October 4, 2022

பாஜக- வின் இடைக்கால பட்ஜெட் பராக்..பராக்! – ரயில்வே அமைச்சர் தாக்கல் செய்கிறார்!

மத்திய இடைக்கால நிதி அமைச்சராக ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயலை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மத்திய பாஜக அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் பிப். 1ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி  வரும் 31ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது.

வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதே சமயம் மத்திய நிதி அமைச்சராக உள்ள அருண்ஜெட்லி உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக் காக அமெரிக்கா சென்றுள்ளார். இதனையடுத்து தற்போது ரயில்வே அமைச்சராக உள்ள பியூஷ் கோயல் இடைக்கால நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பரிந்துரையை பிரதமர் மோடி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார் . ஜனாதிபதியும் அதற்கான ஒப்புதலை அளித்தார். மேலும் அருண் ஜெட்லி சிகிச்சை முடிந்து இந்தியா வந்து அமைச்சராக பொறுப்பேற்கும் வரையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என மத்திய அர சு தெரிவித்துள்ளது.

மேலும் வரும் பிப்ரவரி 1ம் தேதி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசு, தனது கடைசி இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் மக்களவை தேர்தல் வரவுள்ளதால் இந்த பட்ஜெட்டில் பல அதிரடி அறிவிப்புகள், சலுகைகள் இருக்க வாய்ப்புள்ளதாக  நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனாலும்நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்னைகளை கையாளுவது, மத்திய அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதன்படி, 2018 – 19ம் நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில், பொருளாதார வளர்ச்சி முறையே 8. 2 மற்றும் 7. 1 சதவீதமாக இருந்தன.

மொத்த நிதியாண்டுக்கும் வளர்ச்சி சதவீதம் 7. 2 ஆக இருக்கும் என்று மத்திய அரசு கணித்துள்ளது. இது ரிசர்வ் வங்கி கணித்த 7. 4 சதவிகிதத்தை விடக் குறைவானது.

கடந்த ஆண்டு வளர்ச்சி 6. 7 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் நுகர்வு குறைவாக உள்ளதால், வளர்ச்சி 7 சதவீதத்தை ஒட்டித்தான் இருக்கும் என்று நிதித் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதேபோல், நடப்பு ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை முதல் 9 மாதங்களிலேயே 15 சதவீதம் அதிகரித்து விட்டது. மத்திய அரசு, நிதிப் பற்றாக்குறையை ஜிடிபியில் 3. 3 சதவீதத்துக்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்று இலக்கு வைத்திருந்தது. ஆனால், அது தற்போது சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது. இந்தச் சிக்கலுக்குக் காரணம் மறைமுக வரிதான் என்று கூறப்படுகிறது.

செயல்படாத சொத்துக்கள் எனப்படும் என்பிஏ கடன்கள், வங்கித் துறைக்கு மிகப் பெரிய தலைவலியாக இருந்து வருகிறது.

வணிகப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் 129. 90 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டு 106. 37 பில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தனது எரிப்பொருள் தேவைக்கு 80 சதவீதம் இறக்குமதியை நம்பித்தான் உள்ளது. சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையற்ற தன்மை, சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் போன்றவை இந்தியாவுக்கு சவாலாக உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதத்தில் மக்களவை தேர்தல் நடக்கவுள்ளதால், அரசியல் கட்சிகள் ஆட்சியை கைப்பற்ற தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதனி டையேதான், ஆளும் பாஜக அரசின் நாடாளுமன்ற கடைசி கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 13ம் தேதி வரை நடக்கிறது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின்  கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 31ம் தேதி காலை 11 மணி  அளவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரையாற்றுகிறார்.

மத்திய இடைக்கால பட்ஜெட், வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல்  செய்யப்படவுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல்  செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும். ஆனால், இதனை தாக்கல் செய்வதற்காக,  குறிப்பிட்ட தேதிக்குள் அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியா திரும்பிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத்  தெரிகிறது.   அதையடுத்து, மத்திய இடைக்கால நிதியமைச்சராக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் பரிந்துரையின்பேரில், இவரது நியமனத் துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

.