October 19, 2021

ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோ

ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோ 1881-ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 25-ந்தேதி) பிறந்தார். 20-ம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். ஜார்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக ‘கியூபிசம்’ என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.

picasso oct 25

பிக்காசோ, ஹென்றி மாட்டிசு, மார்செல் டச்செம்ப் ஆகிய மூவரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நெகிழி ஓவியத்தில் புரட்சி செய்த உலகின் தலை சிறந்த ஓவியர்கள் ஆவார்கள்.

ஓவியம், சிற்பம், அச்செடுத்தல் மற்றும் செராமிக் ஓவியங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிகோலியவர்கள். அமைதிச்சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப் படுத்தியவர் பிகாசோ ஆவார். இ

1881-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி ஸ்பெயின் நாட்டிலுள்ள மலகா (Málaga) என்னுமிடத்தில் ஜோச் ரூயிசு பால்சுகா – மரியா பிக்காசோ தம்பதியருக்கு முதல் பிள்ளையாகப் பிறந்தார். பிகாசோவினுடைய குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. பிகாசோ சிறுவயதில் ஓவியத்தில் திறமைபெற அவருடைய தாயார் ஒரு காரணமாக இருந்தார். தனது ஏழு வயதிலேயே ஒரு முறையான தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை பிகாசோ வரைந்தார். அவருடைய தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தி பயிற்சியளித்தார். பதினான்கு வயது நிறைவடைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் பிகாசோ நன்கு கற்றுக்கொண்டார்.

1891-ல் பிகாசோவினுடைய குடும்பம் கொருணா என்ற பகுதிக்குக் குடிபெயர்ந்தது. நான்கு ஆண்டுகள் பிக்காசோவின் தந்தை அங்குள்ள ஓவியப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அங்குதான் தனது மகனின் முடிவுறாத புறா ஓவியத்தைக் கண்ணுற்றார். அது புதிய பாணியைக் கொண்டிருந்தது. மேலும் அபொக்ரைபா என்ற கதையைத் தழுவியதாகவும் இருந்தது. 13 வயதே ஆன தனது மகனின் ஓவியத் திறமையைக் கண்ட ரூயிஸ் மிகுந்த வியப்புக்குள்ளானார்.

பிகாசோவின் ஆக்கங்களைப் பல்வேறு காலப்பகுதிகளாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். பிகாசோவின் பிற்காலப் படைப்புக்கள் தொடர்பான இத்தகைய காலப்பகுதிகள் பற்றிச் சரியான இணக்கம் இல்லாவிட்டாலும், பின்வருவன பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுப்புக்களாகும்.

நீலக் காலம் (1901-1904): இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் பெரும்பாலும் நீலநிறச் சாயை கொண்டவையாகக் காணப்பட்டன. ஸ்பெயினில் இவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம், நண்பரொருவரின் இறப்பு ஆகிய நிகழ்வுகள் இவரது இக்கால ஓவியங்களில் செல்வாக்குச் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. கழைக் கூத்தாடிகள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் இக்காலத்தில் இவர் வரைந்த ஓவியங்களில் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டனர்.

ரோஜா நிறக் காலப்பகுதி (1904-1906): இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் ரோஜா நிறச் (pink) சித்திரங்கள் ஆகும். இளைஞர்கள், தலைமுடி வாரும் பெண், நீச்சல் வீரர்கள், குடும்பம், வானர மனிதர்கள் என்பன இக்கால கட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்களாகும்.

ஆப்பிரிக்கச் செல்வாக்குக் காலப்பகுதி (1908-1909): ஆப்பிரிக்கக் கலைப் பொருட்களிலிருந்து கிடைத்த அகத் தூண்டல்களின் அடிப்படையில் உருவான ஓவியங்களே இக்காலப்பகுதியில் இவரது படைப்புக்களில் முதன்மை பெற்றிருந்தன.

பிகாசோவின் வாழ்வையும் படைப்புக்களையும் குறித்து சில திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் அதிக சிறப்பு வாய்ந்த திரைப்படம் ‘த மிஸ்டரி ஆஃப் பிக்காசோ’ ஆகும். இது 1955-ம் ஆண்டு வெளியாகியது. பிகாசோவை நேரடியாக ஓவியங்கள் வரையச் செய்து அதனை திரைப்படமாக்கினார்கள். ஓவியங்களை திரைப்படமாக்குவது என்பதில் இத்திரைப்படம் முன்மாதிரியாகவுள்ளது.

1996-ல் சுர்வைவிங் பிகாசோ எனும் திரைப்படம் ஜேம்ஸ் ஐவரி இயக்கத்தில் இஸ்மாயில் மெர்சன்ட் தயாரிப்பில் வெளியானது. இதில் ஆண்டனி ஹாப்கின்ஸ் பிகாசோவாக நடித்திருந்தார். ‘த மான் அண்ட் ஹிஸ் வோர்க்’ என்ற படம் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கிறது.

பப்லோ பிகாசோ தன் தொண்ணூறாவது பிறந்த நாளை பொதுமக்களுடன் கொண்டாடினாராம். தொண்ணூறு வயதிலும் அவரின் தூரிகை காயவில்லை. அந்த 90-வது பிறந்தநாள் விழாவில் கடந்த ஒரு மாதத்தில் தான் வரைந்த எட்டு ஓவியங்களை பாரிஸ் ஜாவர் அருங்காட்சிக்கு வைத்து அசத்தினார் பிகாசோ. தொண்ணூறு வயதிலும் அயராது உழைத்து நம்பிக்கையுடன் சாதனைப்பட்டியலை நீளச்செய்தவர் பிகாசோ. அதனால் தான் வரலாற்றில் தனக்கு என்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் பிகாசோ.

இவர் தனது 93-வது வயதில் காலமானார். அவரது உடல் பிரான்ஸின் தெற்கில் உள்ள வாவெனார்கஸ் கிராமத்தில் உள்ள செட்யூ என்ற இடத்தில் உள்ள அவரது ஸ்டுடியோ வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

குவர்னிகா: இது பிக்காசோவால் வரையப்பட்ட பிரபல ஓவியமாகும். முதலாம் உலக மகா யுத்தத்தில் குவர்னிகா நகருக்கு குண்டு வீசப்பட்டதை மையமாகக் கொண்டு இது வரையப்பட்டது. கொலாச் சித்திர வேலைப்பாட்டை பயன்படுத்தி இதனை அலங்காரம் செய்திருந்தார். யுத்தத்தின் கொடூரத்தன்மை, தனிமை, புலம்பல் ஆகிய வெளிப்பாடுகள் இச்சித்திரத்தின் கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

எக்ஸ்ட்ரா தகவல்

• பள்ளிப் பருவத்தில், பாடம் என்றாலே இவருக்கு கசப்பு. மோசமான மாணவனாக கருதப்பட்டார். ஒருமுறை சேட்டை அதிகமாகி, தனி அறையில் அடைத்தார்கள். உற்சாகமானவர் நோட்டுப் புத்தகத்தில் வரைய ஆரம்பித்துவிட்டார். ‘‘அந்த தனிமை ரொம்ப பிடித்திருந்தது. நிரந்தரமாக அடைத்து வைத்திருந்தால்கூட மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்’’ என்று பின்னாளில் கூறியிருக்கிறார்.

• பார்சிலோனா நுண்கலைக் கல்லூரி நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் 14 வயது சிறுவன் பிகாசோவுக்கு விதிவிலக்கு அளித்து சேர்த்துக்கொண்டனர். ஆனால், கல்லூரியின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் வகுப்புகளை ‘கட்’ அடித்துவிட்டு வீதிகளில் சுற்றித் திரிவார். கண்ணில்பட்ட காட்சிகளை மனதில் பதியவைத்து ஓவியங்களாகத் தீட்டுவார். மாட்ரிட் நகரில் உள்ள சான் பெர்னாண்டோ ராயல் அகாடமியில் ஓவியக் கலை பயின்றபோதும் இதேபோலத்தான்.

• பாரம்பரிய ஓவிய பாணியில் இருந்து 18 வயதில் முழுவதுமாக விடுவித்துக்கொண்டு புதிய முயற்சிகளில் இறங்கினார்.

• 2 ஆயிரம் சிற்பங்கள், 1200-க்கும் மேற்பட்ட ஓவியங்கள், 3 ஆயிரம் மண்பாண்ட சிற்பங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான கலைப் படைப்புகளுக்கு உயிர்கொடுத்த பிகாசோ, 93-வது வயதில் இறந்தார்.