September 17, 2021

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டமா? விட மாட்டோம்! – பீட்டா அறிவிப்பு

‘பீட்டா’ இந்தியா அமைப்பின் செய்தி தொடர்பாளர் மணிலால் வல்லியத்தே நிருபர்களிடம், ” எங்களது விழிப்புணர்வு பிரசாரம் அனைத்து விலங்குகளின் நலன்களுக்காகவும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் குறிப்பிட்ட பூர்வீக காளைகள் இனம் அழிந்து வருவதற்கு 1980களில் தமிழக அரசு மேற்கொண்ட வெள்ளை புரட்சியும் (பால் உற்பத்தி பெருக்கம்), கலப்பின காளை விருத்தி திட்டங்களுமே காரணம். அப்போது முதலே பூர்வீக காளைகள் இனம் அழியத் தொடங்கி விட்டது.

jalli jan 20

காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு மட்டுமே வழி அல்ல. இந்த காளைகளை பாதுகாப்பதற்கு பல்வேறு மனிதாபிமான வழிமுறைகளும் இருக்கின்றன. தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையிலேயே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடக்கின்றன. எனவே அனைத்து அரசியல்வாதிகளும் இதுபற்றி முடிவு எடுக்கும் முன்பாக இது தொடர்பாக இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள உண்மைகளையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் ஒரு முறை படித்து பார்க்கும்படி வேண்டுகிறோம்.

காளைகள், தங்களுக்கு துன்புறுத்தல் ஏற்பட்டாலோ, அல்லது சண்டையிட்டாலோ மட்டுமே எதிர்ப்பை காட்டும் குணாதிசயம் கொண்டவை. வலி, பயம், காயம் ஏற்படும்போதுதான் அவை எதிர்ப்பை காட்டத் தயாராகும். ஆனால், ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு கொடுமை நிகழ்த்தப்படுகிறது.தேவையான மற்றும் தேவையற்ற பாதிப்பு என 2 வகை உண்டு. ஜல்லிக்கட்டு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. எனவே அது தேவையற்ற பாதிப்பு என்கிற வகையில் வருகிறது. பாரம்பரியமா? சட்டமா? என்கிற கேள்வி எழும்போது சட்டமே முன்னுரிமை பெறும் என்று சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தி உள்ளது.

சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையும் மதிப்பதால் ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்.ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், அதை சட்ட ரீதியான வழியில் அணுகுவோம். ஜல்லிக்கட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தையும் தொடர்ந்து மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட் தடையால் இந்தாண்டு நடக்க முடியாமல் போனது. ஜல்லிக்கட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் எந்த வித பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து அலங்காநல்லூரில் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த 15ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சென்னை மெரினா, கோவை, சேலம், நெல்லை என பரவி தற்போது தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டிற்காக போராடி வருகின்றனர். போராட்டம் நடத்தும் இளைஞர்கள் சற்றும் தளர்ச்சியடையாமல் தொடர்ந்து 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு பகல் பாராமல் விடிய விடிய நடந்து வரும் இப்போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை எனவும், ஜல்லிக்கட்டிற்கான தடை என்பது நாட்டு மாட்டு இனங்களை அழிக்கும் செயல் எனவும், ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமான பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் முழக்கமிட்டு வருகின்றனர். இப்படி ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.இதுகுறித்து பிரதமரை சந்தித்து பேசுவதற்காக நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் டெல்லி சென்ற முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்.

நேற்று காலை 10.30 மணி அளவில் அவர், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது பிரதமரிடம் அவர் மனு ஒன்றையும் அளித்தார்.இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளர் கிருஷ்ணன், முதல்வரின் தனிச்செயலாளர்கள் கே.என். வெங்கடரமணன், விஜய குமார், ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.இந்த பேச்சுவார்த்தையின் போது நல்ல முடிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், மத்திய அரசால் உதவ இயலாது என்று பிரதமர் மோடி கூறிவிட்டார்.இதனால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. என்றாலும் சாதகமான முடிவு ஏற்படும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

பிரதமரை சந்தித்து விட்டு மதியம் 12.15 மணிக்கு தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பிய ஓ.பன்னீர்செல்வம், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்று கோரி பிரதமருக்கு கடிதம் எழுதிய நான், இது தொடர்பாக அவரை நேரில் சந்தித்து பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டு இருந்தேன்.இதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கோரி கடிதம் எழுதி இருந்தார்.

மேலும் தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை மிகவும் குறைவாக பெய்ததால் கடுமையான வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் வறட்சி நிவாரணமாக ரூ.39 ஆயிரத்து 565 கோடி வழங்க வேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் பிரதமர் அலுவலகத்தில் ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினேன். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினேன்.

நான் கூறியதை மிகவும் பரிவுடன் கேட்ட பிரதமர், இந்த பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளை தான் மிகவும் மதிப்பதாக தெரிவித்தார். மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்னும் தனது தீர்ப்பை வழங்காததால், இது தொடர்பாக மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசுடன் இணைந்து உடனடியாக எடுப்போம். இதுபற்றிய மாநில அரசின் நடவடிக்கைகளை நீங்கள் கூடிய விரைவில் காண்பீர்கள். நன்மையே யாவும்; நன்மையாக முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அத்துடன் ஏற்கனவே திட்டமிட்டபடி ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்ப இருந்தார். ஆனால் அவர் கடைசி நேரத்தில் அந்த பயணத்தை ரத்து செய்தார்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற் கான சாத்தியக்கூறுகள் குறித்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணிய பிரசாத், தமிழக அரசு வக்கீல்கள், உச்சநீதிமன்ற சட்ட நிபுணர் கள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளுடன் டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக டெல்லியில் தங்கி இருக்கும் அவர், ஒரு நல்ல தீர்வை கண்டுவிட்டு சென்னை திரும்புவார் என்று அதிகாரிகள் வட்டத்தில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.