August 14, 2022

ஃபேஸ்புக் மூலம் அரசியல் விளம்பரத்துக்கு அதிகமா செலவழிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க!

ஒவ்வொரு கட்சியும் தங்கள் இருப்பை மக்களிடையே நினைவூட்ட கையாள்வதில் முக்கியப் பங்கு வகிப்பது பிரச்சாரம். மின்னொரு காலத்தில் தெருவில் மேடை போட்டு உரத்தக் குரலில் கத்தி தங்கள் சிந்தனையை பகிர்வார் கள் கால ஓட்டத்தில் அது சுவர் விளம்பரம், ரேடியோ விளம்பரம், பிளக்ஸ் பிரச்சாரம் என்று எவ்வளவோ மாறி சோஷியல் மீடியா தங்கள் பிரச்சாரம் செய்வது லேட்டஸ்ட் ட்ரெண்ட். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில், ஃபேஸ்புக்கில் அரசியல் விளம்பரங்களுக்கு அதிகமாக செலவழித்த 50 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஆம்.. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் இது போன்ற  ஃபேஸ்புக் பக்கங்களில் அரசியல் கட்சிகளின் வியூகங்கள், விளம்பரங்களை வடிவமைக்கும் விளம்பர நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் சந்தை மதிப்பு கொண்டவை. இவர்கள் வாடிக்கையாளர்களிடம் வாங்கும் கட்டணமும் கனரகம்தான். எல்லாம் கோடிகள், கோடிகள், கோடிகள்… ஏனென்றால், இவர்கள் உருவாக்கும் மாயைக்குப் பெரிய விலையுண்டு. உதாரணமாக, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பேஸ்புக் பக்கத்தைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 20 ஆயிரத்திலிருந்து 1.27 லட்சம் ஆனது; இது எப்படி விலை கொடுத்து வாங்கப்பட்டது என்பதைப் புட்டுப்புட்டு வைத்தன பிரிட்டிஷ் எதிர்க்கட்சிகள். ஃபேஸ்புக்கில் சாதாரணமாகத் தெரியும் ‘லைக்’குகளின் பின்னணியில் பல கோடிகள் புரள்கின்றன என்கிறார்கள்.

2014-ல் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திரம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிஷா, சிக்கிம் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில், பாஜக ரூ. 714 கோடி; காங்கிரஸ் ரூ. 516 கோடி செலவிட்டன என்பது அதிகாரபூர்வக் கணக்கு. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை, அரசியல் கட்சிகள் செலவழிக்கும் தொகை பற்றிய தகவல்கள் பெரும்பாலும் வெளியாவதில்லை. எப்படியும் பல நூறு கோடிகள் முதல் சில ஆயிரம் கோடிகள் வரை அவை நீளும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்

அதே சமயம் ஃபேஸ்புக் மூலம் செய்யப்படும் அரசியல் பிரச்சாரங்கள் மக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்து வதாக நிரூபிக்கப் பட்டுள்ளதால் இதில் அதிக செலவு செய்ய கட்சிகள் தயங்குவது இல்லை. அதே சமயம், அமெரிக்க அதிபர் தேர்தலின் போது கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா நிறுவனம் ஃபேஸ்புக் பயனாளர்கள் தகவலை திருடி அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனம், தனது தளத்தில் வெளியாகும் அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் ஒரு தரவுப்பெட்டகத்தை உருவாக்கியுள்ளது.

ஆட் லைப்ரரி (Ad Library) என்ற அந்த வசதியின் மூலம் விளம்பரங்களுக்கு யார் அதிகம் செலவு செய்கிறார்கள். அவர் களின் இலக்கு யார், அந்த விளம்பரம் எத்தனை பேரை சென்று சேர்ந்துள்ளது, எவ்வளவு செலவழிக்கப்பட்டது போன்ற தகவல்களைப் பெறலாம்.அந்த வகையில், சில முக்கிய பிரபலங்கள் ஃபேஸ்புக் விளம்பரத்துக்காக எவ்வளவு செலவழிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

அதன் படி பிப்ரவரி 1 முதல் மார்ச் 2 வரையிலான காலகட்டத்தில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி 27-வது இடத்திலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 44-வது இடத்திலும் உள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டி, 25 விளம்பரங்களுக்கு ரூ1,79,682 செலவு செய்திருக்கிறார். சந்திரபாபு நாயுடு 13 விளம்பரங்களுக்காக ரூ90,975 செலவு செய்துள்ளார். ஆனால், இரண்டு தலைவர்களுமே தங்கள் விளம்பரங்களுக்கு யார் செலவு செய்தார்கள் என்ற விவரத்தைத் தெரிவிக்கவில்லை.

ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் அங்கமான இந்தியன் பொலிடிக்கல் ஆக்‌ஷன் கமிட்டி (I-PAC) கட்சியை டிஜிட்டல் தளங்களில் பிரபலப்படுத்தும் பணியில் உள்ளது. ஐ-பேக் மட்டும் ஃபேஸ்புக் விளம்பரத்துக்காக ₹53,392 செலவழித்துள்ளது. ஆந்திர பாஜக ரூ53,392 செலவழித்திருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சி ரூ35,867 செலவழித்திருக்கிறது. ஆந்திர ஐடி அமைச்சர் நரா லோகேஷ், ₹39,288 செலவழித்திருக்கிறார். ஆந்திர காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.ரகுவீர ரெட்டி ₹34,051 செலவு செய்துள்ளார்.

மொத்தத்தில் பிப்ரவி 1 முதல் மார்ச் 2 வரையிலான காலகட்டத்தில், 2501 நபர்கள் அரசியல் விளம்பரங்களுக்காக ரூ.4 கோடி செலவழித்துள்ளனர்.