October 16, 2021

பாக். பயங்கரவாத இயக்கங்களின் சொத்துகள் முடக்கம்!

உலக அளவில் சதிகாரச் செயல்களுக்கு பேர் போன பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர். திங்களன்று லஸ்கர்-இ-தைபா, ஜமாத் உத் தவா ஆகிய 2 அமைப்புகளைத் தடைசெய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. பயங்கரவாத அமைப்பு கள் மற்றும் தனி நபர்களின் சொத்துகள் முடக்கப்படுவதா கவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

செவ்வாயன்று 44 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத் தலைவர் மசூர் ஆஸாரின் சகோதரர்கள் முப்தி அப்துற் ரவூப், ஹம்மத் ஆஸார் ஆகியோர் அடங்குவர் என பாகிஸ்தான் உள்நாட்டு பாதுகாப்பு இணை அமைச்சர் ஷெஹ்ரயர் கான் ஆப்ரிதி செய்தியாளர்களிடம் அறிவித்தார். புல்வாமாவில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு இந்தியா தந்த ஆதாரக் கோப்பில் மசூத் ஆஸாரின் இரு சகோதரர்கள் பெயர்களும் உள்ளன. எந்த நிர்பந்தமும் இல்லாமல் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தடைவிதித்துள்ள எல்லா அமைப்புகள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆப்ரிதி கூறினார்.

தேசிய செயல் திட்டப்படி உறுதியாக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தேசீய பாதுகாப்பு கமிட்டி முடிவு செய்துள்ளது. அதன்படி நடவடிக்கை தொடரும் என ஆப்ரிதி தெரிவித்தார்.

ஏற்கெனவே பாதுகாப்பு கவுன்சில் தடைவிதித்த அமைப்புகள்மீது உடனடியாக நடவடிக்கை தொடரும் என்று ஆப்ரிதி தெரிவித்தார்.

ஜெய்ஷ் -இ- முகம்மது அமைப்பு தடைசெய்யப்படுமா, முகம்மது ஆஸார் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதியாக அறிவிக்கப்படுவாரா என்று கேட்டதற்கு ஆப்ரிதி பதில் அளிக்கவில்லை.

ஆனால் மசூத் ஆஸார் சர்வதேச பயங்கரவாதி என்று தடைவிதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் நிர்பந்தம் தரப்படுகிறது. ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் நிதியைக் கண்காணிக்கும் அமைப்பு வலியுறுத்திவருகிறது.

மசூத் ஆஸார் தொடர்பாக தனது நிலையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்யக்கூடும். அம் மறுபரிசீலனை காரணமாக சீனாவுக்கு தர்ம சங்கடம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம்.

பயங்கரவாத அமைப்புகள்மீது தடைவிதிக்க இப்பொழுது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை தவறவிடாது என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறியதாக டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

லஸ்கர் இ தைய்பா, ஜமாத் உத் தவா மற்றும் பஃபலாஷ் இ இன்சானியத் பவுண்டேஷன் ஆகியவற்றை பாகிஸ்தான் அரசு தடை செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று இந்திய அரசு கூறியது.

இந்த அமைப்புகள் இதற்கு முன்னரும் பலமுறை தடை செய்யப்பட்டுளளன.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதேபோல தடைவிதிப்பதாக குடியரசுத் தலைவரின் அவசரச் சட்டம் வெளியானது. அந்த அவசரச் சட்டம் 6 மாதம் அமலில் இருந்தது.

6 மாதம் கழித்து காலாவதி ஆனாது. அத்தோடு தடையும் காலாவதி ஆனது. அது போலவே இப்பொழுதைய தடையும் அமையும் என்று இந்திய அரசுப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.