October 21, 2021

பாகிஸ்தானில் பரப்பரப்பான அரசியல் சூழலில் பொதுத்தேர்தல்!

இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கும் பாகிஸ்தானில் பரப்பரப்பான அரசியல் சூழலில் நாளை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி கடந்த 2013ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டால் பிரதமர் நவாஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில், பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இதில், நவாஸ் கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி காணப்படுகிறது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை நள்ளிரவே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றிரவே யார் புதிய பிரதமர் என்பது தெரியக்கூடும்.

தேர்தலையொட்டி, அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. இதில் பல்வேறு இடங்களில் வேட்பாளரை குறிவைத்து தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தினர். இதில், பல வேட்பாளர்களும் 200க்கும் மேற்பட்ட மக்களும் கொல்லப்பட்டனர். இதனால், வாக்குப்பதிவின் போது தீவிரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றலாம் என பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீவிர பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இம்முறை தேர்தலில் திருநங்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் 13 திருநங்கைகள் போட்டியிடுகின்றனர். இதுதவிர, 125 திருநங்கைகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, குவெட்டா ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.