October 25, 2021

பத்திரிகைத் துறையை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கக்கூடாது! – பிரஸ் கவுன்சில்

முறைகேடாக பணம் சம்பாதிப்பதற்கும், சமூகத் தவறுகளை மறைப்பதற்கும், ஆதாயம் பெறுவதற்கும் பத்திரிகைத் துறையைப் பயன்படுத்தக் கூடாது என்று பத்திரிகை கவுன்சில் தலைவர் நீதிபதி சி.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்களுக்கு தனிப்பட்ட நெறிகள் உள்ளன என்றும், ஆதாயத்துக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

medeia mar 17a

ஹைதராபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற சி.கே.பிரசாத், இதுகுறித்து , “பொதுவாக ஊடகவியலாளர்கள் என்பவர்கள் நியாயத்தைக் காக்கப் பாடுபடும் அறப்போராளிகளாக இருக்க வேண்டியவர்கள். ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஊடகங்களுக்கு எப்போதும் முரண்பாடுகளும், மோதல்களும் இருக்க வேண்டும். ஒருவேளை அரசுடன் எந்தவிதமான மோதலும் இல்லையென்றால், அந்த நாளை ஜனநாயகத்தின் துயர் நிறைந்த தினமாகக் கருத வேண்டும்.
ஆட்சியாளர்களுடன் ஊடகங்கள் அரவணைத்துப் போகும் செயல்பாடுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. சொல்லப்போனால் அதை முற்றிலுமாக எதிர்க்கிறேன்.

இது ஒருபுறமிருக்க ஊடகவியலாளர்களுக்கென தனிப்பட்ட நெறிகளும், விதிகளும் உள்ளன. அவ்வாறு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லையென்றால் மனம் போன போக்கில் அவர்கள் செய்திகளை வெளியிடக் கூடும். எது சரி; எது தவறு என ஆராய்ந்து செய்தி வெளியிடுவதற்கே ஊடக தர்மங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

முறைகேடாக பணம் சம்பாதிப்பதற்கும், சமூகத் தவறுகளை மறைப்பதற்கும், ஆதாயம் பெறுவதற்கும் பத்திரிகைத் துறையைப் பயன்படுத்தக் கூடாது. ஒப்பந்த அடிப்படையில் தற்போது பத்திரிகையாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவது ஊடகத் துறைக்கு எந்தப் பலனையும் அளிக்காது” என்றார் அவர்.