September 25, 2022

’ஓவியாவ விட்டா யாரு’ (சீனி) – திரை விமர்சனம்

நவீன மயமாகி வரும் இன்றைய பொருளாதர சூழ்நிலையில் நோகாமல் ஈசியான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசைப்படும் மனிதர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களுக்கான பாடமாகவே வெளி வந்துள்ளது ‘ஓவியாவை விட்டா யாரு சினீ’ என்ற படம். குறிப்பிட்டு சொல் வதானால் மூடநம்பிக்கையை மூலதனமாக வைத்து மோசடி செய்யும் ஆசாமிகளை நம்ப வேண்டாம் என்ற கருத்தை காமெடி கலந்து சொல்லி கவர்ந்திருக்கிறார், இயக்குனர் ராஜதுரை.

படத்தின் கதை என்னவென்று கேட்டால் நாயகன் சஞ்செய் எம்.பி.ஏ படித்துவிட்டு வேலைக்கு போகாமல், சொந்தமாக தொழில் செய்து கோடீஸ்வரராக வேண்டும் என்றெண்ணி அதற்க்கான அவகாசத்தை வரும் வரை வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டு, நண்பர்களுடன் சுற்றிக்கொண்டு அப்படியே ஹீரோயின் ஓவியாவை காதலித்துக் கொண்டும் இருக்கிறார். அதே சமயம், சிலரால் ஏமாற்றப்பட்டு கொஞ்சம் அதிகப்படியான பணத்தை இழக்கும் சஞ்ஜெய், ராதாரவியுடன் இணைந்து பேராசை உள்ளவர்களை ஏமாற்றி கோடி கோடியாக பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். பிறகு அவரால் ஏமாந்தவர்கள் மூலம் அவருக்கு பெரிய பிரச்சினைகள் வர, அதில் இருந்து மீண்டு வந்தாரா இல்லையா, தான் நினைத்தது போல பெரிய தொழிலதிபர் ஆனாரா இல்லையா, என்பது தான் ’ஓவியாவ விட்டா யாரு’ (சீனி) படத்தின் மீதிக்கதை.

ஆரம்பத்தில் சொன்னது போல் உலகம் ஒரு செல் போனில் அடங்கும் அளவுக்கு வளர்ச்சியடைந் தாலும், படித்து பெரிய பதவியில் இருந்தாலும், பேராசை என்பது மனிதர்களை எப்படி முட்டா ளாக்குகின்றன என்பதை காதல், காமெடி, ஆக்‌ஷன் ஆகியவற்றை கலந்துக் கட்டி பக்கா கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜதுரை..

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் சஞ்ஜெய் நடனம் மற்றும் நடிப்பு இரண்டிலுமே பாஸ் செய்யும் அளவுக்கு பக்காவாக தயாராகியிருக்கிறார். அப்படியே அவரது உடம்பிலும் சற்று கவனம் செலுத்தினால் சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு.ஹீரோயினாக நடித்திருக்கும் ஓவியா, டைட்டிலில் ஆரம்பித்து, படம் முழுக்க வருகிறார். பாடல் காட்சிகளில் உள்ளாடை தெரியும்படி ஆடி, கவர்ச்சி விருந்து கொடுக்கிறார். டைட்டிலைப்போல் பாடல்களிலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின் பாம்பு பரமசிவனாக வரும் ராதாரவியின் நகைச்சுவை கலந்த வில்லத் தனம் ரசிக்க வைக்கிறது. அவர் வரும் எல்லா காட்சிகளிலும், தியேட்டரில் கலகலப்பும், எதிர்பார்ப்பும் அதிகமாகின்றன. இன்னொரு வில்லனாக ரவிமரியா சிரிப்பு மூட்ட ட்ரை செய்கிறார். கிளைமாக்ஸ் சண்டை காட்சியில், மிரட்டுகிறார். சரவணன் திடீர் வில்லனாக மாறுவது எதிர்பாராத திருப்பம். யானைப்பாகனாக செந்தில், சஞ்ஜெய்யின் தாத்தாவாக டி.பி.கஜேந்திரன் ஆகியோரும் சிரிக்க வைக்கிறார்கள்.

மொத்தத்தில் இன்றைய மனித வாழ்க்கைக்கு தேவையான மெசெஜை காமெடி கலந்து வழங்கி சபாஷ் சொல்ல வைத்து விட்டார்கள்

மார்க் 2.75 / 5