ஐ.பி.எல். போட்டிகளை ஒளிப் பரப்ப பாக். அரசு தடை!

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான இந்தியா ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை பாகிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பாக். பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘‘பாகிஸ்தானில் கிரிகெட்டை அழிக்க இந்தியா திட்டமிட்டவகையில் முயற்சியை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியாவின் உள்நாட்டு கிரிகெட் போட்டிகளுக்கு பாகிஸ்தானில் ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?’’

‘‘விளையாட்டு மற்றும் கலை, கலாச்சார நிகழ்ச்சிகளில் அரசியல் நுழையக்கூடாது என்பதில் பாகிஸ்தான் அரசு உறுதியாக உள்ளது. ஆனால் இந்தியா அவ்வாறு நினைக்கவில்லை. பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்களுக்கு எதிராக அராஜக நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்று ஃபவாத் சவுத்ரி குற்றம்சாட்டினார்.

கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமா தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் சூப்பர்ல் லீக் போட்டிகளின் (பி.எஸ்.எல்) ஒளிபரப்பை டி ஸ்போர்ட்ஸ் சேனல் நிறுத்தியது. மேலும் பாகிஸ்தான் பி.எஸ்.எல் போட்டிகளை உலகளவில் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பும் ஒப்பந்தத்தில் இருந்து இந்திய நிறுவனமான ஐ.எம்.ஜி ரிலையன்ஸ் பின் வாங்கியது.

இதன் காரணமாக திடீரென்று வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தேடும் நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது.

இதற்கு பதிலடியாகவே பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.