பட்டத்து அரசன் – விமர்சனம்!

பட்டத்து அரசன் – விமர்சனம்!

மிழ் சினிமாவில் ‘களவாணி’ படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் சற்குணம். விமல் மற்றும் ஓவியா நடிப்பில் வெளியாகியிருந்த அப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக இவர் டைரக்ஷனில் வெளியான ‘வாகை சூட வா’ திரைப்படமும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. அதைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘நையாண்டி’ மற்றும் அதர்வா நடிப்பில் ‘சண்டிவீரன்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இந்நிலையில், லைகா தயாரிப்பில் ராஜ்கிரண் மற்றும் அதர்வாவை வைத்து பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட்டில் வழங்கியுள்ள படமே ‘பட்டத்து அரசன்’.

கபடி போட்டியால் வாழும் போதே சிலையான பொத்தாரி ராஜ்கிரண் மற்றும் அவரின் குடும்ப கதைதானிது. அதாவது பொத்தாரிக்கு இரண்டு மனைவிகள், வாரிசுகளுடன் கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர். ஒரு சூழலில் இரண்டாம் தாரத்தின் மகன் ஆர்.கே.சுரேஷ் கபடி போட்டியில் இறந்துவிடுகிறார். அவர் மரணத்திற்கு பொத்தாரிதான் காரணம் என கூறி ஆர்.கே.சுரேஷ் மனைவி ராதிகா தன் மகனுடன் தாரப் பங்கை வாங்கி கொண்டு தனியாக செல்கிறார். இதற்கு பின் பொத்தாரிக்கு நேர்ந்த ஒரு அவமானச் சிக்கலால் நிகழ்ந்த பலத் தரப்பட்ட சம்பவங்களே இப்படத்தின் கதை.

மெஜெஸ்டிகான குடும்ப தலைவனாக நெகிழ்சியூட்டுவதுடன், ஒரு கபடி வீரனாக களமிறங்கி மிரளவும் வைக்கிறார் ராஜ்கிரண். இது மாதிரியான கேரக்டரில் அவர் முன்னரே சில பல படங்களில் நடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் தன் கேஷூவல் நடிப்பின் மூலம் ரசிக்க வைத்து ஆச்சரியப் படுத்தும் வித்தை தெரிந்தவராக இருக்கிறார். ராதிகாவிற்கு மற்றுமொரு நல்ல ரோல், அதை தன் சிறப்பான நடிப்பின் மூலம் திரையில் அசத்தியிருக்கிறார். பபளிக் ஸ்டார் என்ற அடைமொழிக்கு சொந்தகாரரான சுதாகர் நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது.

சிங்கம்புலியின் காமெடிகள் ஓரளவிற்கு ரசிக்கவைக்கிறது. நாயகி ஆஷிக்காவிற்கு கிராமத்து கதாபாத்திரம் ஓரளவிற்கு பொருந்தியிருக்கிறது, அதில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆர்.கே.சுரேஷின் வில்லத்தனமான நடிப்பு கதைக்கு கூடுதல் பலம். ஜிப்ரானின் பின்னணி இசை திரைக்கதையை மற்றொரு தளத்திற்கு எடுத்து செல்கிறது. பாடல்கள் அனைத்தும் அழகான கிராமத்து மண்வாசனை.

கிராமத்து குடும்பக் கதையை அதன் மணம் மாறாமல் திரையில் பரிமாற முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சற்குணம். உடன் கபடியை களமாக்கியிருக்கிறார். மண்சார்ந்த படைப்புகளில் தேர்ந்த அவர், வெற்றிலை விவசாயம், ஊர்மக்களின் கலாசாரம், கதாபாத்திரங்களின் பெயர்கள் முதற்கொண்டு கிராமத்து நெடியை தூவியிருக்கிறார். கதையை அடுத்தடுத்து ஊகிக்க வைக்க அளவுக்கு கொண்டு போயிருப்பதால் பெரிய சுவாரசியங்கள் இல்லை என்றாலும் ஆங்காங்கே வரும் காமெடி,பாடல்கள்,சண்டைகள்,கபடி காட்சிகள் என சலிக்காத வகையில் படம் இருப்பதால் ஃபீல் குட் மூவி லிஸ்டில் சேர்ந்து விடுகிறான் இந்த பட்டத்து அரசன்

மார்க் 3.5/5.

error: Content is protected !!