பார்லிமெண்ட் தேர்தல் :இறுதிக் கட்ட தேர்தல்: 62.0% வாக்குப் பதிவு!

பார்லிமெண்ட் தேர்தல் :இறுதிக் கட்ட தேர்தல்: 62.0% வாக்குப் பதிவு!

பார்லிமெண்டுக்காக, 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில், 7-வது கட்டமாக நடைபெற்ற இறுதிக் கட்ட தேர்தலில், மாலை 6:00 மணி நிலவரப்படி சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் 46.53 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதோடு, 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.

இறுதிக் கட்ட வாக்குப் பதிவில் மாநில வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் வருமாறு:

பீகார் – 49.92%

இமாச்சலப் பிரதேசம் – 66.18%

மத்தியப் பிரதேசம் – 69.38%

பஞ்சாப் – 58.81%

உத்தரப் பிரதேசம் – 54.37%

மேற்கு வங்காளம் – 73.05%

ஜார்க்கண்ட் – 70.50%

சண்டிகார் – 63.57%

8 மாநிலங்களிலும் சேர்த்து சராசரி வாக்குப்பதிவு 62.00 சதவீதம்

இந்த இறுதிக் கட்ட தேர்தலில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நடிகர் சன்னி தியோல் ஆகியோர் பாஜக சார்பிலும், நடிகர் சத்ருக்கன் சின்கா, முன்னாள் மத்திய அமைச்சர் மனிஷ் திவாரி ஆகியோர் காங்கிரஸ் சார்பிலும், மிசா பாரதி லாலு கட்சி சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களில் முக்கியமானவர்கள்.

7-வது இறுதிக் கட்டமாக நடைபெற்ற தேர்தலில், பீகார் 8, ஜார்க்கண்ட் 3, மத்திய பிரதேசம் 8, பஞ்சாப் 13, மேற்குவங்காளம் 9, யூனியன் பிரதேசமான சண்டிகர் 1, உத்தரபிரதேசம் 13, இமாச்சலபிரதேசம் 4 என மொத்தம் 59 தொகுதிகள் அடங்கும்.

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் இந்த 59 தொகுதிகளில், 33 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த இறுதிக் கட்ட தேர்தலில் 10 கோடி பேர் வாக்காளர்கள்.

59 தொகுதிகளிலும் 1,12,986 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமைகாலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காக 59 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதட்டமான தொகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும் உத்தரப் பிரதேசத்தில் சந்தவுலி தொகுதியில் பாஜகவினருக்கும், அகிலேஷ் யாதவ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

தாரா ஜீவன்பூர் என்ற கிராமத்தில், தலித் மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதற்காக, வாக்களிக்கும் முன்பே அவர்களது விரல்களில் மை வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆலிநகர் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. வடக்கு கொல்கத்தா தொகுதியில், கிரிஷ் பூங்கா அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக அத்தொகுதி பாஜக வேட்பாளர் புகார் கூறினார். ஆனால் பட்டாசு வெடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

வாக்குச் சாவடிக்குள் நுழைய விடாமல் தன்னை தடுத்ததாக, கொல்கத்தா தெற்கு மம்தா கட்சி வேட்பாளர் மாலா ராய் குற்றம் சாட்டினார்.

கொல்கத்தாவிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் அங்கு இங்குமாக மோதல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மத்திய படைகள் வாக்காளர்களை மிரட்டியதாக மம்தா கட்சியினர் புகார் கூறினர்.

சில இடங்களில் வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப் பதிவு தாமதம் ஆனது.

நிதிஷ்குமார், அமரிந்தர் சிங்

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாட்னாவில் ஆளுநர் மாளிகை அருகே அரசு பள்ளியில் அமைந்திருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், பாட்டியாலாவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

இமாச்சலப் பிரதேச மாநிலம், லஹாவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில், 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் உள்ள தஷிகனாக் பழங்குடி கிராமத்தில் 49 வாக்களர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த, உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களர்கள் வாக்களித்தது குறிப்பிடத் தக்கது.

தமிழ்நாடு – வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் நிறுத்தம்

பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் பின்னர் தேர்தல் நடைபெறும்.

7 கட்ட தேர்தல் நிறைவு

17-வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் 11-ம் தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது.

ஏப்ரல் 18-ம் தேதி 96 தொகுதிகளுக்கு 2-ம் கட்டமாகவும்,

ஏப்ரல் 23-ம் தேதி 115 தொகுதிகளுக்கு 3-ம் கட்டமாகவும்,

ஏப்ரல் 29-ம் தேதி 71 தொகுதிகளுக்கு 4-ம் கட்டமாகவும்.

மே 6-ம் தேதி 51 தொகுதிகளுக்கு 5-ம் கட்டமாகவும்,

மே 12-ம் தேதி 6-வது கட்டமாக 59 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த 6 கட்டங்களையும் சேர்த்து சராசரியாக 66.88 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

ஏற்கெனவே 6 கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 483 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு முடிந்துள்ளது. இப்போது 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்துள்ள நிலையில், மொத்தம் 542 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவுபெற்றிருக்கிறது.

இந்த 7 கட்ட தேர்தல் ஆரம்பித்து முடிவடைய 38 நாட்கள் ஆகியிருக்கின்றன.

மே 23-ம் தேதி வியாழக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

error: Content is protected !!