December 7, 2022

கங்கை நதியில் மிதந்து வரும் (கொரோனா நோயாளிகள்?) சடலங்கள்- வீடியோ🔞

பாஜக சுப்ரீம் தலைவர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மை கங்கா திட்டத்திற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தனித்துறை உருவாக்கப்பட்டதெல்லாம் தெரிந்த பழங்கதை. இப்போது அதே கங்கை நதியில் நூற்றுக்கணக்கான பிணங்கள் பீகாரில் எறியப்பட்டு கங்கை ஆற்றில் அழுகி நாய்களால் கடித்து குதறப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரழந்து உள்ளவர்களுடையதாக அஞ்சப்படும் நிலையில் உபி அரசை குற்றம் சாட்டுகிறது பீகார் அரசு..!

பீகார் மாநிலம் கங்கை நதியை ஒட்டிய கிராமங்களான சௌசா, மிஸ்ரவலியா, கட்கர்வா கிராமப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 40 க்கும் மேற்பட்ட சடலங்கள் கரை ஒதுங்கிய விவகாரம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடலங்கள் கரை ஒதுங்குவது குறித்து கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தனர். மேலும் சடலங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. கழுகுகளும் நாய்களும் இந்த சடலங்களை உண்பதற்காக பெருமளவில் வந்து குவிவதால், கங்கை நீரை குடிநீருக்காக பயன்படுத்தும் அந்த பகுதி மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.மேலும் இந்த சடலங்கள் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் நோய் தொற்றுக்கான அபாயமும் ஏற்பட்டுள்ளது.

நாடெங்கும் பரவி வரும் கோவிட் தொற்று ஏற்படுவதற்கு முன்பாக சடலங்களை எரிக்க ரூ.6000 வரை செலவானது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் இறுதி காரியங்களுக்காக பல மடங்கு விலையை வசூலித்து இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். இதனால் விறகு முதல் சம்பிரதாய பொருட்கள் என்று அனைத்திற்கும் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை செலவாகிறது. இதனால் பணத்திற்கு வழி இல்லாத ஏழைகள் சடலங்களை அப்படியே நதியில் விட்டு செல்வதாக உள்ளூர் வழக்கறிஞர் அஸ்வினி வர்மா தெரிவித்துள்ளார். கங்கை நதியை தூய்மைப் படுத்த ‘நவாமி கங்கே’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்த நதிக்கரையில் மின்மயானங்களை அமைத்திருந்தால் சாமானியர்களுக்கு அது உதவியாக இருந்திருக்கும் என்றும் அஸ்வினி குமார் கூறினார்.

இதுகுறித்து பக்ஸர் மாவட்ட ஆட்சியரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது இந்த சம்பவம் தொடர்பான புகார் என்னிடம் வந்துள்ளது. நதிக்கரையை சுத்தப்படுத்தவும் தேவையான நடவடிக்கையை எடுக்கவும் அந்தப்பகுதி தூய்மை பணி அலுவலரிடம் உத்தரவிட்டுள்ளேன் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

உயிரிழந்த சடலங்கள் கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களா என்பதை விசாராணைக்கு பின்புதான் உறுதி செய்ய முடியும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.