October 19, 2021

பேலியோ ; உணவிற்கு முன் உடற்பயிற்சி பற்றி ….!

ஒரு நாளைக்கு ஐந்து கி.மி ஓடினால் போதும்..எந்த பருமனும் நெருங்காது என்று சிலர் சொல்லக் கேட்டு இருக்கலாம். இல்லாவிடில் பத்து கி,மி, . நான் போகும் பார்க் ஆகட்டும், ஜிம் ஆகட்டும் பெரும்பாலும் உடல் பருமன் அட்லீஸ்ட் தொப்பையாவது இருக்கும். இல்லாவிடில் கடும் டயட் பழக்கத்தில் அல்லது தீவிர உடற்பயிற்சியில் இருப்பார்கள்.

edit nov 7

காலையில் எழுந்து வாசல் பெருக்கி, சாணி தெளித்து, தெருவடைக்க கோலம் போட்டு, கிணற்றில் நீர் சேநதியோ அல்லது குளத்துக்கு நடந்து சென்றோ குளித்து, மஞ்சள் பூசி பாவடையை உயர்த்திக்கட்டி தோளில் ஈரத்துணிகளுடன் நடந்து வந்து, வீட்டில் வெயில் காலத்தில் செய்து வைத்திருந்த மண் அடுப்பு அல்லது கரி போட்டு குமுட்டி மூட்டி, அதில் வெந்நீர் போட்டுவிட்டு, விறகுகள் குமித்து கையில் இருக்கும நீரகாரம் எடுத்து குடித்துவிட்டு, எல்லாருக்கும் பழைய சோறு, தயிர், மாவடு, வற்றல், ஊறுகாய், கருவாடு ஏதோ ஒன்று வைத்து இல்லை அம்மியில் அவசர துவையல் அரைத்து கொடுத்து, வீடு பெருக்கி, மொழுகி, ஆங்கிலேயர் காலம் பிறகு காபிக்கொட்டை வறுத்து, அதை மெஷினில் பொடித்து டிகாஷன் பில்டரில் போட்டுவிட்டு தொழுவு பக்கம் போய் கன்றுகுட்டி அவிழ்த்து விட்டு அதன் வயிறு நிறைந்தவுடன் ஆசுவாசமான மாட்டை தடவிகொடுத்து பால் கறந்து, குழந்தைகளுக்கு பாலும், பெரியவர்களுக்கு காபியும் கலந்து, காய்கறி, கீரை செக்கில் எண்ணேய் போட்டு சமைத்து, ஒரு நாள் அரிசி சோறு, ஒரு நாள் கம்பு, ராகி, அசைவம், வீட்டுக்கு பின் இருக்கும் கோழி முட்டை என்று மாற்றி மாற்றி சமைத்து, வயலுக்கு போயி அங்கு சூரியனில் வேலை செய்துவிட்டு , மதியம் நன்றாக உணவை உண்டு, மிச்சம் வேலை செய்து, குழந்தைகளுக்கு உணவு கொடுத்து இரவு அடுப்பை கழுவி சாணி மொழுகி கோலம் போடும்வரை ஓய்வே இருக்காது.

நடுவில் உளுந்து, பயறு உடைப்பது, புளி குத்துவது, மாவு இடிப்பது, கல் பொறுக்குவது, அடுப்பு கட்டுவது, காய்கறி கிடைக்காத மழைக்காலத்துக்கு வற்றல் வடாம் செய்வது. மாட்டுக்கு தீவனம், கொல்லைப்பக்கம் கீரை, தோட்ட வேலைகள்..இது தஞ்சை மண்டலம்..கொங்கு மண்டலத்தில் நெசவுடன் இயைந்த வாழ்வு, கடற்கரை மக்களுக்கு மீன் பதப்படுத்தல்..ஆதி குடி பெண்களுக்கு கிழங்கு விறகு எடுத்தல், மாலை நடனத்தில் ஈடுபடுதல்..கீற்று முடிந்து குடிசைக்கு பயன் படுத்தல், தேங்காய் எடுத்து எண்ணைய் ஆட்டிகொள்வது, எள் சுத்தம் செய்து எண்ணைய் ஆட்டுவது என்று தன்னிறைவு கிராம வாழ்கை முறையை ஒரு பத்தியில் பட்டியல் இட முடியாது.

விளையாட்டு சாமான்கள் கூட இயற்கை.. ஆற்று மணல், ஓட்டும் புல், ஊமத்தை வெடி, வாய்க்கால் ஆட்டம், மணல், சூடுக்காய் , கோவக்காய் டஸ்டர் என்று எல்லாம் இயற்கையில் கிடைத்தவை. அவற்றை சேகரம் செய்யவே நாள் முழக்க சரியா இருக்கும் குழந்தைகளுக்கு..

ஆண்கள் உடல் உழைப்பு பற்றி கேக்கவே வேண்டாம்..வேட்டை, மீன் பிடித்தல்,விவசாயம், தேன் சேகரிப்பு இன்னும் இன்னும் என்று எத்தனையோ..நாள் முழுதும் வேலைகள்….

பெட்ரோல் தேவையில்லை, இறக்குமதி தேவையில்லை..மண்பாண்ட குயவர், ஆசாரி, தச்சர், எல்லாரும் ஊருக்குள் ஒருவருக்கு ஒருவராய்.
எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் காலையில் இருந்து மாலை வரை இடைவிடா உழைப்பு.எந்த உழைப்பாளிக்கும் எடை பிரச்னை வந்ததே இல்லை. என்று உக்கார்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தோமோ அன்றே..ஆரம்பித்தது லைப் ஸ்டைல் நோய்கள் எனும் வில்லன்.

காலையில் ஒரு மணி நேரம் ஜிம் அல்லது வாக்கிங், மிதமான உணவுகள், மாலை சிறிது வாக்கிங்..பிறகு ட்ராபிக்கில் மணிக்கணக்கில் அமர்ந்து டிரைவிங். எல்லாம் உழைப்புதானே..ஏன் சர்க்கரை குறைவில்லை, ஏன் உடல் நினைத்த அளவுக்கு இளைக்கவில்லை? கேள்விகள்..

இதான் இயற்கை..ஆதி மனிதன் நாள் முழுக்க ஓடியாடினான். கடந்த நாற்பது வருடம் முன்பு வரை ஓடியாடிய உழைப்பை கோரிய வேலைகள்..அவனுக்கு கூகிள் மேப் இல்லாமல் எந்த இடத்தையும் அடையும் சக்தி உண்டு. அந்த நுண்ணறிவும் இப்பொழுது அடுத்த தெருவுக்கு கூட போக முடியா அளவுக்கு அழித்து விட்டோம்.

பேலியோ குழுவில் கடுமையான உடற்பயிற்சிகள் பரிந்துரைக்க படாத காரணம் மேலே வாசித்தப்பொழுது புரிந்திருக்கும். நாள் முழுக்க அமராமல் ஓடியாடிய உழைப்பு தேவை. அதற்கு நாள் முழுதுமான நடை, வாரம் இரு நாள் ஓட்டம், வாரம் ஒரு நாள் ஜிம் அல்லது யோகா இது போதும். (முக்கிய கருத்துகளுக்கு செல்வன் மற்றும் ரிஷி அவர்களுக்கு நன்றி)

எனவே ஆப் அல்லது பேன்ட் போட்டுகொண்டு பன்னிரெண்டாயிரம் அடிகள் குறைந்தபட்சம் வைத்துகொண்டால் கண்டிப்பாக ஓரளவுக்கு நாள் முழுக்க நடை செய்வோம். ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு நீண்ட நேரம் அமர்ந்திருப்பது நல்லது அல்ல. நாள் முழுக்க ஏதோ ஒரு காரணத்தால் ஓடியாடி உழைப்பதே உடல் நலனுக்கும், திறனுக்கும் நல்லது. கம்புயுட்டர் முன் அமர்ந்திருந்தாலும் மணிக்கு ஒரு முறை பத்து நிமிடம் நடந்துவிட்டு வருவது ..அப்போ அப்போ அமர்ந்த இடத்தில அசைவு கொடுப்பதும் நல்லது.
அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாக உடல் திறனை தங்கள் உழைப்பு பேரில் மேம்படுத்திக் கொள்ளலாம்.(சைக்ளிங், யோகா, ஜிம் போன்றவை) ஆனால் அவை அலுக்காமல் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க வேண்டும். பெண்களுக்கு முக்கியமாக உடற்பயிற்சி நேரம் பற்றி யோசனை இருப்பவர்கள்..விடாமல் இருக்கும் இடத்தில் எட்டு போட்டு, ஒரு சிறு நடை மேற்கொண்டு, வெளி வேலைகளுக்கு நடந்தே செல்வது, முடிந்தவரை வாகனங்களை தவிர்ப்பது என்று பழகினால் போதுமானது.

சரி நாள் முழுக்க ஓடியாடி உழைக்கிறேன்.. சர்க்கரை குறையுமா?

அடுத்து உணவுக்கு வருவோம்
..
ஏன் சிறுதானியமும் மறுக்கப்படுகிறது?

அனுபவங்கள் தொடரும்..

கிருத்திகாதரன்