May 10, 2021

பாகிஸ்தானில் ஜூலை மாதம் பொது தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் பரிந்துரை!

தீவிரவாதிகள் நிறைந்த பாகிஸ்தானில் ஜூலை மாதம் பொதுத்தேர்தலை நடத்தலாம் என அதிபர் மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

பாகிஸ்தானில் ஜூலை மாதத்தில் பொதுத்தேர்தல் நடத்த 3 தேதிகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பிரதமர் ஷாகித் அப்பாஸி தலைமையிலான அரசின் பதவிக்காலம் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதே போல மாநில சட்டமன்றங்களின் ஆட்சி காலமும் முடிவடைய உள்ளது. இதனால் தற்போது பொதுத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மேலும் தேர்தலை நடத்த ஜூலை 25, 26 அல்லது 27 ஆகிய 3 தேதிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுமாறு பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசைனுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. ஜுன் மாதம் முதல் வாரம் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் 60 நாட்களுக்குள் தேர்தல் முடிவுற்று பாகிஸ்தானில் புதிய அரசாங்கம் பதவி ஏற்கும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே வேட்பாளர் தேர்வை ஆளுங்கட்சி தீவிரப்படுத்தியுள்ளதாகவும், இதற்காக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தற்போதைய பிரதமர் அப்பாஸியை சந்தித்துப் பேசியதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.