October 21, 2021

கதை இருந்தால்தான் படம் ஓடும்! -ஒற்றாடல் பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

ஸ்ரீபெருமாள் சாமி பிலிம்ஸ் சார்பாக C.பெருமாள் தயாரிப்பில் ‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, வ.கௌதமன், ராசி. அழகப்பன், சுப்பிரமணியம் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர் . இந்த ஒற்றாடல் ‘படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், ”இன்று சினிமாத்துறையில் பெரிய பெரிய படங்கள் எல்லாம் படு தோல்வி அடைந்து வருகிறது. ஆனால், சில சிறு படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து வருகிறது. இதற்கு காரணம் ஹீரோக்கள் தான். தெலுங்கு, இந்தி சினிமாவில் ஹீரோக்களின் சம்பளம் படத்தின் பட்ஜெட்டை வைத்து கணக்கிடப் படுகிறது. ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் தான் படத்தின் பட்ஜெட்டை காட்டிலும் அதிகமாக ஹீரோக்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. முன்பெல்லாம் கதைக்காக ஹீரோக்கள் தேர்வு செய்யப்பட்டார்கள், அதனால் படமும் வெற்றி பெற்றது. தற்போது, தயாரிப்பாளர்கள் ஹீரோக்களின் தேதிகளை பெற்றுக் கொள்கிறார்கள், ஹீரோக்கள் கை காட்டுபவரை இயக்குநராக்குகிறார்கள். அந்த இயக்குநர்களும் ஹீரோக்களை காக்கா பிடிப்பதற்காக செலவுகளை அதிகப்படுத்தி விடுகிறார்கள், இதனால் தான் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

மொத்தத்தில், ஹீரோக்களாலும், இயக்குநர்களாலும் தான் தமிழ் சினிமா மிகப்பெரிய நஷ்ட்டத்தை சந்தித்து வருகிறது. திட்டமிட்டு, கதைக்காக மட்டுமே செலவு செய்தால் நஷ்டம் ஏற்படாது. பரியேறும் பெருமாள், கோலமாவு கோகிலா, சமீபத்தில் வெளியான ‘எல்.கே.ஜி’ போன்ற சிறு படங்கள் மிகப்பெரிய வசூல் ஈட்டியுள்ளது. இதில் எந்த ஹீரோக்கள் இருந்தார்கள், கதையும், படமும் தான் ஹீரோ, வெற்றி பெறவில்லையா? இப்படி தான் படங்கள் வர வேண்டும்.

அதற்காக, இப்போது வெளியாகி இருக்கிறதே ஒரு எம்.எல் அதுபோல எடுக்க கூடாது. அப்படிப்பட்ட படம் எடுப்பதற்கு வேறு எதாவது தொழில் செய்து பணம் சம்பாதிக்கலாம். சினிமாவை வாழ வைக்க வேண்டும் என்றால் இதுபோன்ற நாகரீகமற்ற, சமூக சீர்க்கேட்டான படங்களை எடுக்க கூடாது. ‘ஒற்றாடல்’ படம் சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும், பாடல்களும், டிரைலரும் நிறைவாக இருந்தது. அதில் நடித்த நடிகர் நடிகைகளின் பங்களிப்பும் சிறப்பாக இருக்கிறது. படம் ரசிகர்களை ஏமாற்றாது என்பது டிரைலரிலே தெரிகிறது.” என்றார்.