அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குகள் எம்புட்டுன்னு தெரியுமா?
போர்ப்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்டுள்ள செய்தியில், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊழலை ஒழிப்பேன் என சத்தியம் செய்து வந்த மோடியின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளது. ரபேல் விமான முறைகேடு, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியின் வங்கிக்கடன் மோசடி போன்றவற்றை சுட்டிக்காட்டியுள்ள போர்ப்ஸ் பத்திரிகை, ட்ரான்பரன்சி இண்டெர்னேஷனல் வெளியிட்டுள்ள புலனாய்வு அறிக்கையில், ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியா 78வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் அவர் கூறுகையில்,”கடந்த 2016 முதல் 2018 வரையிலான 3 ஆண்டுகளில் 4,123 அரசு ஊழியர்கள் மீது 1,767 ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. இதில் 900 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 59 வழக்குகளில் துறை ரீதியான நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 89 வழக்குகள் முடிக்கப்பட்டுவிட்டன.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 900 வழக்குகளில், 19 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப் பட்டன. 9 வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். 4 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஊழலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊழல் தடுப்புச் சட்டத்தை கடுமையாக்கி கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் ஜனவரியில் மட்டும் மொத்தமாக 67 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில் 765 வழக்குகளையும், 2017-ஆம் ஆண்டில் 940 வழக்குகளையும், 2016-ஆம் ஆண்டில் 925 வழக்குகளையும் சிபிஐ அமைப்பு பதிவு செய்துள்ளது” என்று ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.