திருபாய் அம்பானி கடந்து போன பாதை!

திருபாய் அம்பானி கடந்து போன பாதை!

ப்போது மும்பை என்றழைக்கப்படும் பம்பாய் நகரின் நெரிசல் மிகுந்த பகுதியில் சிங்கிள் ரூம் கொண்ட மாடி வீட்டில் குடியிருந்த ஒருவர், தான் கடைசிக் காலத்தில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்போடும், உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர்தான் இந்த அம்பானி. வெறும் 50,000 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டு, இன்று இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாய் உயர்ந்து நிற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தை துவக்கி, மிகப்பெரும் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட திருபாய் அம்பானி காலமான தினமின்று ஜூலை 6.

1932 -ம் ஆண்டு குஜராத் மாநிலம் சோர்வாத் நகரில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார் அம்பானி.ஆசை நிறைய இருந்தாலும் இவரது கையில் செல்வம் புரளவில்லை. ஆனால் மனதில் நம்பிக்கையும், திறமையும் வற்றாத ஜீவநதி போல் ஊற்றெடுத்தது. தனது 16 வயதில் ஏமன் சென்ற அம்பானி, அங்கு பெட்ரோல் பங்கில் வேலை செய்தார். சிறிது காலம் கழித்து அப்பெட்ரோல் பங்கிலேயே நிர்வாகம் பார்க்கத் தொடங்கினார். பெஸ்ஸி அண்ட் கோ என்னும் தனியார் நிறுவனத்தில் எழுத்தர் பதவியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவனம் அடிப்படையாக பங்கு சந்தைகளில் வர்த்தகம் செய்யும் நிறுவனமாக இருந்தது. அப்போதைய வர்த்தக நிறுவனங்களில் பெஸ்ஸி அண்ட் கோ மிக பெரிய நிறுவனமாக இருந்தது.இதனால் அங்கு வேலை செய்வதன் மூலம் வணிக துறையில் திருபாய் நிறைய அறிவை பெற்றார். பிறகு அவர் ஏமன் என்னும் தேசத்தில் வேலைப்பார்த்து வந்தார். பின்னர் அவர் கையில் 15000 ரூபாயை கொண்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தார். அவர் இந்தியாவுக்கு வந்த போது இங்கே ஜவுளி தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதை அறிந்தார்.

அதை அடுத்து1958-ல் தனது நண்பர் சம்பக்லால் தமானியுடன் இணைந்து ‘மஜின்’ என்ற நிறுவனத்தைத் துவக்கினார் அம்பானி. 50,000 ரூபாய் முதலீட்டில் 350 சதுரடியில் தொடங்கப்பட்டது இந்நிறுவனம். மிகவும் அதிரடியான வியூகங்களோடு செயல்படுவாராம் அம்பானி. விலையேற்றங்களை முன்னரே கணித்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவதில் இவர் வல்லவர். சற்றே நிதானமாக வியாபாரம் செய்பவரான தமானி, அம்பானிக்கு ஈடுகொடுக்க முடியாததால் மஜின் கூட்டு நிறுவனம் பிரிய நேரிட்டது. அப்பிரிவே ரிலையென்ஸ் என்னும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டது. 1966-ல் டெக்ஸ்டைல் சந்தையில் அடியெடுத்து வைத்தது ரிலையன்ஸ். தனது அண்ணன் மகனான விமலின் நினைவாக ‘விமல்’ என்ற பெயரில் தங்களது பொருட்களை தயாரித்து வெளியிட்டனர். கூடிய விரைவில் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் பெயரானது விமல். அதன்பிறகு பாலியஸ்டரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார்.

மேலும் எந்த வணிகத்திற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்பதை திருபாய் எப்போதும் ஆராய்ந்து வந்தார். இதன் விளைவாக மசாலா, வெற்றிலை, சர்க்கரை, வெல்லம் போன்ற பொருட்களில் அதிகமாக வர்த்தகம் செய்ய துவங்கினார். திருபாய் அம்பானி பெரிய லாபத்தை பெற வேண்டுமென்றால் குறைந்த லாபத்திற்கு பொருட்களை விற்க வேண்டும் என்பதை அறிந்து இருந்தார். அதுவே அவரது வாழ்க்கையை வெற்றி பாதையை நோக்கி அழைத்து சென்றது. அதன் பிறகு நுகர்வோர் சந்தை அவருக்கு சாதகமாக மாறியது. அன்றைய காலகட்டத்தில் இவர் இறக்குமதி செய்த பொருட்கள் எல்லாம் குறைந்தபட்சம் 300 சதவிகித லாபத்தை ஈட்டித் தந்தன. இறக்குமதியில் மட்டுமின்றி ஏற்றுமதியிலும் கவனம் செலுத்தினார் அம்பானி.மிள்காய் விளைச்சல் அதிகமாக இருந்ததால் வளைகுடா நாடுகளுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்தார். லாபத்தை இன்னும் அதிகரிக்க பாலியஸ்டரை தானே தயாரிக்க நினைத்தார் அம்பானி. அதற்கான கனரக இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து பாலியஸ்டர் தொழிற்சாலையை உருவாக்கினார். உலக வங்கியிலிருந்து அந்தத் தொழிற்சாலையை பார்க்க வந்த வல்லுநர்கள், ‘வெறும் 14 மாதங்களில் இவர்கள் இத்தொழிற்சாலையை அமைத்த விதம் அபாரமானது. உலகத்தரத்தில் இத்தொழிற்சாலை அமைந்துள்ளது’ என்று சான்றளித்தனர். இதுதான் அம்பானியின் தொலைநோக்குப் பார்வை. சக போட்டியாளர்களைவிட பல அடிகள் முன்னர் இருப்பார் அம்பானி.

அம்பானி தான் மட்டும் உயர வேண்டும் என்று நினைத்தவரல்ல. தன் நிறுவனத்தின் பங்குதாரர்கள் முதற்கொண்டு பணிபுரியம் ஊழியர்கள் வரை அனைவருக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுத்தவர் அம்பானி. ஊழியர்களின் சம்பளத்தை சீராக உயர்த்திக்கொண்டே இருப்பார். சலுகைகளை அடிக்கடி வாரி வழங்குவார். 1986ல் இவர் நடத்திய பங்குதாரர்கள் மாநாட்டிற்கு, உலகமே வியக்கும் வகையில் சுமார் 30,000 பங்குதாரர்கள் பங்கேற்று பிரமிக்க வைத்தனர்.

முன்னதாக பாலியஸ்டர் உற்பத்தியில் இவர் எடுத்த முயற்சிகள் பெரும் லாபத்தை ஈட்டியது. இத்தனைக்கும் அவர் நைலான் துணியில் தரமான ஆடையை தயாரித்த பின்பும், முழு விற்பனையாளர்களும் அவரிடம் துணி வாங்க தயாராக இருக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த ஆலைகளில் வாங்கி வந்ததால் புதிதாக ஒருவரிடம் துணிகளை வாங்க யாரும் தயாராக இல்லை.இதை கண்ட திருபாய் தனது துணிகளை சில்லரை வியாபாரிகளிடம் கொண்டு சென்றார். அவர்களிடம் தனது துணிகளை விற்றார். தொழிலில் அவரது ஆர்பணிப்பு காரணமாக அவரால் அனைவரும் ஈர்க்கப்பட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு தேவை அதிகரித்தது. இதனால் ‘பாலியஸ்டர் பிரின்ஸ்’ என்று அழைக்கப்பட்டார். 1990களுக்குப் பிறகு ரிலையன்ஸ் கண்டதோ அசுர வளர்ச்சி. டெக்ஸ்டைல் மட்டுமல்லாது பெட்ரோலியம், தொலைத்தொடர்பு என ஒவ்வொரு துறையிலும் கால்பதித்தது ரிலையன்ஸ் நிறுவனம். கால்பதித்த ஒவ்வொரு துறையிலும் விருட்சமடைந்து இன்று உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் சக்தியாய் நிற்கிறது ரிலையன்ஸ்.

இன்றைக்கும் உலக வணிக சந்தையில் ஒரு பெரும் இடம்பிடித்த ரிலையன்ஸை தனது ஒற்றை மூளையால் செதுக்கிய திருபாய் அம்பானி, தனது மூளை ஒத்துழைக்காமல் போக மீண்டும் வலிப்பு ஏற்பட்டு தனது 69வது வயதில் காலமானார். 2002-ம் ஆண்டு இதே ஜூலை 6-ம் நாள் இயற்கை எய்தினார் திருபாய் அம்பானி.

error: Content is protected !!