ஜிஆர், “அதிமுக தரப்பில் இருந்து இதற்கும் பதிலடி தரவேண்டுமே!” என்று சிந்தித்தார். அப்போது எல்லாம் கலைஞரின் பொதுக் கூட்டங்களில் கலைஞர் பேசும் முன், “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!” என்று குறிப்பிடுவார். இந்த வாசகத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு மேடை எதிரில் அமர்ந்து இருக்கும் தொண்டர்கள், பலத்த கரவொலி எழுப்பித் தங்கள் ஆனந்த ஆரவாரத்தை அடையாளம் காட்டுவர்.

இதனை எம்ஜிஆர் பலமுறை கவனித்துள்ளார். எனவே தானும் இதுபோன்ற பாணியைக் கடைப்பிடிக்க கருதினார். அவரும் தன் மேடைப் பேச்சின் தொடக்கத்தில் “என் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளே!” என்று குறிப்பிடுவார். இதுகுறித்த ஒரு கேள்விக்குப் பதில் அளித்த எம்ஜிஆர், “நான் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பெருமளவில் ரத்தம் விரயமாகி வெளிப்பட்டு விட்டது. என்னைக் காப்பாற்ற பல தொண்டர்கள் ரத்தம் கொடுத்தனர். அவர்கள் தத்தம் அளித்த ரத்தத்தினால் தான் நான் உயிர் பிழைத்தேன். எனவேதான் அவர்களை உள்ளடக்கிய அதிமுக தொண்டர்களை என் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளே! என்று குறிப்பிடுகிறேன்” என்றார். இந்த வாசகங்களை எம்ஜிஆர் மேடை உரையின் போது குறிப்பிட்ட சமயங்களில், தொண்டர்கள் அன்பு நெகிழ்ச்சியால் கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்து மகிழ்ச்சி அடைவர்.

கலைஞரின் கழுத்து முழக்கத்துக்குப் பதிலடியாக எம்ஜிஆர் வழி கண்டுபிடித்துக் கடைபிடிக்கத் தொடங்கினார். கலைஞர் கடிதத்துக்கு பதிலடி தரவேண்டுமே! அப்போது தான் அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ‘அண்ணா’ நாளிதழில் நாஞ்சில் மனோகரன் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். அதனை ‘நாஞ்சிலார் கடிதங்கள்’ என்றே குறிப்பிடலாம். எம்ஜிஆரின் யோசனைப்படி தொண்டர் ‘விளிப்புக்கு’ ஒரு வார்த்தை தேவைப்பட்டது. மண்டையைக் குடைந்து மந்திரச் சொல்லைத் தேடிய நாஞ்சிலார் இறுதியில் “அடலேறே!” என்ற வார்த்தையைப் பயனபடுத்தத் திட்டமிட்டார். எம்ஜிஆரும் அதற்குப் பச்சைக் கொடி காட்டினார். எனவே அந்த வார்த்தையே அதிமுகவினரை விளிக்கும் நாஞ்சில் மனோகரனின் கடிதத் தொடராயிற்று. காலையில் கலைஞர் கடிதத்தில் வரும் விமர்சனங்களுக்கு மாலையே ‘அண்ணா’ பத்திரிகையில் “அடலேறே!” பகுதியில் நாஞ்சில் மனோகரன் பதிலடி கொடுத்து விடுவார்.

இந்த இரு கடிதங்களில் ஒருவரையொருவர் நாகரீகம் குன்றாதபடி, கண்ணியமான வாசகங்களைக் கொண்டு உரை மோதல் நடத்திக் கொள்வர். இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் உண்டு. இந்த கடிதங்களின் வாயிலாக கலைஞரும் நாஞ்சிலாரும் தத்தம் தொண்டர்களுக்குச் சில நுட்பமான கட்சி நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டி விடுவர். அந்தந்த கட்சிப் பேச்சாளர்கள் இந்த அணுகுமுறையைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் தங்களின் மேடைப் பேச்சுகளை வார்த்து வைத்துக் கொண்டு வாயாடுவர். கட்சி உறுப்பினர்களும் இதற்கு ஏற்ப கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

இப்போது என்ன நிலைமை? கலைஞர் இல்லை. எனவே கலைஞர் கடிதம் இல்லை. எம்ஜிஆர் மறைந்து விட்டார். இவ்விரு ஆளுமைகளில் மயிலிறகு மோதல் போக்கு, அவர்களின் ஆட்சிக் காலத்திற்குப் பின்பு மறைந்து போனது. இப்போதோ ஆளும் கட்சிக்கு என இன்றும் முரசொலி உண்டு. ஆனால் கலைஞர் காலத்துப் பாணியில் கடிதம் இல்லை. எம்ஜிஆர் காலத்தில் அவர் 1976ல் அண்ணா நாளிதழைத் தொடங்கினார். தானும், நாஞ்சிலாருமாகக் கடிதங்களை எழுதினர். பின் நாஞ்சிலார் திமுகவுக்குச் சென்று மிகப்பெரும் ஆளுமையாக இருந்து மறைந்து விட்டார். அதிமுக தரப்பில் ‘அண்ணா’ போய் ‘நமது எம்ஜிஆர்’ வந்தது. அதன்பின்னர் ‘நமது அம்மா’ வந்தது. எனினும் எம்ஜிஆர் காலத்து நுட்பமான கட்சி நிலைப்பாடுகளைத் தம் கட்சியினருக்குத் தெரிவிக்க வழிஇல்லை. எனவே திமுக, அதிமுக என இரு கட்சியினருமே ஒவ்வொரு திடீர் அரசியல் திருப்பத்தின் போதும் தமது கட்சி நிலைப்பாடு என்ன என்று தெரிந்து கொள்ள முடியாமல் அவர்கள் தயங்கித் தயங்கித் தான் அடிஎடுத்து வைக்கின்றனர்.

கலைஞரின் பிறந்த நாள் விழா குறித்து முகஸ்டாலின் தன் தொண்டர்களுக்கும் கடிதம் எழுதி, “உங்களில் ஒருவன்” என்று தன்னைக் குறிப்பிட்டுக்கொண்டது நல்ல ஆரம்பம். தலைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையே இருந்த பாசபூர்வ பந்தமாகத் தான் கடித எழுத்துக்கள் உலவி வந்தன. அவற்றை அச்சில் கண்டு மெச்சி, உச்சி மோந்த தொண்டர்கள், இப்போது ஏங்குவதைத் தலைவர்கள் அறிவார்களா?

-நூருல்லா ஆர். ஊடகன்
03-06-2021

aanthai

Recent Posts

ஒடிசா : சப் இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழப்பு

ஒடிசாவில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் நப தாஸ் சிகிச்சைப்பலனின்றி உயிரிந்தார்.

9 hours ago

U19T20 WorldCup: கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு 5 கோடி பரிசு!

ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் எடிஷனில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து முதல் சாம்பியன்ஷிப்…

9 hours ago

விடுதலை பார்ட் 1 & பார்ட் 2′ டப்பிங் பணிகள் தொடங்கிடுச்சு!

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடித்திருக்கும் 'விடுதலை பார்ட் 1…

10 hours ago

பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப DMK MP-க்களுக்கு முதல்வர் கொடுத்த உத்தரவு!

தமிழ்நாடு முதலமைச்சர்,மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (29.1.2023), சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலிமாறன் வளாகத்தில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள்…

10 hours ago

அ..தானி : என்ன செய்யப் போகிறது செபி? என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

சந்தேகங்கள், யூகங்களின் அடிப்படையில் சில ஆண்டுகளாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும், ஆம் அவை உண்மைகளே என்று தெளிவாக்கி இருக்கிறது ஹின்டன்பர்க்…

12 hours ago

ரஜினிகாந்த் வக்கீல் நோட்டீஸ் பின்னணி!

”சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.. சின்ன குழந்தையும் சொல்லும்” 69 வயதில் ஒரு மனிதன் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதிலும்…

1 day ago

This website uses cookies.