October 16, 2021

நம்மூர் அரசியலில் மக்கள் தேடும் மாற்றமும், ஏமாற்றமும்!

தமிழக அரசியலில் மாற்று, மாற்றம் என நெடுங்காலமாக ஒலித்து வரும் குரல்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மக்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்தன. ஆனால் மாற்று அரசியலுக்கான எதிர்பார்ப்புகள் அனைத்தையும் தகர்த்தெறிந்த தேர்தல் முடிவுகள் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் ஆதிக்கமே தமிழக அரசியலில் தொடரும் என்பது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தின. தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய இத்தகைய தோற்றம் உண்மைதானா? தமிழக மக்கள் திமுகவையும் அதிமுகவையும் தவிர வேறு கட்சிகளை ஏற்கத் தயாராக இல்லையா? மாற்றத்தைத் தமிழக மக்கள் விரும்பவில்லையா?தேர்தல் நேர அரசியல் நிகழ்வுகளையும் பிரசாரங்களையும் முடிவுகளையும் ஆய்வு செய்யும்போது இக்கேள்விகளுக்கான விடைகள் தெளிவாகக் கிடைக்கின்றன.

edit mar 7

முதலில் தேர்தல் கூட்டணி அமைந்த விதத்தை ஆய்வு செய்வோம். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன் கூட்டுவைத்துக் கொண்டு தேர்தலைச் சந்திப்பதையே வழக்கமாகக் கொண்ட இடதுசாரிகளும் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளும் மாற்றத்தை முன்வைத்துத் தனி அணி கண்டன. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தைத் தங்களால்தான் தரமுடியும் எனக்கூறி பாட்டாளி மக்கள் கட்சியும் பாரதிய ஜனதாவும் தனித்தனியே தேர்தல் களத்தில் இறங்கின. இவையனைத்தும் ”திமுக, அதிமுகவுக்கு மாற்று” என்கிற ஒரே முழக்கத்தை மக்கள் மன்றத்தில் வைத்தன.

இப்படியாக, மாற்றத்தைத் தர முன்வந்த கட்சிகள் தங்களுக்குள்ளேயே ஒற்றுமையின்றித் தனித்தனியாகக் களம் கண்டன. இதில் எந்தக் கட்சிக்கும் தனிப்பட்ட அளவில் பெரிய செல்வாக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஊழல் விவகாரங்கள் தொடங்கி இலங்கை விவகாரம் வரை அரசியல்ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய அனைத்து விஷயங்களிலும் ”உன்னால்தான் நான் கெட்டேன், என்னால்தான் நீ கெட்டாய்” என்று பரஸ்பரம் குற்றம்சாட்டி உறவை அறுத்துக்கொண்ட திமுகவும் காங்கிரசும் ”உன்னை விட்டால் எனக்கு வேறு நாதியில்லை, என்னை விட்டால் உனக்கு வேறு நாதியில்லை” என்கிற நிலையில் அறுத்த உறவில் மீண்டும் முடிபோட்டுக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டன. ”அதிமுகவுக்கு மாற்று திமுக மட்டுமே” என்பதை முன்வைத்து இக்கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டன.

மாற்றத்தை முன்வைத்த கட்சிகளைப் பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தது திமுக அணி. முந்தைய தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்களை எடுத்துக்காட்டி, அதிமுகவுக்கு மாற்றாக வர திமுகவால் மட்டுமே முடியும் என்கிற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தேர்தல் உத்திகளைக் கையாண்டது திமுக அணி. மாற்றத்தை முன்வைக்கும் பிறகட்சிகளால் வாக்குகளைப் பிரிக்க மட்டுமே முடியும், வெற்றிபெற முடியாது என்கிற வாதத்தை வலுவாக முன்வைத்த திமுக அணி,. தங்களது வலிமையைக் குறைத்து வெற்றியைப் பறிக்கும் நோக்கில் அதிமுக உருவாக்கிய அணியே மூன்றாவது அணி என்றும், தேர்தலுக்குப் பின்னர் அக்கட்சிகள் அதிமுக ஆதரவுக் கட்சிகளாக மாறிவிடும் என்றும் பிரசாரம் செய்தது.

ஐம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வரும் இவ்விரு கட்சிகளின் பலவீனத்தைப் பயன்படுத்தி முழுவீச்சில் தாக்குதல் நடத்த, மாற்றத்தை முன்வைத்துத் தேர்தல் களம் புகுந்த கட்சிகள் முற்றிலும் தவறிவிட்டன. மாற்றம் என்பது ஆளும் கட்சியை மாற்றுவது என்பதாக மட்டுமே மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது. திமுக, அதிமுக ஆட்சிகளால் தமிழகத்தில் ஏற்பட்ட ”வளர்ச்சியின்மை” என்கிற பலவீனம் தேர்தல் களத்தில் சரியாக அணுகப்படவில்லை எனும் கருத்தைப் புறந்தள்ளிவிட முடியாது.
காவிரி, முல்லைப்பெரியாறு, இலங்கைத் தமிழர், மீனவர்கள் மீதான தாக்குதல், உள்ளிட்ட பிரச்னைகளுடன் ஆற்று மணல், கனிம மணல், கிரானைட் போன்ற முறைகேடுகளும் 2 ஜி, சொத்துக்குவிப்பு போன்ற ஊழல் வழக்குகளும் பரப்புரைப் போரில் ஆயுதங்களாயின. இந்த ஆயுதங்களால் தங்களுக்குப் பெரிய அளவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை நன்கு உணர்ந்திருந்த திமுகவும் அதிமுகவும், பரப்புரைகளில் இந்த ஆயுதங்களே பிரதானமாக இருக்கும்படி செய்ததோடு மக்களது கவனம் தங்களிடமிருந்து விலகிவிடாமலும் பார்த்துக்கொண்டன.

”வளர்ச்சியின்மை” என்கிற தங்களது மிகப்பெரும் பலவீனம் வெளிப்பட்டு விடாமல் தேர்தல் போர் புரிந்த இவ்விரு கட்சிகளின் தந்திரத்திற்கு ஊடகங்களும் இரையாயின. ”வளர்ச்சியின்மை” என்பதை மறைப்பதற்காக “நிலையான ஆட்சி” என்கிற வாதத்தை மிகச் சாதுரியமாக மக்கள் முன் வைத்தன திமுகவும் அதிமுகவும். நிலையான ஆட்சியைத் தரத் தங்களால் மட்டுமே முடியும் என மக்களை நம்பவைத்து பிற கட்சிகளின் தாக்குதல்களை முறியடித்தன. ஊடகங்களும் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி “நிலையான ஆட்சி” என்பதையே முன்னிறுத்தின. லஞ்சம், ஊழல் என்பது இவ்விரு கட்சிகளுக்கும் பொதுவாகிப் போனதால் அவையும் எளிதில் வலுவிழந்துவிட்டன.

ஆளும், ஆண்ட கட்சிகளுக்கு மாற்று என்கிற வாதம் ”நிலையான ஆட்சி” என்கிற வாதத்தின் முன் வலிமையற்றுப் போனது. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் அசுர பலம் பெற்று பிற கட்சிகளைக் காணாமல் செய்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தைத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தின. ஆனால் உண்மையில் தேர்தல் முடிவுகள் நமக்குத் தெரிவிக்கும் செய்தி மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதே. மாற்றத்தை முன்வைத்த கட்சிகளுக்குப் போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை என்பது உண்மையே. ஆனால், மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்பதாக இதற்குப் பொருள்கொள்ள முடியாது. மக்கள் விரும்பும் மாற்றத்தைத் தர முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த எந்தக் கட்சியாலும் கூட்டணியாலும் முடியவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன எனப் பொருள் கொள்வதில் தவறேதும் இருக்க முடியாது.

தேர்தல் முடிவுகளைச் சற்று நிதானமாக அலசி ஆராய்ந்தால் நமக்கு இது எளிதில் விளங்கும். மொத்தமுள்ள ஐந்து கோடியே 77 லட்சம் வாக்காளர்களில் (தேர்தல் ஆணைய கணக்குப்படி பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 57791397) நான்கு கோடியே 29 லட்சம் பேர் (74.2%) வாக்களித்திருக்கிறார்கள். ஒரு கோடியே 49 லட்சம் பேர் (25.8%) வாக்களிக்கவில்லை.

இது ஒருபுறம் இருக்க,, வாக்களித்த நான்கு கோடியே 29 லட்சம் பேரில் சுமார் ஒரு கோடியே 76 லட்சம் பேர் மட்டுமே அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். அதாவது, மொத்தமுள்ள 5 கோடியே 77 லட்சம் வாக்காளர்களில் சுமார் 4 கோடி வாக்காளர்கள் அதிமுகவுக்கு ஆதரவான மனநிலையில் இருந்திருக்கவில்லை என்பதைக் காட்டுவதாகக் கொள்ளலாம். அவர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியவர்கள் என்று பொதுவாகக் கருத இடமிருக்கிறது.

அடுத்ததாக, மொத்தமுள்ள ஐந்து கோடியே 77 லட்சம் வாக்காளர்களில், சுமார் ஒரு கோடியே 37 லட்சம் பேர் மட்டுமே திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இதன்படி பார்த்தால் சுமார் நான்கரை கோடி வாக்காளர்கள் திமுகவையும் விரும்ப வில்லை என்பதாக இதற்குப் பொருள்கொள்ள முடியும்.

மொத்தத்தில் பார்த்தால், ஐந்தே முக்கால் கோடி வாக்காளர்களில் சுமார் நான்கு கோடி வாக்காளர்கள் அதிமுகவுக்கு எதிரான மனநிலையிலும், சுமார் நான்கரை கோடி வாக்காளர்கள் திமுகவுக்கு எதிரான மனநிலையிலும் இருந்திருப்பது இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

அதிமுகவுக்கு எதிரான நான்கு கோடி வாக்காளர்களில் ஒன்றேகால் கோடி வாக்காளர்கள் மட்டுமே திமுகவுக்கு வாக்களித்திருக் கிறார்கள். இரண்டே முக்கால் கோடிப் பேர் அதிமுகவுக்கு மாற்று திமுக அல்ல என்ற கருத்தைக் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் அதிமுகவுக்கு எதிர்ப்பான நிலையிலும் திமுகவை ஆதரித்து வாக்களிக்க அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் திமுக, அதிமுக தவிர்த்த வேறு கட்சிகளுக்கு வாக்களித்திருக்கலாம். அல்லது வாக்களிக்க விருப்பமின்றித் தேர்தலில் பங்கேற்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இவர்கள் நிச்சயமாக இவ்விரு கட்சிகளுக்கும் எதிரான மனநிலை கொண்ட, மாற்றத்தை விரும்பிய வாக்காளர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

இதேபோல், திமுகவுக்கு எதிரான நான்கரைக் கோடி வாக்காளர்களில் ஒன்றேமுக்கால் கோடி வாக்காளர்கள் மட்டுமே அதிமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். மீதமுள்ள இரண்டேகால் கோடிப் பேர் திமுகவுக்கு எதிரானவர்கள் ஆனால் அதிமுகவை ஆதரிக்கவும் தயாராக இல்லாதவர்கள். இவர்களில் ஒரு பகுதியினர் வேறு கட்சிகளுக்கு வாக்களித்து இவ்விரு கட்சிகளுக்கு எதிரான தங்களது மனநிலையைப் பதிவுசெய்திருக்கலாம். அல்லது வாக்களிக்காமலேயே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கலாம்.

எப்படிப் பார்த்தாலும் சுமார் இரண்டுகோடிப் பேருக்கு மேல் இவ்விரு கட்சிகளுக்கும் எதிரான மனநிலையில் இருந்திருப்பது இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து தெரிய வருகிறது. இவ்விரு கட்சிகளுக்கும் வாக்களித்தவர்கள் கூட முழுக்க முழுக்க இக்கட்சிகளின் ஆதரவாளர்கள் எனக் கூறிவிட முடியாது.

திடமான, தெளிவான மாற்று எதுவும் தென்படாததால் தங்களது வாக்குகளை வீணடிக்கக் கூடாது எனக் கருதி வேறு வழியின்றி இவ்விரு கட்சிகளில் ஏதோ ஒன்றிற்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்திருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இத்தகைய சூழலில் திமுக அல்லது அதிமுகவை மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள், மாற்றத்தை விரும்பவில்லை என்று சொல்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்? திமுக, அதிமுகவுக்கு மாற்று என்ற முழக்கத்தோடு களமிறங்கிய கட்சிகளனைத்தும் ஏன் மாற்றம்? என்ன மாற்றம்? எதிலிருந்து மாற்றம்? எத்தகைய மாற்றம்? எப்படி மாற்றம்? என்பதை மக்களுக்குத் தெளிவாக்கத் தவறிவிட்டன என்கிற கருத்தே இங்கு உறுதியாக நிலைபெறுகிறது.

edit mar 7 a

மாற்று என்று கூறியவர்கள் பல பிரிவுகளாக நின்றதையும் மக்கள் ஏற்கவில்லை எனக் கருத நிறையவே இடமிருக்கிறது. மக்கள்நலக் கூட்டணி, பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி எனத் தனித்தனியே நின்ற கட்சிகளில் எதனை வலிமையான மாற்றாகப் பார்ப்பது என்ற குழப்பம் மக்களுக்கு நிச்சயமாக ஏற்பட்டிருக்கும். இதனால் வாக்குகள் பிரியும் என்பதையும் நிலையான ஆட்சி அமைவது சாத்தியமல்ல என்பதையும் கருத்தில் கொண்டே தேர்தலில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. தமிழகத்தில் இன்னும் சரியாகக் காலூன்றாத பாரதிய ஜனதா, மத்தியில் ஆட்சியில் இருப்பது தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்றும் மோடி ஆதரவு அலை வீசித் தங்களைக் கரைசேர்க்கும் எனத் தப்புக்கணக்குப் போட்டுத் தேர்தல் களத்தில் தோல்வியைத் தழுவியது.

அதிமுகவுடனும் தேமுதிகவுடனும் பாமகவுடனும் பிற கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளும் அவற்றில் அடைந்த தோல்விகளும் அக்கட்சியின் பலவீனத்தைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிவிட்டன. எனவே பாரதிய ஜனதாவின் “மாற்று” என்கிற முழக்கம் பொருளற்றுப் போனது.

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று பட்டிதொட்டியெங்கும் பரப்புரை மேற்கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியோ சாதி எல்லைகளைத் தாண்டி வெளியே வரமுடியாமல் தவித்தது. எவ்வளவு பாடுபட்டாலும் சாதிக்கட்சி என்கிற அடையாளத்தைத் துடைக்க முடியாமல் சுமந்ததன் விளைவாக “மாற்று” என மக்களை நம்பவைக்க பாட்டாளி மக்கள் கட்சியால் முடியாமல் போனது.

அடுத்ததாக, அனைத்துத் தரப்பினராலும் மூன்றாவது அணி எனக் கருதப்பட்டதும் கூறப்பட்டதுமான மக்கள்நலக் கூட்டணி. கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு பிரிவுகளும், விடுதலைச் சிறுத்தைகளும் வைகோவோடு சேர்ந்து வீதிகளெங்கும் மாற்றத்திற்காக முழங்கினார்கள். தொடக்கத்தில் முழக்கம் சற்று பெரிதாகவே இருந்தது. மக்களும் ஓரளவு நம்பிக்கையுடன் இக்கூட்டணியின் செயல்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்கள். ஆனால் அனைத்துத் தரப்பிலும் கூட்டணி பேரம் பேசிவருவதாகக் குற்றம்சாட்டப்பட்ட தேமுதிகவைத் திடீரெனக் கூட்டணிக்குள் கொண்டு வந்ததும், கடைசிவரையில் யாருடன் சேரப்போகிறோம் என்பதைக் கூறாமல் இழுத்தடித்துவிட்டுக் கடைசியில் வேறு வழியின்றி வந்த வாசனை ஏற்றுக்கொண்டதும் மக்களுக்கு ஏற்புடையதாக அமையவில்லை. கூட்டணிக்குத் தலைவராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்தின் கண்ணியக்குறைவான பேச்சும் நடவடிக்கைகளும் அக்கூட்டணி மீதான மரியாதையையும் நம்பிக்கையையும் தகர்த்தன.

மேலும் யாருக்கு மாற்று என்று கூறினார்களோ, அவர்களுடனேயே கூட்டணி வைக்க முயன்றவர்களை அவர்களுக்கு மாற்றாகக் கருதப்பட்ட கூட்டணிக்குக் கொண்டுவந்ததால் நம்பகத்தன்மையையும் இழக்க நேரிட்டது. கூட்டணி பேரம் பேசியவர்கள் எப்படி மாற்றாக முடியும் என்ற கேள்விக்குச் சரியான பதிலளிக்க மக்கள்நலக் கூட்டணி தவறிவிட்டது என்ற கருத்தையும் ஒதுக்கிவிட முடியாது.திமுகவின் வெற்றியைத் தடுப்பதற்காக வைகோ மூலமாக அதிமுக உருவாக்கியதே மக்கள்நலக் கூட்டணி என்று வலுவாகச் செய்யப்பட்ட பரப்புரையும் அக்கூட்டணியின் நம்பகத்தன்மையைக் குறைத்தது. இத்தகைய பரப்புரை காரணமாக அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்ற கருத்து உருவாக்கப்பட்டு அதன் பயன் திமுகவைச் சென்றடைந்தது.

அதேபோல், தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், அத்தகைய சூழலில் மக்கள்நலக் கூட்டணி திமுகவை ஆதரிக்கும் என்று மற்றொரு கருத்தும் பரப்பப்பட்டது. மக்கள்நலக் கூட்டணியின் செயல்பாடுகளும் இக்கருத்தை முற்றிலுமாக மறுக்கும் வகையில் இல்லை. இதனால் திமுக எதிர்ப்பு வாக்குகளும் இக்கூட்டணிக்குக் கிடைக்காமல் போயின. மொத்தத்தில் அதிமுக எதிர்ப்பு என்ற நிலையும் பறிபோய் திமுக எதிர்ப்பு என்ற நிலையிலும் உறுதியின்றித் தேர்தலை எதிர்கொண்டதன் விளைவாகவே மக்கள்நலக் கூட்டணி எடுபடாமல் போனது என்று கருத நிறையவே இடமிருக்கிறது.

அனைவருக்கும் ஏற்புடைய, மதிக்கத்தக்க தலைமை இல்லாமல் போனது, கூட்டணி பேரத்தில் ஈடுபட்ட கட்சிகளைச் சேர்த்தது, கூர்மையற்ற பரப்புரை உத்திகள், திமுக, அதிமுக விமர்சனங்களில் மென்மையான போக்கு, தலைவர்களிடையேயான கருத்து வேற்றுமைகள் போன்றவை மக்கள்நலக் கூட்டணி ஒரு வலிமையான மாற்று என்ற நம்பகத்தன்மையை மக்களிடம் ஏற்படுத்தாமல் போயின. இத்தகைய காரணங்களாலேயே பெரும்பாலான மக்கள் விரும்பிய மாற்றத்தைத் தேர்தல் முடிவுகள் கொடுக்கவில்லை என்பன போன்ற கருத்துகள் சீர்தூக்கிப் பார்க்கத்தக்கவை.

ஐந்தே முக்கால் கோடி வாக்காளர்களில் அதிமுகவுக்கு வாக்களித்த ஒன்றேமுக்கால் கோடிப்பேரையும் திமுகவுக்கு வாக்களித்த ஒன்றேகால் கோடிப்பேரையும் தவிர்த்து மீதமுள்ள இரண்டே முக்கால் கோடி வாக்காளர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் மாற்றம் எட்டாக்கனியல்ல என்பதே நிதர்சனம். மாற்றம் ஏமாற்றவில்லை, இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறது…

ராம்