குழந்தைகளைப் பள்ளிக் கூடம் போக உதவுங்க ஊடக ஊழியர்களே!
பள்ளி மாணவர்களின் படிப்பில் விளையாடும் சமூக ஊடகங்கள் . கல்வியில் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க இருக்கும் குழந்தைகள். பள்ளிகள் திறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை… ஆனால் பள்ளியை மூட வைப்பதற்கு மொத்த ஊடகமும் கங்கணம் கட்டி வேலை செய்கிறது. மற்ற துறைகள் எல்லாம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஜூலை மாதத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்போதெல்லாம் எந்த துறையிலும் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் என்று எந்த ஒரு ஊடகமும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கவில்லை. தொழிற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் திறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது அங்கும் கொரோனா பாதித்தவர்கள் என்று எந்த ஒரு ஊடகமும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கவில்லை.
ஆனால் பள்ளி ஆரம்பித்து இரண்டாவது நாளே ஆசிரியருக்கு கொரோனா, மாணவருக்கு கொரோனா என்று செய்தி… எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. கடந்த 45 நாட்களாக பேருந்துகளும் ரயில்களும் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. பேருந்து வாரியாக ரயில்நிலையம் வாரியாக கொரோனா புள்ளி விவரங்களை எத ஊடகமும், சமூக ஊடகமும் தெரிவிக்க வில்லை.அனைத்து தொழில் நிறுவனங்களும் இயக்கிக்கொண்டிருக்கின்றன, அதிலும் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்கள் என்று எந்த ஒரு ஊடகமும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கவில்லை. திருவிழாக்கள், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள் அதில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பாதித்தவர்கள் பற்றிய எந்த புள்ளி விபரங்களையும் எந்த சமூக ஊடகங்களும் தெரிவிக்கவில்லை…..!
கேட்டால் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில்தான் கூறுகிறோம் என்பார்கள்.கொரோனா பாதிப்பை விட பள்ளிக்கூடம் சென்று கல்வியை இழப்பதால் இன்றைய குழந்தைகள் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க காத்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
தங்கள் குழந்தைகளின் படிப்பில் அக்கறை உள்ள அனைத்து பெற்றோர்களும் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப தயாராக உள்ளனர். 18 மாதமாக மிகப்பெரிய அளவில் கல்வியை இழந்து, வேறு வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கிறார்கள் இன்றைய மாணவர்கள்… அதைப்பற்றிய புள்ளி விவரங்களை தெரிவிக்கலாமே இந்த ஊடகங்கள் அனைத்தும்..!
சமூக ஊடகங்கள் என்ற பெயரில் இயங்கும் ஒரு you tube channel ஐ நான் பார்த்தேன். அந்த வீடியோவில் உச்சநீதிமன்றம் பள்ளி, கல்லூரிகளை மூடச்சொல்லி மத்திய மாநில அரசுகளை கண்டித்திருக்கிறது என்று ஒரு பொய்யான செய்தி. அந்த you tube channel ஐ நடத்துபவர் பிரீபயர் விளையாட்டில் பள்ளி குழந்தைகளை அடிமையாகிக்கொண்டிருக்கும் ஒரு சமூக விரோதி.
கொரோனாவில் இருந்து கூட 7 நாட்களில் குழந்தைகள் மீண்டு வரமுடியும். உங்கள் குழந்தைகள் நேரடி வகுப்பின் மூலம் இழந்த கல்வியை மீட்டெடுப்பது என்பது வருடக்கணக்கில் கூட ஆகலாம். குழந்தைகளின் கல்வி அறிவை அழித்துக்கொண்டிருக்கும் கூட்டத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள் பெற்றோர்களே
நிலவளம் ரெங்கராஜன்