உருளைக்கிழங்குக்கான காப்பிரைட் பேப்பருடன் குஜராத் விவசாயிகளை மிரட்டும் பெப்சி!

இந்திய நீராதாரத்தை உறிஞ்சும் முக்கிய நிறுவனமான பெப்சி நிறுவனம் தயாரித்து வரும் `லேஸ் சிப்ஸ்’ உணவுப் பொருளுக்காக புதிய வகை உருளைக் கிழங்குகளைப் பயன்படுத்தி வருகிறது. அதையொட்டி, கடந்த 2009-ம் ஆண்டு எப்.எல்.2027-ம் ஆண்டு புதிய வகை உருளைக்கிழங்குகளை கண்டறிந்து அதற்கான காப்புரிமை ஒன்றை பெற்றது. அதன் பின்னர் லேஸ் சிப்ஸ் பொருளை தயாரிப்பதற்கு இந்த வகை உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்ய பல விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி அந்த விவசாயிகளிடம் நேரடியாக உருளைக் கிழங்குகளை கொள் முதல் செய்துவந்தது. இந்த உருளைக் கிழங்கு வகையை குஜராத்தில் உள்ள ஒரு சில விவசாயிகள் காப்புரிமை பெறாமலும், காப்புரிமை பற்றி அறியாமலும் பயிரிட்டுள்ளனர். இதன் காரணமாக  தங்கள் அனுமதி பெற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் லேஸ் வகை உருளைக் கிழங்கைப் பயிரிடுவதால், 9 விவசாயிகளும், அவ்வாறு இணைந்து பணியாற்ற வேண்டும் அல்லது வேறு வகை உருளைக் கிழங்கைப் பயிரிடுங்கள் என்றும் காப்புரிமை பெற்ற உருளைகிழங்கை விவசாயிகள் பயிரிட்டதாகக் கூறி ரூ.1.05 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் ஒரு செய்தி வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நம் நாட்டில், தற்போது 35 வகையான உருளைக் கிழங்குகள் 30 லட்சம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. இதன் மூலம், ஏக்கருடன் இரண்டரை டன் மகசூலை விவசாயிகள் ஈட்டுகின்றனர். தமிழகத்தில் கூட, நீலகிரி, பழனி போன்ற இடங்களில், பிரதான சாகுபடி பொருளாக உருளைக்கிழங்கு உள்ளது. உரவிலை உயர்வு, வங்கி கடன் போன்றவற்றால், நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகள், பெப்சி நிறுவனத்தின் நடவடிக்கையால் தற்போது செய்வதறியாது உள்ளனர். இந்த விவகாரத்தில், தலையிட்டு பேச வேண்டிய குஜராத் மற்றும் மத்திய அரசுகளோ மௌனம் சாதிக்கின்றன. விவசாயிகளை மிரட்டும் பெப்சி நிறுவனத்தின் விவகாரத்தில் மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் தலையிடும் வரை, பெப்சி பொருட்களை புறக்கணிக்கப் போவதாக அகில இந்திய கிஷான் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் பயிர்களின் விதைகளைப் பதப்படுத்தி மீண்டும் அதைப் பயிர் செய்யத் தங்களுக்கு உரிமை உண்டு என்று கூறுகின்றனர். இந்த வழக்கில் சிக்கியுள்ள விவசாயிகள் 3 முதல் 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருபவர்கள். இவர்கள் யாரும் பெப்ஸிக்கு ஒப்பந்தமாகக் கூட உருளைக்கிழங்கு கொடுத்ததில்லை.

இதனிடையே பெப்ஸிகோ நிறுவனம் லேஸ் தயாரிப்புக்காக இந்தியாவில் ஆண்டுக்கு 60,000 டன் உருளைகிழங்குகளை வாங்குகிறது. இவ்வளவுப் பெரிய நிறுவனத்திற்கு எதிரான வழக்கை இந்த விவசாயிகளால் எதிர்கொள்ளவே முடியாது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு சுமுக முடிவு காண வேண்டும் என்று வடோதராவில் செயல்பட்டு வரும் விவசாயிகள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

இதுகுறித்து பெப்ஸிகோ நிறுவனத்தைத் தொடர்புகொண்டால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதுகுறித்து தற்போதைக்கு எந்தக் கருத்தும் கூற முடியாது என்று மறுப்பு தெரிவித்ததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது..