September 20, 2021

ஒரு குப்பைக் கதை – விமர்சனம் = ஒவ்வொரு குடும்பமும் தெரிந்து கொள்ள வேண்டிய கதை!

இந்த தமிழ் சினிமா எக்கச்சக்கமான புது வாசல்களை திறந்து காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக தமிழ் உள்ளிட்ட சினிமாக்களின் ஆரம்பக் காலத்தில் சுதந்திர வேட்கைக்காக பயன்பட்ட நிலை மாறி இக்கலையும் காலப் போக்கில் அசூர வளர்ச்சி அடைந்தது. கூடவே சில பல தப்பான சினிமாக்கள் வந்து வணிக ரீதியாக வெற்றி அடைகிறதுதான். என்றாலும் இப்படியான காலக்கட்டத்திலும் சமூகத்திற்கு தேவையான அடவைஸை கொடுக்கும் சினிமா வந்து கொண்டுதான் இருக்கிறது, அதற்கு லேட்டஸ்ட் உதாரணம்தான் ஒரு குப்பைக் கதை.

இந்தப் படத்தின் விமர்சனம் & கதைக்குள் நுழையும் முன்னால் சில விஷயங்களை நினைவூட்டிக் கொள்வது அவசியம் என்று படுகிறது. அதாவது சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறிக்கொண்டிருந்தது கள்ளக் காதல். இது போன்ற விஷயங்கள், தற்போது தினசரி செய்திதாள்களில் அதிகம் இடம் பிடிப்பவையாக மாறிவிட்டன. ஆம்.. கணவனுக்கு தெரியாமல் மனைவி, மனைவிக்கு தெரியாமல் கணவன் மற்றொருவருடன் உறவு வைத்திருப்பது ரொம்ப சர்வ சாதாரண விஷயமாகி விட்டது.

மேற்கத்திய மோகமும், தகவல் தொழில் நுட்பக் கலாசாரமும் நம் நாட்டுக்குள் ஊடுருவத் துவங்கியபோதே, நாகரிகம் என்பதற்கான அடிப்படை விதிகளும் மாறிவிட்டன. இந்த வரிசையில், இந்த கள்ளக் காதலும் புதிய கலாசாரமாகிவிட்டது. ஆண், பெண் நட்பில் உடல் ரீதியான ஈர்ப்பு பிரதான இடம் பிடித்துவிட்டது.

அதிலும் வீட்டில் கணவன், மனைவியின் தேவைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பூர்த்தியாகாதபோது புதிய துணையைத் தேடுகின்றனர். இந்த விவகாரம் பழைய துணைக்கு தெரியாதவரை பிரச்னை ஏற்படுவதில்லை. தெரிந்துவிட்டால், ஆண், பெண் யாராக இருந்தாலும் கண்டிப்பவரை, “காலி செய்யும்’ அளவிற்கு துணிந்து விடுகின்றனர்.

இந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 1750 கொலைகள் இந்த கள்ளக் காதலி’ன் பொருட்டு நடந்துள்ளன. இது குறித்து நம்மிடம் சில விபரங்களை பகிர்ந்து கொண்ட ஒரு ஐபிஎஸ் ஆபீசர் ‘கள்ளக்காதலால் டெய்லி நான்கு கொலைகள்’ நடப்பதாக அபீசியலாக ரெக்கார்ட் ஆகிறது என்றார். மேலும்
ஆண்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், அவர்களது மனைவிமார்கள் பெரும்பாலும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் சொன்னார்.

இதனிடையே காதலில் பல வகைகள் இருப்பதைப் போல், கள்ளக்காதலிலும் மூன்று, நான்கு பிரதான வகைகள் உள்ளனவாம்.

கவனத்தில் வராத மனைவியர் :

பணமே பிரதானமாகக் கொண்ட ஆண்கள். இவர்களுக்கு, மனைவியிடம் காதலைக் காட்டுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை. இத்தகைய கணவன்மார்களின் மனைவிகளுக்கு, பக்கத்து வீட்டுக்காரனின், “ஹலோ! சவுக்கியமா?’ என்ற குசல விசாரிப்பு கூட, மிகப் பெரிய குதூகலத்தைக் கொடுத்துவிடுகிறது. குசல விசாரிப்பு, “குஜால்’ வரை சென்றுவிடுகிறது. இத்தகைய பெண்களுக்கு, தன்னோடு பழகும் ஆணின் அழகோ, அறிவோ ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. கணவனை விட சுமாரான அழகு, அந்தஸ்து என இருந்தாலும், தன் மீது அக்கறை காட்டுகிறான் என்ற எண்ணமே, அவர்கள் பக்கம் இவர்களை விழ வைத்துவிடுகிறது. இது கணவன்மார்களுக்கு தெரியும் போது, முதலில் கண்டிப்பு, அடுத்த கட்டம், கொலை. இதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றவர்கள் ஏராளம் என்கிறது போலீஸ் தரப்பு.

“மாஜி’ காதல் :

அடுத்த வகை, திருமணமான பின், கணவனது நடவடிக்கைகள் பிடிக்காமல், முன்னாள் காதலனுடன் கள்ளக்காதல் கொள்வது. பெற்றோர் விருப்பம், நிர்பந்தத்திற்காக காதலித்தவனை விட்டு வேறு ஒருவரை கரம் பிடிக்கும் பெண்கள், சில நேரங்களில் முன்னாள் காதலனை பார்க்கும் போது, மீண்டும் உள்ளிருக்கும் காதல் துளிர்க்கிறது. காதலனோ, பழைய காதலியின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ள, கள்ளத்தனமாக காதல் வளர்கிறது. இதில் பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பாக உணர்வதாக, மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது போன்ற சம்பவங்களிலும் சில நேரம், கட்டுப்படுத்துபவர் உயிர் “கட்டுப்பட்டுப்’ போகிறது.

ஐ.டி., காதல் :

ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள் பெரும்பாலும் வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றனர். கணவன், மனைவியை தவிர மற்ற உறவினர்களிடம் இருந்து பிரிந்திருக்கும் நிலையில் வேலை பளுவும் கூடும் போது, குடும்ப வாழ்க்கை பின்தங்குகிறது. இந்த நிறுவனங்களில் ஆண்கள், பெண்கள் சகஜமாக பழகுவதால் பல தொடர்புகள் ஏற்படுகின்றன. மேலும், ஐ.டி., நிறுவனங்களை தவிர, பல வீடுகளில் கணினி வசதி உள்ளதால் “சாட்டிங்’ கலாசாரம் மூலமும் கள்ளக்காதல் விவகாரங்கள் பெருகியுள்ளன. பல நாட்கள் சாட்டிங் மூலம் பழகும் சிலர் நேரில் பார்க்கும் போது பிடித்துப் போனால், காதலை வளர்த்துக் கொள்கின்றனர். இதில், சிலர் “வீடியோ சாட்டிங்’ மூலம், பாலியல் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

ஜாலிக்காக கள்ளக்காதல் :

இதைத் தவிர எதைப் பற்றியும் கவலைப்படாமல், விளையாட்டுக்காக அல்லது செக்ஸ் தேவைக்காக மட்டும் சிலருடன் உறவு வைத்திருப்பதை, “பேஷனாக’ கருதுபவர்களும் உண்டு. திருமணமான ஆணும், பெண்ணும் தங்களுக்கு தெரிந்தவர்களுடன் இந்த வகையில் உறவு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

“டிவி’ தொடர்களும் ஒரு காரணம் :

கள்ளக்காதல் சம்பவங்கள் தொடர்பாக, மனநல நிபுணர்கள் “கிராமங்களில் அரசல் புரசலான விஷயங்கள், நகர்ப்புறத்தின் வளர்ச்சியால் தற்போது அதிகரித்துள்ளது. நகரமயமாதல், தொழில் மயமாதல் போன்ற காரணங்களால், தொடர்புக்கான வசதிகள் அதிகரித்துள்ளன. நகர்ப்புறத்தில், அடுத்த வீட்டில் யார் இருக்கின்றனர். அந்த வீட்டிற்கு யார் வந்து செல்கின்றனர் என்பதே பலருக்கு தெரியாது. இதனால், ஆணோ, பெண்ணோ தவறு செய்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன.

தாம்பத்ய வாழ்க்கையில் ஏமாற்றம் அதிகரிக்கும் போதும், கணவன், மனைவிக்கிடையில் ஒற்றுமையின்மை அதிகரிக்கும் போதும், பிறரது தொடர்புக்கான வாய்ப்புகள் அதிகரித்துவிடுகிறது. ஏமாற்றம், விரக்தியில், தேடுதல் உணர்வும் அதிகரிக்கிறது. இதை, ஊடகங்களும் அதிகளவில் ஊக்குவிக்கின்றன. “டிவி’ சீரியல்கள் இது போன்ற விஷயங்களை நியாயப்படுத்துவதுடன், இப்படியெல்லாம் செய்யலாம் என்று தூண்டுகின்றன. கணவன்மார்களிடம் இருக்கும் குடிப்பழக்கம், பெண்களிடம் இருக்கும் அறியாமை ஆகியவை, இருதரப்பையும் அரவணைப்பை தேடச் செய்கிறது” என்றார்கள்

இப்படியான காலக்கட்டத்தில்தான் மேற்படி கள்ளக்காதல் எனப்படும் கட்டிய புருசனை விட்டு விட்டு கைக்குழந்தையுடன் ஒரு இளைஞனுடன் ஓடிப் போன ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்பட்டமாகச் சொல்லியிருக்கிறது இந்த ‘ஒரு குப்பைக் கதை’.

அதாவது சென்னையின் கூவத்தையொட்டிய ஒரு குப்பத்தில் வசிக்கும் இளைஞர் ஹீரோ தினேஷ். நம்ம சிங்கார சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் தொழிலாளி. அதையும் ரொம்ப பிரியத்தோடு செய்யும் அவரது வேலையால் அவருக்கு யாருமே பெண் கொடுக்காமல் வயசு போய் கொண்டிருக்கிரது.

இந்நிலையில் வால்பாறையில் வசிக்கும் பூங்கொடியை(மனிஷா) பெண் பார்க்க செல்லும் போது புரோக்கர் தினேஷ் கிளார்க் வேலை செய்வதாக பொய் சொல்லி விடுகிறார். ஆனால், உண்மையை மறைக்க விரும்பாத தினேஷ், மனிஷா யாதவின் அப்பாவிடம் தனது வேலை குறித்த உண்மையை சொல்லிவிடுகிறார். உடனே தினேஷின் இந்த ஓப்பன் பேச்சுக்காவே மனிஷாவை கல்யாணம் செய்து கொடுக்க அவரது தந்தை சம்மதித்து விடுகிறார், அதே சமயம் தனது பெண்ணிடம் தினேஷ் குப்பை அள்ளும் வேலை செய்வதை மறைத்து நேரம் வரும் போது சொல்லி சமாளித்து விடலாம் என்றும் சொல்லிவிடுகிறார்.

இதையடுத்த்து சென்னை வாழ்க்கை, கிளார்க் புருஷன் என்று தோழிகளிடம் பெருமை பீற்றிக் கொண்டபடி தினேஷை கல்யாணம் செய்து சென்னைக்கும் வரும் மனிஷா தான் வாழும் இடத்தைப் பார்த்தது அப்படியே ஷாக் ஆகி விட்டார். கூவம் நாற்றம் , கொசுக்கடி, அசுத்தமான இடத்தில் வாழ வேண்டிய சூழ்நிலையைக் கண்டு அதிர்ந்து போய் விடுகிறார், ஆனாலும் தனது கிளார்க் கணவருக்காக அத்தனையையும் சகித்துக் கொண்டு வாழ்ந்து கர்ப்பமாகவும் ஆகி விடுகிறார். அதை ஜி,ஹெச் – போய் உறுதி செய்து விட்டு வரும் வழியில் புருஷன் தினேஷ் குப்பை அள்ளும் வேலை செய்வதை கண்ணால் பார்த்து விடுகிறார். இதனால் அதிர்ந்து போன அவர் தினேஷ் மீது கடும் கோபம் கொண்ட நிலையில் குழந்தை பிறந்ததும் தனது அம்மா வீட்டில் இருந்து வர மறுக்கும் மனிஷா யாதவ், தனது குழந்தையை அந்த குப்பத்தில் வளர்க்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.

இதை அடுத்து தினேஷ் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் குடியேறுகிறார். அந்த பிளாட்டில் வசிக்கும் கல்யாணமாகாத ஐ டி இளைஞர் ஒருவர் மீது மனிஷாவுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ளும் அந்த இளைஞர் மனிஷாவையும், குழந்தையையும் மட்டும் தனியே தள்ளிக் கொண்டு போய் அவரை வைத்து குடும்பமும் நடத்துகிறார்.

இதனிடையே கட்டிய மனைவி கள்ள காதலனோடு ஓடி விட்டதை ஜீரணிக்க முடியாமல் மதுவுக்கு அடிமையாகும் தினேஷ், தனது மனைவியை கண்டு பிடித்தாரா? அப்படி கணவனை விட்டு குழந்தையுடன் ஓடிய மனிஷாவின் வாழ்க்கை என்னவானது, என்பது தான் ‘ஒரு குப்பைக் கதை’ படத்தின் மிச்சக் கதை.

ஆரம்ப பத்திகளில் சொன்னது போல் அன்றாட செய்தி தாள்களில் படித்து கடந்து போகும் ஒரு கள்ளக்காதல் விவகாரத்துக்கு பின்னால் இருக்கும் பாதிப்புகளையும், பிரச்சினைகளையும் கொஞ்சம் கூட எல்லை மீறாமல் நீட்டாக சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்கு காளி ரெங்கசாமி. அதிலும் எடுத்துக் கொண்ட விஷயம் கள்ளக்காதல் என்ற நிலையிலும் முகஞ்சுளிக்க வைக்கும் காட்சிகள் எதையும் காட்டாமல் சென்னை நகரில் வாழும் இன்னொரு அழுக்குப் பக்கத்தை நீட்டாக காட்டியுள்ள இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே கொடுத்தே ஆக வேண்டும்.

மேலும் ’சொந்த ஊர் பாண்டிச்சேரியா…? என்று  ‘தண்ணி’ அடிக்கும் கிழவி கேள்வி எழுப்பும் போது தியேட்டரில் எழும் குபீர் சிரிப்புக்கும் ‘சிகரெட் பிடிச்சா… குழந்தையே பொறக்காது-ன்னு சொல்வாங்களே!’ ‘குழந்தயே பொறக்கக் கூடாதுன்னு தானே நாங்க சிகரெட் டே பிடிக்கிறோம்!’ -என்று சொல்லும் போது கிளம்பும் கரவொலிக்கும் இன்னொரு பொக்கே பார்சலும் உண்டு.

ஆனாலும் குப்பை அள்ளும் தொழிலாளியாக அறிமுகமாகி இருக்கும் நாயகன் தினேஷ் மாஸ்டர் எல்லா சம்பவங் களுக்கும் முகத்தை ஒரே மாதிரியாக வைத்திருப்பது சலிப்பை தெருகிறது. நாயகி மனிஷாதான் படத்துக்கு பெரும் பலம். வால்பாறையின் இயற்கை சூழலில் இருந்து கூவத்து கரையோரம் நுழைவதில் இருந்து தனிக் கவனம் பெறுகிறார். குழந்தையை அணைத்து கொண்டே வாழ்ந்து காட்டி இருக்கிறார். மாடர்ன் ஸ்டைலுக்கு மாறிய பிறகும், அதே கிராமியத்துடன் பேசுவதும், பார்ப்பதும் மனிஷாவிற்கு இந்த படம் வாழ்நாள் சாதனை.

வழக்கம் போல் இப்படத்தில் அது சரி இல்லை.. இது நொட்டை என்று சொல்லவும் சில பல விஷயங்கள் உண்டு என்றாலும் தற்போதைய காலகட்டத்தில் நகர வாழ்க்கையை வாழும் ஒவ்வொரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பாடத்தை எடுத்துக் கட்டி இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையல்ல..

மொத்ததில் ஒரு குப்பைக் கதை ஒவ்வொரு குடும்பமும் தெரிந்து கொள்ள வேண்டிய கதை

மார்க் 5 / 3.5