October 22, 2021

பெட்ரோல் – டீசல் விலையை தமிழக அரசு(ம்) உயர்த்தியது!

தமிழக அரசின் வணிக வரித்துறை சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சி.சந்திர மவுலி நேற்று இரவு ஒரு அறிவிக்கை வெளியிட்டார். அதில் பெட்ரோல் டீசலுக்கான வாட்வரி (மதிப்பு கூட்டுவரி) உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பெட்ரோலுக்கு வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீத மாகவும், டீசலுக்கு வாட் வரி 21.43 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவு முதல் பெட்ரோல்-டீசல் விலை திடீர் என்று அதிகரித்தது.

petrol mar 5

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.78ம், டீசல் லிட்டருக்கு 1.76ம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி லிட்டர் ரூ.70.61 ஆக இருந்த பெட்ரோல் ரூ.74.39 ஆக உயர்ந்துள்ளது. டீசல் லிட்டர் ரூ.60.73-ல் இருந்து ரூ.62.49 ஆக உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக மத்திய அரசின் எண்ணை நிறுவனங்கள்தான் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு அறிவிப்பு வெளியிடும். அதுபோன்ற அறிவிப்பு எதுவும் வரவில்லையே, நீங்களாக உயர்த்தி விட்டீர்களா? என்று பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர்கள், மத்திய அரசு உயர்த்த வில்லை. தமிழக அரசு பெட்ரோல் – டீசலுக்கான வாட் வரியை உயர்த்தி உள்ளது என்று தெரிவித்தனர்.தற்போது பெட்ரோல் – டீசலுக்கு மட்டும் வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து மதுபானங்களின் மீதான வாட் வரியும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

அடிசினல் தகவல்:

மாநில அரசின் வரிகளில் மிகவும் முக்கியமானது மதிப்பு கூட்டு வரியாகும் (VAT). இது முன்பிருந்த விற்பனை வரியினை நீக்கி அதனிடத்தில் அமல் செய்யப்பட ஒரு நுகர்வு வரி. பழைய விற்பனை வரி அமைப்பில், ஒரே பொருள் பல முனைகளில் வரிவிதிப்புக்குள்ளாகி அது வரிச்சுமையினை பெருக்கிவிடுகின்றது. மேலும், உள்ளீடுகள் மீது முதலில் வரி விதிக்கப்படுகிறது, பின்னர் உள்ளீடு வரி சுமையோடு ஒரு பொருள் உற்பத்தியானபிறகு அந்த இறுதிபொருள் மீது மீண்டும் வரி விதிக்கப்படுகின்றது. இது வரிமேல் வரி விதிப்பாகும். ஆனால் வாட் இதுபோன்ற குறைகளைத் தவிர்த்து, ஒரு பொருளின் உற்பத்தி/விநியோக சங்கிலியில் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் மதிப்பு எந்த அளவிற்கு கூட்டப்பட்டதோ, அந்தக் கூட்டப்பட்ட மதிப்பின் மீது மட்டும் இந்த வாட் விதிக்கப்படுகின்றது