December 1, 2022

பேப்பர் ராக்கெட் – வெப் சீரீஸ் – விமர்சனம்!

டந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் பேசும்போது இந்தியாவில் சுமார் ஆறு கோடி மனநோயாளிகள் இருப்பதாக ஓர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார். அதாவது, தமிழகம் போன்றதொரு மாநிலத்தின் மக்கள்தொகை அளவுக்கு இணையான எண்ணிக்கை இது. இவர்களில் ஒன்று முதல் இரண்டு கோடிப் பேர் ஸ்கீசோப்ரெனியா, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்ற கடுமையான மனச்சிதைவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும், மனஅழுத்தம் (Stress) மனச்சோர்வு (Depression) மனப்பதற்றம் (Anxiety) போன்ற சாதாரண மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் ஐந்து கோடி பேர் வரை இருப்பார்கள் என்பதும் அவர் குறிப்பிட்ட இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல். ஆறு கோடி பேர் உள்ள தமிழகத்தில் 70 லட்சம் பேர் மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது இன்னொர் ஆய்வு. இதில் ஏழு லட்சம் பேருக்கு மனநோய் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இப்படியான சூழலில் மனித உணர்வுகளை அடிப்படையாக வைத்து ஒரு வெப்சீரீஸ் கொடுத்து அசத்தி இருக்கிறார் கிருத்திக உதயநிதி., .!

பேப்பர் ராக்கெட் என்ற அந்த வெப் சீரிஸ் கதை என்னவென்றால் அப்பாவின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மனநெருக்கடியில் தவிக்கும் நாயகன் காளிதாஸ் மனநல மருத்துவரான பூர்ணிமா பாக்யராஜை சந்திக்கிறார். அங்கு அவரைப் போல மன நல சிகிச்சைக்கு வந்திருக்கும் நாயகி தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கருணாகரன், நிர்மல் பாலாழி, கெளரி கிஷன் ஆகியோரோடு நட்பு ஏற்படுகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பயணம் போகிறார்கள். பயணம் எங்கே? அந்தப் பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை நெஞ்சம் நெகிழ்வாக் சொல்லி இருக்கும் இணையத் தொடர்தான் இந்த பேப்பர் ராக்கெட்.
நாயகன் காளிதாஸ் ஜெயராமுக்கு நல்ல வேடம். அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார், தான்யா ரவிச்சந்திரன் அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ரேணுகாவின் கதாபாத்திரம் கொடுமையானது, கெளரி கிஷனின் சிக்கல் வேதனையானது நிர்மல் பாலாஜியின் பாத்திரமும் ஏற்க முடியாத ஒன்று. கருணாகரன் கதாபாத்திரம் வித்தியாசமானது. அன்றாட வாழ்வின் எந்தச் சிக்கலும் இல்லாத அவருக்கு எல்லாமே சிக்கல்தான். தொடரின் ஆதாரமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார் நாயகனின் அப்பா நாகிநீடு.

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு அழகு. சைமன் கே கிங், தரன்குமார்,வேத்சங்கர் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். சித்ஸ்ரீராமின் பாடல் நம்மை உருகவைக்கிறது. ரம்யாநம்பீசன் பாடல் ரசனை. எழுதி இயக்கி, மனித உணர்வுகளுக்குள் பயணப்பட்டு, எளிமையாக விளக்கி, அன்பு பாசம் காதல் ஆகியனவற்றை நிறைத்து, நம்மைப் பல இடங்களில் அழவைத்து மனதுக்கு நெருக்கமாகியிருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. இன்னமும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா கால கட்டம் நம் கண் முன் பலரது வாழ்வை அடித்து சென்றுவிட்டது. பலர் மறைந்து விட்டனர் நாம்ஏன் வாழ்கிறோம் எனும் கேள்வியும் மன அழுத்தமும் பலரிடமும் இருக்கிறது. அதற்கெல்லாம் பதில் இந்தத் திரைக்கதையில் இருக்கிறது. ஒவ்வொரு எபிஸோடும் மிக அழகாக ஒரு கதையையும் அதில் நமக்கு ஒரு படிப்பினையையும் இணைந்துசொல்கிறது. குறிப்பாக முடம் முடக்கி போடாது முடங்கிவிடாதீர்கள். இறப்பு ஒரு நிகழ்வு கலங்காதீர்கள், பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என ஒவ்வொரு எபிஸோடும் ஒரு தத்துவம் சொல்கிறது.

குறிப்பாக வெப் சீரிஸ் என்றாலே மிகவும் டார்க் ஆகவும், அடிதடி வன்முறை உடனும், திரில்லர் அல்லது ஹாரர் பாணியிலும் வெளியாகி வரும் நிலையில், ஒரு ஃபீல் குட் வெப்சீரிஸை அதுவும் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும்படியாக இந்த சீரீஸை இயக்கியுள்ள கிருத்திகா உதயநிதி பிரமிக்க வைத்து விட்டார்.