ஒரு கதை சொல்லட்டுமா? – விமர்சனம்!

ஒரு கதை சொல்லட்டுமா? – விமர்சனம்!

ஒலி என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும். அதை உணர்ந்து அப்டேட்டாகி இசை என்ற ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகான ஒலியோசையை மனிதன் கண்டு அனுபவித்தது தனி வரலாறு. இன்றளவும் படித்தவர் படிக்காதவர் என இசை எங்கு பரவி உள்ளது. பிறந்த குழந்தைக்கும் இசை. இறந்த உடலுக்கும் இசை. இண்டர் நெட்டில் தினமும் பார்க்கப்படும் காணொளிகளில் சுமார் கால்பங்கு இசை சம்பந்தமான காணொளிகள் என்பதில் ஐயமில்லை. இதனாலேயே நம் நாட்டின் சகல கோயில் விழாக்களிலும் இசை முக்கிய அங்கம் வகிக்கிறது.அந்த வகையில் அகில உலக அளவில் அதிக ஒலிகளை எழுப்பும் கோயில் திருவிழாவான திருச்சூர் பூரம் விழாவின் டாக்கெண்டரி வடிவமே இந்த ஒரு கதை சொல்லட்டுமா படம்!ஆனால் இப்படத்தில் பூரம் என்னும் மஹாத் திருவிழா பெருமையை விட ஆஸ்கார் அவார்ட் வாங்கிய சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டியின் பெருமையே மேலோங்கி இருக்கிறது என்பது அபஸ்வரம்.

அதாவது இந்தியத் திருக்கோயில்கள் அதிகம் நிறைந்த கடவுளின் தேசம் எனப்படும் கேரளா திருச்சூரில் எக்கச்சக்கமான வாத்தியங்களுடன் இசை, இடையிடையே வாண வேடிக்கை, யானைகள், அவ்ற்றின் பிளிறல்கள். கூடவே கூடிய ஜனங்களின் ஆரவாரம், சந்தோஷக் குக்கூரல் என்று கோலாகலமாக நடக்கும் விழா. அங்கு எழும்பும் அம்புட்டு ஒலிகளையும் அதன் இயல்போ அதன் உணர்வோ மாறாமல் துல்லியமாக பதிவு செய்ய வேண்டும் என்று கனவு காண்பவர் ரசூல் பூக்குட்டி.அப்புறமென்ன.. அதே கேரளாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பூரம் விழாவை டாக்குமெண்டரி படமாக தயாரிக்க முடிவு செய்து, அதை ரசூல் பூக்குட்டியை வைத்து தயாரித்தால், பெரிய அளவில் வியாபாரம் செய்யலாம் என்று நினைக்கிறார். அதன்படி, ரசூல் பூகுட்டியை அணுகி, பூரம் விழாவை படமாக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார்.

தனது கனவை நிஜமாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக மட்டுமே இதை பார்க்கும் ரசூல் தயாரிப்பா ளரின், எண்ணத்தை அறியாமல், தனது குழுவினருடன் கேரளாவில் முகாமிட்டு, பூரம் விழா பற்றிய அத்தனை தகவல்களையும் சேகரிப்பதோடு, அதற்காக இரவு பகல் பார்க்காமல் பணியாற்ற தொடங்குகிறார். பணத்தில் மட்டுமே குறியாக இருக்கும் தயாரிப்பாளர் ரசூலின் உழைப்புக்கு மரியாதை கொடுக்காமல், அவரிடம் அநாகரிகமாக நடந்துக் கொள்ள இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. உடனே பூரம் விழாவை படமாக்குவதை கைவிடும் ரசூல், தனது குழுவினருடன் மும்பைக்கு கிளம்ப ரெடியாகும் போது, தனக்காக இல்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட நபர்களுக்காக பூரம் விழாவின் ஒலிகளை பதிவு செய்தே ஆக வேண்டும், என்பதை புரிந்துக் கொள்கிறார். இதையடுத்து, தனது முடிவை மாற்றிக் கொள்ளும் ரசூல், தனது சொந்த பணத்தின் மூலம் பூரம் விழாவின் ஒலியை பதிவு செய்யும் பணியில் ஈடுபட, புதிய ரூபத்தில் பிரச்சினைகள் வருகிறது. பிரச்சினைகளை சமாளித்து பூரம் விழாவை ரசூல் வெற்றிகரமாக பதிவு செய்தாரா, இல்லையா என்பதும், யாருக்காக அவர் பூரம் விழாவின் ஒலிகளை பதிவு செய்கிறார், என்பது தாம் படத்தின் கதை.இதை ஒரு புதிய சினிமா என்று சொல்வதை விட, பூரம் திருவிழாவைப் பற்றிய அரிய பல தகவல்களை சொல்லும் விக்கிபீடியா மாதிரி இதை வீடியோ பீடியா என்றே சொல்லலாம்.

சவுண்ட் வித்தகர் ரசூல் பூகுட்டி, இரு சவுண்ட் இன்ஜினியராகவே இந்த படத்தில் வருகிறார். இல்லையில்லை வாழ்கிறார் அவரது புது முக நடிப்பின் மூலம் தன் பணி எப்படிப்பட்டது என்பதை அழகாக, எரிச்சலாக,அன்பாகக் காட்டி கவர முயல்கிறார். .ரசூலுடன் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக மேனஜராக வரும் சேகர் கதாபாத்திரமும், தயாரிப்பாளர் கதாபாத்திரமும் கச்சிதம்.

கேரளாவிலுள்ள திருச்சூர், பாலக்காடு மாவட்டங்கள் கேரளாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. தென்மேற்கு பருவ மழைக்கு பின் இந்த இரு மாவட்டங்களிலும் நெல் பயிர் செய்யப்படும். ஆண்டு தோறும் மே மாத வாக்கில். அறுவடை முடிந்து மக்கள் கொண்டாட்டங் களில் ஈடுபடும் காலம். இந்த இரு மாவட்ட மக்களின் பிரதான திருவிழாவாக பூரம் திருவிழா கொண்டாடப்படுகிறது. முதலில் திருச்சூர் மாவட்டம் செம்பூத்தர பகவதி அம்மன் கோயிலில் பூரம் திருவிழா துவங்கும். அதன் பின் மற்ற கோயில்களில் பூரம் விழா நடைபெறுவது வழக்கம். இறுதியில் ஏப்ரல் மாதம் திருச்சூர் பூரத்துடன் திருவிழா நிறைவடையும். செம்பூத்தர பூரம் என்பது கோயிலை சுற்றியுள்ள 48 கிராமங்களை சேர்ந்த மக்களால் கொண்டாடப்படுகிறது. இது 600 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்ட திருவிழா. இதில் பல்வேறு கிராமிய கலைகளும் நடத்தப்படுகிறது.

அப்படியாப்பட்ட பூரம் விழா பற்றி மட்டும் இன்றி, அவ்விழாவில் பங்குபெறும் யானைகள், அங்கு நிகழும் வாண வேடிக்கைகள், இசைக் கலைஞர்களின் வாழ்க்கை என்று அனைத்து தகவல்கள் பற்றியும் படம் விளக்கமாக விவரிக்கிறது.ராகுல் ராஜின் இசையில் பாடலும், ஷரத்தின் பின்னணி இசையும் சுமார் ரகம் என்றாலும், பூரம் விழாவின் பிரம்மாண்டத்தை தனது பின்னணி இசையின் மூலம் பல இடங்களில் நமக்கு உணர்த்தியிருக்கிறார்.பூரம் விழாவின் தகவல்களை தெளிவாக எடுத்துக்கூறும் இப்படம் காட்சிகளாக விழாவின் பிரம்மாண்டத்தை சரியாக காட்டவில்லை.

பூரம் விழா குறித்து யூ டியூப் சேனல்களில் கூட இதை விட சுவையான தகவல்களும், விஷூவல்களும் உள்ளன, ஆனால் தான் பிறந்த மண்ணில் நடக்கும் பெருமையை முழுமையாக போரடிக்காமல் கொடுத்துள்ளதை பாராட்டியே ஆக வேண்டும்.

மார்க் 3 / 5

error: Content is protected !!