ஆல்கஹால் பரிசோதனைக்கு உட்படாத ஏர் இந்தியா விமானிகள் & ஊழியர்கள்!

ஆல்கஹால் பரிசோதனைக்கு உட்படாத ஏர் இந்தியா விமானிகள் & ஊழியர்கள்!

இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகமான டிஜிசிஏ விதிகளின்படி விமானிகள் பணியில் இருக்கும்போது மது அருந்தியிருக்கக் கூடாது. இதற்காக, விமானத்தை இயக்குவதற்கு முன்பும், விமானத்தை தரையிறக்கிய பிறகும் விமானிகளுக்கு ஆல்கஹால் பரிசோதனை செய்யப்படுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவோர் மீதும், பரிசோதனைக்கு ஒத்துழைக்காத ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் 132 விமானிகள் மற்றும் 430 ஊழியர்கள் ஆல்கஹால் பரிசோதனையை தவிர்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக அவர்கள் அனைவரும் சிங்கப்பூர், குவைத், பாங்காக், அகமதாபாத் மற்றும் கோவா போன்ற குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும்போது இவ்வாறு ஆல்கஹால் பரிசோதனையை (மூச்சு பகுப்பாய்வு சோதனை) தொடர்ந்து தவிர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் ஏர் இந்தியா நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விமான போக்குவரத்து இயக்குனரகம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதன்படி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இதுபோன்று விதிமுறைகளை மீறுவோரை குறைந்தது 4 வாரம் சஸ்பெண்ட் செய்வதுடன் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க முடியும். ஆனால், அனைவரையும் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்தால், விமான நிறுவன பணிகள் முடங்கி விடும். எனவே, பகுதி பகுதியாக பிரித்து இந்த நடவடிக்கையை செயல்படுத்தலாம் என தெரிகிறது.

Related Posts

error: Content is protected !!