பரோல் -விமர்சனம்!

பரோல் -விமர்சனம்!

பெரும்பாலான குடுமபங்களுக்கு பேப்பர் சேதியாக மட்டும் தெரிய வரும் பரோல் பற்றி விலாவாரியாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அப்படியான பரோல் பற்றி சொன்னதை விட ரத்தத்தையும், கொலையையும், வன்முறையையும் காட்டி பலான வார்த்தை பிரயோகம் காட்டி இருப்பதுதான் குமட்டுகிறது. அதிலும் இன்னமும் தமிழ் ரசிகர்கள் நினைவில் நிற்கும் விக்ரம் வேதா உள்ளிட்ட சில படங்களின் சாயலில் ஒரு முழு நீளப் படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள்.

அம்மா ஜானகி சுரேஷுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் ஆர்.எஸ்.கார்த்திக். இன்னொருவர் லிங்கா. இதில் மூத்த மகன் லிங்கா சிறுவயதிலேயே தகாத சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று விட்டு திரும்பி கூலிப்படையாக பல கொலைகள் செய்து வருகிறார். இளைய மகன் ஆர்.எஸ். கார்த்திக் பிளம்பிங் வேலை செய்து கொண்டு வீட்டையும் தாயையும் கவனித்துக் கொள்கிறார். ஆனால் அம்மா ஜானகி சுரேஷுக்கு மூத்த மகன் மேல் அதீத அன்பு. அவனை எப்படியாவது திருத்தி நல்வழிக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறார். இதனால் இளைய மகன் ஆர்.எஸ்.கார்த்திக்கு தாய் மேலும், தன் அண்ணன் லிங்கா மேலும் பொறாமை. இந்த நிலைமையில் இரட்டைக்கொலை செய்துவிட்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று மூத்த மகன் லிங்கா ஜெயிலுக்கு சென்று விடுகிறார். மூத்த மகன் லிங்காவை எப்படியாவது விடுதலை செய்ய கருணை மனு கொடுக்க தாய் முயற்சி செய்ய, அதை இவர்கள் மேல் வெறுப்பாக இருக்கும் இளைய மகன் ஆர்.எஸ்.கார்த்திக் தடுக்கிறார். தான் தான் அம்மாவுக்கு முதன்மை மகனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்க, அந்த நேரம் பார்த்து அவரது தாய் ஜானகி இறந்து விடுகிறார். அண்ணன் மீது இருக்கும் பொறாமை, வெறுப்பினால் தன் தாய்க்கு தானே இறுதி சடங்கை அண்ணனுக்கு தெரியாமலேயே முடித்து விடலாம் என முடிவெடுக்கிறார் தம்பி ஆர்.எஸ்.கார்த்திக். ஆனாலும் சொந்த பந்தங்கள், நண்பர்களின் தலையீட்டினால் வேறு வழியின்றி தன் அண்ணன் லிங்காவை பரோலில் எடுக்க முயற்சிக்கிறார் தம்பி ஆர்.எஸ்.கார்த்திக். இதையடுத்து, அண்ணன் லிங்காவுக்கு பரோல் கிடைத்ததா, இல்லையா? அண்ணன் ஏன் இவ்வளவு கொடூர கொலைகாரனாக மாறினார்? தம்பி எடுத்த அதிரடி முடிவு என்ன? என்பதே பரோல் கதை..

நடிப்பைப் பொறுத்தவரை லிங்காவும் ஆர்.எஸ். கார்த்தியும் நிஜ அண்ணன் தம்பியாக பக்கா கெமிஸ்ட்ரியில் நடித்துள்ளனர். அண்ணன் கொலையே செய்தாலும், அம்மா அவனை தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதால் அப்செட் ஆகும் பிளம்பிங் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வரும் ஆர்.எஸ். சுரேஷின் நடிப்பு ஆஹா என்று தான் சொல்ல வேண்டும். ஹீரோயின்களாக வரும் கல்பிகா, மோனிஷா கொஞ்சம் நேரம் வந்தாலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அம்மாவாக நடிக்கும் ஜானகி சுரேஷ் யதார்த்தமான அம்மாவை நினைவு படுத்துகிறார் வக்கீலாக வினோதினி வைத்தியநாதன் சரியான தேர்வு.

முனீஸ் எடிட்டிங்தான் படத்திற்கு மிகப் பெரிய பலம். ராஜ் குமார் அமலின் பின்னணி இசை திரைக்கதை தொய்வு இல்லாமல் நகர உதவுகிறது. மகேஷின் ஒளிப்பதிவு ஓகே..

ஆனால் படம் நெடுக ஆபாச வார்த்தைகள், கை சிமிஞ்சைகள், தாயின் இறப்பை மறந்து சுயநலமாக சிந்தித்தல், ஆரம்பக் காட்சிகளில் தொடங்கும் வன்முறைகள், கொலைகள் செய்யும் விதம் ரத்தமும் சதையுமாக அதிகமாக காட்டப்படுவது என்று  வட சென்னை என்றாலே தாதா உலகம் என்பதை அழுத்தமாகச் சொல்லி பெயில் மார்க் வாங்கி விட்டார் இயக்குநர்

மொத்தத்தில் பரோல் – ரிஜெக்டட்

மார்க் 2.25/ 5

error: Content is protected !!