வாகா எல்லையை மூட பாகிஸ்தான் முடிவு!

இது நாள் வரை என்னவோ ரொம்ப நெருக்கமாக இருந்தது போல் இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்து கொண்ட பாகிஸ்தான் அரசு தற்போது வாகா எல்லையை மூடவும் முடிவு செய்துள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் தேசிய பாதுகாப்புக் குழுக்கூட்டம் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்றது. உயர் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தையடுத்து இந்தியாவுடனான உறவுகளைத் துண்டிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் புகார் அளிக்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் இந்தியாவுடனான எல்லை தாண்டிய வர்த்தகத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. வாகா எல்லையை மூட முடிவு செய்திருப்பதுடன் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரை திருப்பி அனுப்பவும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை வரவழைக்கவும் அரசு முடிவு செய்து இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அறிவித்துள்ளார்.

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் என்றும், ஆகஸ்ட் 15ம் தேதி துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே நேற்றிரவு முதல் பாகிஸ்தான் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை விதித்து தமது 9 வான் வழித்தடங்களில் மூன்றை மூடிவிட்டது. இந்தியா-ஆப்கானிஸ்தான் விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்லும்படி பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. லாகூர் பகுதியில் வெளிநாட்டு விமானங்கள் 46 ஆயிரம் அடி உயரத்திற்கு கீழாக பறக்கக் கூடாது என்றும் பாகிஸ்தான் கட்டுப்பாடு விதித்துள்ளது.