ஹேப் எ கூழ் டே – சர்க்கரை நோயை விரட்டும் ஆரோக்கிய ரெசிபி!

நாளுக்கு நாள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறது. உலக அளவில் 425 மில்லியன் மக்கள் சர்க்கரைநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நீரிழிவு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9.8 கோடியாக உயரும் அபாயம் உள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. இப்படியாப்பட்ட சர்க்கரை நோயை அண்ட விடாமல் கதறக் கதற விரட்டி அடிக்க, நம் முன்னோர்கள் நமக்குக் காட்டித் தந்த உணவு இது. மறக்காதீர்கள், இந்த ரெசிப்பியின் வயது பல ஆயிரம் வருடங்கள். இதை நாம் சாப்பிட பாக்கியம் செய்தவர்கள்… நகர வாழ்க்கையில் கிராமங்களை மறந்ததால், நோயுடன் வாழ்கிறோம்!

இனி….

கம்பு கூழ் செய்வது எப்படி?

இதை நாம் பிரதான உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும்! விதவிதமான கம்பு கூழ் தயாரிப்பதற்கு முதலில் நமக்குத் தேவை, கம்பு பால்!

கம்பு பாலை எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்!

முதலில் கம்ப ஒரு கப் எடுத்து தண்ணீர் விட்டு 4 மணி முதல் 6 மணி நேரம் ஊற விடவும் பிறகு வெளியே எடுத்து அதைக் கழுவி, மிக்ஸியில் போட்டு தண்ணீர் அதிகமாக விட்டு நன்றாக அரைக்கவும்! நன்கு பால் போல வரும்போது எடுத்து விடவும்!

எடுத்ததை பில்டர் செய்ய வேண்டாம்! காரணம் கம்பின் தோலில் இருக்கக் கூடிய சக்தி மிக அதிகம்! கூடவே அதனுடைய ஃபைபர் கண்டென்ட்டும் அதிகமாக இருக்கும்! ஆகவே வடிகட்டாமல் அப்படியே உபயோகிக்க வேண்டும்.

இந்தப் பாலை ஒரு பாட்டிலில் எடுத்து நன்றாக மூடி பிரிட்ஜில் வைத்துக் கொண்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு நமக்குத் தேவையானதை செய்து கொள்ள முடியும்!

கூடுமானவரை இந்த ரெசிபியை ஃப்ரிட்ஜில் வைத்து, கூழை, கூலாகச் சாப்பிடவும்!

1. கிராமத்து கம்பு கூழ் :

முதலில் கம்பு பாலை எடுத்து ஒரு அகலமான வாணலியில் விட்டு அதன் மேல் சிறிதளவு தண்ணீர் விட வேண்டும் வாணலியை அடுப்பில் கொதிக்க விட வேண்டும் அடிக்கடி கிளறி விடவும்! கூழ் போல் வந்ததும் கீழே இறக்கி வைக்கவும்

இறக்கிய கூழுடன் மோர் சேர்த்து கலக்கவும்! அதற்குத் தொட்டுக்கொள்ள பச்சை வெங்காயம், (சின்ன வெங்காயம் ஆக இருந்தால் நல்லது. இல்லை என்றால் பெரிய வெங்காயத்தை துண்டுகளாக போடவும்).

கூடவே இரண்டு மூன்று மிளகாய்களை மிக மெல்லியதாக நறுக்கி போடவும்.

முடிந்தால் கடுகு பெருங்காயம் போட்டு தாளித்து கொட்டவும். இந்த கூழுக்கு மேலே நறுக்கிய கொத்தமல்லி தழைகளை போட்டு நிரப்பவும். தேவையான உப்பை முதலிலேயே போட்டுக் கொள்க!

இதை டம்பளரில் எடுத்து அப்படியே குடிப்பது போல நீர்க்க இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்! இரண்டு கப் குடித்தால் கிட்டதட்ட 4 முதல் 5 மணி நேரம் வரை பசி தாங்கும்! 2 கப் குடித்தால் ஒரு மதிய வேளை உணவை நீங்கள் நீக்கி விடலாம்.

ஆகவே காலையில் ஒரு வேளை குடித்து விட்டு மதியத்திற்கு ஒரு கிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் கையில் எடுத்துக் கொண்டு சென்றால் உங்களுடைய ஒருநாளின் உணவு இங்கேயே பூர்த்தியாகிவிடும்

2. ஸ்வீட் கம்பு கூழ்:

மேற்சொன்னபடி முதலில் கம்பு கூழை தயார் செய்து கொள்ள வேண்டும்! அதற்கு மேல் பால், சர்க்கரை சேர்த்து இனிப்பாக சாப்பிடலாம்! சில பேருக்கு நல்ல ருசி வேண்டுமென்றால் ஏலக்காயை பொடி செய்து போட்டுக் கொள்ளலாம்!

3. Flavored கம்பு கூழ்:

இதுவும் இனிப்பு வகையை சேர்ந்தது. கடைகளில் நீங்கள் பார்த்து இருக்கலாம், நிறைய flavoured milk டெட்ரா பேக்குகளில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்திருப்பார்கள்! அவைகள் ஸ்ட்ராபெர்ரி, மேங்கோ, சாக்லேட், ரோஸ்மில்க், பாதாம், பிஸ்தா என்று பலவிதமான ஃபிளேவர்களில் வருகிறது!

அவைகளில் ஒரு டப்பாவை வாங்கி இந்த கூழுடன் கலக்கவும்! சர்க்கரை போதவில்லை போதவில்லை என்றால் சேர்த்துக் கொள்ளவும்! இது குழந்தைகள் குடிக்க மிக அருமையாக இருக்கும்! சுவையையும் இரசித்து சாப்பிடுவார்கள்.

4. ஊறுகாய் கூழ்!

வீட்டில் இருக்கும் மூன்று அல்லது நான்கு விதமான லெமன், மேங்கோ, ஆவக்காய், மாகாளிக்கிழங்கு என்பது போன்ற ஊறுகாய்களை கொஞ்சம் எடுத்து, கூழுடன் மோர் சேர்த்து, அதில் ஊறுகாயைப் போட்டு நன்கு கலக்கவும்! சிறிய துண்டுகளாக பச்சை வெங்காயத்தை வெட்டிப் போட்டாலும் நன்றாக இருக்கும்!

5. வெஜ் மிக்ஸட் கூழ்!

கொஞ்சம் மெனக்கெட்டு இதைச் செய்ய வேண்டும்.

இதை செய்வதற்கு சிறிய துண்டுகளாக பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி, முட்டைகோஸ் ஆகியவற்றை வாணலியில் நன்றாக வதக்கி கூழுடன் சேர்த்து அதன் மேல் மோர் சேர்த்து உப்பு போட்டு சிறிதளவு மிளகாய்த்தூள் தூவிக் கொள்ளவும்! காயிலேயே பச்சை மிளகாய் சேர்த்து இருந்தால் மிளகாய்த்தூள் அவசியம் இல்லை! அருமையான ரெசிபி! கொஞ்சம் கெட்டியாக செய்து ஸ்பூன் போட்டு நேரடியாகவே சாப்பிடலாம்!

6. சாட் மசாலா கூழ்:

ஏற்கனவே சொன்னபடி கூழை தயார் செய்து கொள்ளவும்! அதன் மேல் மோர் விட்டு நன்றாக கலக்கி, நீர்க்கச் செய்து கொள்ளவும்! இப்போது கடைகளில் கிடைக்கும் சாட் மசாலாவை எடுத்து அத்துடன் கலக்கவும்! உப்பு போட மறக்காதீர்கள்! இதேபோல கரம் மசாலா பொடி சிறிதளவு சேர்த்தால் மிக அருமையான ருசி கிடைக்கும்!

7. ஹார்லிக்ஸ் அல்லது போர்ன்விடா கூழ்:

முதலில் கூழை தயார் செய்து கொள்ளவும்! அதற்கு மேல் ஹார்லிக்ஸ் அல்லது போன்விட்டா பௌடர் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் போடவும்! நன்றாக பால் விடவும்! பால் ஆடையையும் இதில் சேர்த்துக் கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும்! தேவையான அளவு சர்க்கரை போட்டு பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் உண்ணக் கொடுக்கலாம்!

“ஹேவ் எ கூழ் டே!”

டிமிட்த் பெட்கோவ்ஸ்கி!