October 17, 2021

ரேஷன் கடைகளில் அநியாயம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

நாள்தோறும் காலையிலிருந்து நியாய விலைக்கடைகளில் நீண்ட வரிசையில் நிற்கும் ஏழை-நடுத்தர மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை. அரிசி இல்லை, சர்க்கரை இல்லை, பாமாயில் இல்லை, பருப்பு இல்லை, மண்ணெண்ணெய் இல்லை என்று இல்லாமை ஒன்றுதான் எல்லா மட்டத்திலும் நிலவுகிறது. இப்படி நியாய விலைக் கடைகளில் நிலவும் அநியாயங்களை அகற்றிடப் போராடுவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

ration mar 9

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினார் மகாகவி பாரதியார். ஒவ்வொரு மனிதரின் உணவுக்குத் தேவையான பொருட்களை நியாய விலையில்-மலிவு விலையில்-மானியத்தில் என அவரவர் பொருளாதாரச் சூழலுக்கேற்ப வழங்கும் நியாயவிலைக் கடைகளை மிகச் சிறப்பான முறையில் செயல்படச் செய்தது தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.

பட்டினிச் சாவுகளே இல்லாத மாநிலம் நம் தமிழகம் என்று பெருமிதம் கொள்ளும் வகையில், ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என வாக்குறுதி அளித்து, பிறகு அதையும் ஒரு கிலோ ஒரு ரூபாய் என விலை குறைத்து ஏழை மக்களின் உணவுக்கு உத்தரவாதம் அளித்தவர் தலைவர் கருணாநிதி. அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகள் எனப்படும் நியாயவிலைக்கடைகளில் சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கான வழிவகைகளையும் செய்தது திமுக அரசு.

வெளிச்சந்தையில் மளிகைப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்த நேரத்தில் அதனால் தமிழகத்தில் உள்ள ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என நியாய விலைக் கடைகளில் பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

2001-2006ஆம் ஆண்டுகாலத்தில் நடந்த ஜெயலலிதா ஆட்சியில் ரேஷன் பொருட்களின் விநியோகத்தை முடக்கும் வகையில், குடும்ப அட்டைகளில் ஹெச் முத்திரைகள் குத்தப்பட்டன. பின்னர் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு படுதோல்வி என்ற முத்திரையை தமிழக வாக்காளர்கள் அழுத்தமாகப் பதித்தபிறகே, அந்த ஹெச் முத்திரையை அரைகுறை மனதுடன் நீக்க முன்வந்தது அதிமுக அரசு. ஆனால், திமுக ஆட்சியில் அப்படிப்பட்ட நிலை இல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாய விலைக்கடைகளில் உரிய முறையில் பொருட்கள் கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் உத்தரவிட்ட நீதியரசர்கள், பொதுவிநியோகத் திட்டத்தை (ரேஷன் பொருட்கள்) எப்படி செயல்படுத்துவது என தமிழக (திமுக) அரசைப் பார்த்துத் தெரிந்து கொண்டு உங்கள் மாநிலத்தில் அதைப் பின்பற்றுங்கள் என பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் அளவிற்கு தமிழகத்தில் நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் பெருமைக்குரியனவாக இருந்தன. அதிமுக ஆட்சியில் அந்தப் பெருமைகள் சிதைக்கப்பட்டு, வறுமையில் வாடும் மக்களைக் கொடுமைப்படுத்தி, பட்டினியில் தள்ளும் நிலைதான் நிலவுகிறது.

2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததிலிருந்து குடும்ப அட்டைகளுக்குப் பதில் ஸ்மார்ட் கார்டு வழங்க இருப்பதாக அறிவிப்பு மட்டும் வந்தபடியே இருக்கிறது. திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால், குடும்ப அட்டைகளில் ஆண்டுதோறும் உள்தாள் ஒட்டியபடியே இருக்கிறார்கள். வெள்ள நிவாரணப் பொருட்களில் மட்டுமல்ல குடும்ப அட்டைகளிலும் ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்சியாக அதிமுக ஆட்சி திகழ்கிறது. பள்ளிக்குழந்தைகள் வைத்திருக்கும் ஒரு குயர் நோட்டு போல குடும்ப அட்டைகளின் வடிவத்தை மாற்றிய சாதனையைத்தான் அதிமுக அரசு செய்திருக்கிறதே தவிர, ஏழை-நடுத்தர மக்களின் உணவுத் தேவைக்கான எந்த அடிப்படை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ என திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த தரமான அரிசிக்குப் பதில், விலையில்லா அரிசி என்ற பெயரில் தரமற்ற அரிசியை வழங்கியது ஜெயலலிதா அரசு. இதனால் ஏழை மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இப்போது அந்த அரிசியிலும் குறிப்பிட்ட அளவைக் குறைத்துவிட்டு, அதற்குப் பதில் கோதுமை வாங்கிக்கொள்ளும்படி ஏழை மக்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். அந்த கோதுமையும் எப்போது வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதமில்லாத நிலையே உள்ளது.

நாள்தோறும் காலையிலிருந்து நியாய விலைக்கடைகளில் நீண்ட வரிசையில் நிற்கும் ஏழை-நடுத்தர மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை. அரிசி இல்லை, சர்க்கரை இல்லை, பாமாயில் இல்லை, பருப்பு இல்லை, மண்ணெண்ணெய் இல்லை என்று இல்லாமை ஒன்றுதான் எல்லா மட்டத்திலும் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் பொறுமையிழந்து, கோபக்குரல் எழுப்பும் சூழலைப் பல இடங்களிலும் காண முடிகிறது. நியாய விலைக் கடைகளையே மூடக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.

திமுக மட்டுமின்றி, பல்வேறு கட்சித் தலைவர்களும் இதனை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதிமுக அமைச்சர்களோ எல்லாப் பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைக்கின்றன என்று எந்த உணவுப் பொருளின் மூட்டைகளும் இல்லாத ரேஷன் கடைகளில் புளுகு மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னைத் தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நான் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறேன். அங்கு நிலவும் அநியாயங்களை மக்கள் சொல்வதுடன், அந்தக் கடைகளில் உள்ள பதிவேடுகளும் சுட்டிக்காட்டுகின்றன. இதுபோலவே, திமுகன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிகுட்பட்ட நியாய விலைக்கடைகளின் அநியாயங்களை ஆய்வு செய்து அம்பலப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.

அனைவரும் மேற்கொண்ட ஆய்வில், தமிழகம் முழுவதும் பொதுவிநியோகத் திட்டம் சீரழிந்து கிடப்பது தெள்ளத் தெளிவாகத் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் உணவு பாதுகாப்புத் திட்டத்தில் அதிமுக அரசு அவசர அவசரமாக இணைந்த பிறகு வெகு வேகமாக இந்த சீரழிவு நடைபெற்று வருகிறது. சர்க்கரைக்கு கூட மத்திய அரசின் மானியம் ரத்தாகும் அபாயம் உருவாகி விட்டது.

குற்றவாளியின் பினாமி அரசான அதிமுக ஆட்சியின் செயல்படாத தன்மையும் முடங்கிய நிர்வாகமும் தமிழகத்தில் பட்டினிச் சாவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், இந்த நிலையை உடனே மாற்றிட போராட்டக் களம் காண்பது எனக் கழகம் முடிவெடுத்து, களமிறங்குகிறது. மார்ச் 13-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் மக்கள் நலன் காக்கும் போராட்டத்திற்கான போர் முரசு ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

திமுகவின் அனைத்து அணியினரும் இந்தப் போராட்டக் களத்தில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, மகளிரணியினர் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்பதை கழக மகளிரணி சார்பில் நடைபெற்ற மகளிர் தின ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினேன். காரணம், ரேஷன் கடைகளில் கால் கடுக்க நின்று, பொருட்கள் கிடைக்காமல் வீடு திரும்பி, பாத்திரத்தில் மிச்சமிருக்கின்ற தானியங்களைக் கொண்டு மொத்த குடும்பத்திற்கும் சமைக்க வேண்டிய நெருக்கடிக்கும் அவதிக்கும் உள்ளாகிறவர்கள் பெண்கள்தான். அவர்களின் துயர் துடைக்கும் வகையிலேயே கழகத்தின் போராட்டக் களம் அமைந்துள்ளது.

மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றில் உள்ள நியாய விலைக்கடைகள் முன்பு வார்டு வாரியாக திமுகவினர் மக்களுடன் இணைந்து போராட்டத்தை நடத்தும் அதே வேளையில், பேரூராட்சிகளிலும் ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகள் முன்பும் போராட்ட முழக்கங்கள் ஓங்கி ஒலித்திட வேண்டும். இது ஏழை-எளிய மக்களின் அடிப்படைத் தேவைக்கானப் போராட்டம். அவர்களுக்கான உணவுப்பொருட்களுக்கு உத்தரவாதமளித்து உயிர் காக்கச் செய்யும் போராட்டம். இந்த ஆட்சி எப்போது தொலையும் என ஏங்கிக் கிடக்கும் ஏழை-நடுத்தர மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கக்கூடிய போராட்டம்.

மக்களின் சேவகர்களாக மக்களை இணைத்துக் கொண்டு கழகத்தினர் களமிறங்க வேண்டும் என அழைக்கிறேன். நியாய விலைக் கடைகளில் நிலவும் அநியாயங்களை அகற்றிடப் போராடுவோம். இந்த ஆட்சி அகன்றால்தான் அநியாயங்கள் தடுக்கப்படும் என்றால் அதையும் ஜனநாயகப் பூர்வ முறையில் விரைந்து நடக்க மக்களுடன் இணைந்து பணியாற்றுவோம்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்