September 26, 2021

ஆஸ்கர் விருதுகள் 2018- விருதுகளின் பின்னணி + முழு பட்டியல்!

சினிமா துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து அவர்களை ஆஸ்கர் கௌரவப்படுத்தி வருகிறது. பல்வேறு ஹாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டிருக்கும் இவ்விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் 2-வது முறையாக தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார். இவ்விழாவில் திரையுலகில் மிகப்பெரிய பிரபலங்களாக வலம்வந்து இறந்த நடிகர், நடிகைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில், கடந்த மாதம் 24-ம் தேதி துபாயில் உயிரிழந்த, இந்திய திரையுலகின் மிகப்பெரிய நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சர்வதேச அளவில் டாப் ரேங்கில் பெரும்பாலோனோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது ஆஸ்கர் விருது. இன்று வரை இந்த விருதை வெல்வது எந்தவொரு படைப்பாளிக்கும் கனவாகவும், லட்சியமாகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. அப்பேர் பட்ட ஆஸ்கர் பற்றிய சில ரிப்போர்ட்கள் இங்கே..

அகாடமி விருதுகள் என அழைக்கப்படும் இந்த விருது நிகழ்ச்சி 1929 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

ஆஸ்கர் விழாவை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இந்த அமைப்பு 1927 -ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது 36 பேர் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தார்கள். இப்போது ஆறாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

அகாடமி விருதில் வழங்கப்படும் பிரத்தேக தங்கச் சிலையை முதன்முதலில் வடிவமைத்தவர் ஜார்ஜ் ஸ்டான்லி. அப்போதே விருது 13.5 இன்ச்.

இதுவரை அதிக (தலா 11) ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படங்கள்: பென்ஹர், டைட்டானிக், லார்ட் ஆஃப் த ரிங்ஸ்.

ஆஸ்கர் விருது பெற்ற ஒரே தம்பதியினர்: விவியன் லேய் – லாரன்ஸ் ஆலிவர் (1951).

ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் பானு அத்தையா. ‘காந்தி’ படத்தில் ஆடை வடிவமைப்பிற்காக இதைப் பெற்றார்.

ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட மூன்று இந்திய திரைப்படங்கள் மதர் இண்டியா, சலாம் பாம்பே, லகான்.

நடிப்புக்காக அதிக ஆஸ்கர் விருதை வென்றவர் கத்தரின் ஹெப்பர்ன். சிறந்த நடிகைக்கான விருதை இவர் நான்கு முறை வென்றுள்ளார். அமெரிக்க நடிகையான கத்தரின் 1934 ஆம் ஆண்டு நடந்த ஆறாவது அகாடெமி விருதுகளில் மார்னிங் க்ளோரி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை வென்றார். அதன் பின்னர் எட்டு படங்களுக்காக வெவ்வேறு காலகட்டத்தில் சிறந்த நடிகைக்கான விருதுப் போட்டிக்கான பிரிவில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தாலும் அவர் வெல்ல வில்லை. இதைத்தொடர்ந்து 1968, 1969 மற்றும் 1982 ஆண்டுகளில் நடந்த அகாடமி விருதுகளில் சிறந்த நடிகை விருதை வென்றார்.

மூன்று திரைப்படங்கள் அதிகபட்சமாக 11 பிரிவுகளில் அகாடமி விருது வென்றுள்ளன. பென் ஹர் திரைப்படம் 1959 ஆம் ஆண்டு 12 பிரிவுகளில் போட்டியில் இருந்தது, அதில் 11-இல் வென்றது. டைட்டானிக் திரைப்படம் 1997-ஆம் ஆண்டு 14 பிரிவுகளில் முன்மொழியப்பட்டு 11-இல் ஜெயித்தது. கடைசியாக லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் – தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங் திரைப்படம் 11 பிரிவுகளில் முன்மொழியப்பட்டு பதினோரு பிரிவிலும் விருதை வென்றது.

அதிகமுறை அகாடமி விருது வென்ற பெண் எடித் ஹெட். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த எடித் எட்டு முறை ஆஸ்கர் விருது வென்றுள்ளார். இந்த எட்டு முறையும் சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான பிரிவில் வென்றுள்ளார்.

தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் சிறந்த நடிகர் விருதை ஜெயித்தவர்கள் வரலாற்றில் இரண்டே பேர் தான். 1937 மற்றும் 1938 அகாடமி விருதுகளில் ஸ்பென்சர் ட்ரேசி வென்றார். 1993-இல் ஃபிலடெல்பியா மற்றும் 1994-இல் ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் பிரிவில் டாம் ஹாங்க்ஸ் அகாடெமி விருதை வென்றார்.

இந்த அகாமி விருது ஜெயிப்பவர்களுக்கு 45 நொடிகள் மட்டுமே மேடையில் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். நேர எல்லையை கடந்தால் மைக்ரோ ஃபோனில் ஒலி இணைப்பு துண்டிக்கப்படும். அகாடமி விருது வரலாற்றில் மேடையில் அதிக நேரம் பேசியவர் கிரீர் கார்சன். 1942 ஆம் ஆண்டு சிறந்த நடிகை விருது வென்ற இவர் ஆறு நிமிடங்கள் உரையாற்றினார். அதன் பின்னரே விருதை ஏற்றுக்கொள்ளும் உரைக்கான நேர அளவு குறைக்கப்பட்டது.

ஆஸ்கர் வரலாற்றில் இரண்டு விருதுகள் வாங்கிய ஒரே இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே. ஏ ஆர் ரஹ்மான் விருது வென்ற போது தமிழில் சில வார்த்தைகள் உதிர்த்தார். ஆஸ்கர் மேடையில் தமிழ் மொழி முதல்முறையாக ஒலித்தது அப்போதுதான். ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்காக 2009 ஆம் ஆண்டு இரண்டு பிரிவுகளில் ரஹ்மான் விருது வென்றார்.

இன்றைய 90-வது ஆஸ்கர் விழாவில் தனது 89-வது வயதில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் ஜேம்ஸ் ஐவரி. இதன் மூலம் மிக அதிக வயதில் ஆஸ்கர் விருதை பெறுபவர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஐவரி பெற்றுள்ளார்.

ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:

சிறந்த படம் – த ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த நடிகர் – கேரி ஓல்டுமேன் (டார்க்ஸ்ட் ஹார்)

சிறந்த நடிகை – பிரான்சஸ் மிக்டார்மண்ட் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி)

சிறந்த இயக்கம் – கில்லர்மோ டெல் டோரோ (த ஷேப் ஆப் வாட்டர்)

சிறந்த பாடல் – கோகோ (ரிமம்பர் மி)

சிறந்த இசை – த ஷேப் ஆப் வாட்டர் (அலெக்சாண்ட்ரே டெஸ்ப்லெட்)

சிறந்த ஒளிப்பதிவு – பிளேட் ரன்னர் 2049 (ரோஜர் ஏ.டெக்கின்ஸ்)

சிறந்த திரைக்கதை – கெட் அவுட் (ஜோர்டன் பீல்)

சிறந்த தழுவல் திரைக்கதை – கால் மி பை யுவர் நேம் (ஜேம்ஸ் இவோரி)

சிறந்த லைவ் ஆக்‌ஷன் திரைப்படம் – த சைலன்ட் சைல்ட் (கிறிஸ் ஓவர்டன், ராச்சல் ஷென்டன்)

சிறந்த ஆவண குறும்படம் – ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் த 405 (ப்ராங்க் ஸ்டிப்பெல்)

சிறந்த படத்தொகுப்பு – டங்கிர்க் (லீ ஸ்மித்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – பிளேட் ரன்னர் 2049 (ஜான் நெல்சன், கெர்டு நெஃப்சர், பால் லாம்பர்ட் மற்றும் ரிச்சர்ட் ஆர்.ஹுவர்)

சிறந்த துணை நடிகர் – சாம் ராக்வெல் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி)

சிறந்த துணை நடிகை – ஆலிசன் ஜேனி (ஐ, டோன்யா)

சிறந்த வெளிநாட்டு படம் – எ பென்டாஸ்டிக் வுமன் (சிலி)

சிறந்த அனிமேஷன் படம் – கோகோ (லீ அன்கிர்ச், டார்லா கே.ஆன்டர்சன்)

சிறந்த அனிமேஷன் குறும்படம் – டியர் பாஸ்கட்பால் (க்ளென் கீன், கோப் ப்ரயண்ட்)

தயாரிப்பு வடிவமைப்பு – தி ஷேப் ஆஃப் வாட்டர்

ஒலித்தொகுப்பு – டங்கிர்க் (ரிச்சர்டு கிங், அலெக்ஸ் கிப்சன்)

ஒலி இணைப்பு – டங்கிர்க் (கடரெக், க்ரே, மார்க்)

சிறந்த ஆவணப்படம் – ஐகரஸ் (பிரயன் போகல், டேன் கோகன்)

ஆடை வடிவமைப்பு – பாண்டம் த்ரெட் (மார்க் ப்ரிட்ஜஸ்)

ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – டார்க்கஸ்ட் ஹார் (கசுரியோ சுஜி, டேவிட் மலினோஸ்கி, லக்கி சிபிக்)